Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``நதிகள் இணைப்புப் பேசுவதைவிட காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினி பேசலாமே"- பூவுலகின் நண்பர்கள்

காலா இசை வெளியிட்டு விழா

ச்ச நீதிமன்றம் கடந்த 2002- ம் ஆண்டில் அளித்த தீர்ப்புப்படி, காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை வழங்க வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.

உண்ணாவிரதத்தின் முடிவில் நதி நீர்ப் பங்கீடு மற்றும் நதிகள் இணைப்பு குறித்த மனுவை அப்போதைய ஆளுநரிடம் ரஜினிகாந்த் அளித்தார். அதன் பின்னர் பேசிய அவர், ``தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்தால் என்னுடைய சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் தருவேன்" என அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட வெறும் வார்த்தைகளாக இருக்கும் நிலையில், மத்தியில் ஏற்கெனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியோ அல்லது தற்போது ஆட்சி செய்துவரும் பாஜகவோ, நதிகள் இணைப்புக்கான எந்த நடவடிக்கையையும் எடுத்தபாடில்லை. 

இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் என்ற சிலர், ரஜினியின் வீட்டின்முன்பு கூடி, ``நதிகள் இணைப்புக்காக அறிவித்த ஒருகோடி ரூபாயைத் தர வேண்டும்" என வலியுறுத்தியதுடன், அந்தக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து  சத்ய நாராயணராவ் "ரஜினி அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார். அந்தத் திட்டம் தொடங்கும்போது, அந்தப் பணம் கிடைக்கும்" என்று தெரிவித்து அந்தப் பிரச்னைக்கு அப்போது முற்றுப்புள்ளி வைத்தார்.

ரஜினி ( நடிகர் )

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியல் களத்திற்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், நதிகள் இணைப்பு குறித்து மீண்டும் அவர் பேசியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது. ரஜினி நடித்து விரைவில் வெளியாக உள்ள ``காலா" திரைப்படப் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ``நதிகள் இணைப்பு என்னுடைய வாழ்வின் ஒரே கனவு. தென்னிந்திய நதிகளை மட்டும் நாம் இணைத்து விட்டோமானால், அதற்கு அடுத்தநாளே என் உயிர் போனாலும் பரவாயில்லை" என்று உணர்ச்சிப் பெருக்கில் குறிப்பிட்டார். 

ரஜினியின் இந்தக் கருத்து அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ``நதிகளை இணைப்பது சாத்தியமா?", ``மக்கள் செல்வாக்கைப் பெறுவதற்காக ரஜினி இவ்வாறு பேசினாரா?" என்பன போன்ற கேள்விகளைப் பலரும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

நதிகள் இணைப்பு தொடர்பான ரஜினியின் பேச்சு பற்றி `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் பேசினோம். அவர் கூறுகையில்,

``தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டால் மறுநாளே தான் கண்மூடிவிடத் தயாராக இருக்கிறேன் என மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு ரஜினி பேசியுள்ளார். தமிழர்கள் என்றைக்குமே உணர்ச்சிவயப்பட்டவர்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர் அப்படி பேசியுள்ளார். நதிகள் இணைப்பு, தென்னிந்திய நதிகள் இணைப்பு போன்ற திட்டங்கள் சூழலியல் பார்வையில் பெரிய அழிவுகளைக் கொண்டுவரக் கூடியவை. இதனால் பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் கட்டமைப்பு என்பதே மிகவும் சிக்கலானது. இந்தப் பிரச்னையின் அடிப்படை இப்படியிருக்கும்போது, ரஜினி மிகவும் ஈசியாகப் பேசியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சை சூழலியல் பார்வையில் பேசுவதைவிடவும், அரசியல் பார்வையில் அணுகினால், அதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பது மிகத் தெளிவாகப் புரியும். 

சுந்தரராஜன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைப் பெறுவதற்கு நமக்கு உரிமை உள்ளது. அதாவது, நீர்வழிப் பாதைக்கான உரிமையைக் குறிப்பிடுகிறேன். அப்படி உரிமையுள்ள காவிரியை நாற்பது ஆண்டுகள் போராடியும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், கர்நாடக அரசு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது. உரிமை உள்ள காவிரியிலேயே நீரைப் பெற முடியாத சூழ்நிலையில், உரிமையே இல்லாத கோதாவரியிலோ அல்லது வேறு நதிகளிலோ இருந்து, அவற்றை இணைப்பதன் மூலம் நாம் எவ்வாறு நீரைப்பெற முடியும்? 

`தமிழகத்துக்குக் கோதாவரி நதியிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவோம்' எனக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது ரஜினி பேசியுள்ளார். இதைப் பார்க்கும்போது, மத்திய அரசின் குரலாகவே ரஜினி பேசியுள்ளார். அதுதான் உண்மை. நதிகள் இணைப்பை வலியுறுத்தும் ரஜினியிடம் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். `கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி போன்ற நதிகளை இணைத்து, அந்த ஆறுகளிலிருந்து தமிழகத்துக்கு நீரைக் கொண்டுவருவதற்கு, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா எனப் பல மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். அது சாத்தியமா? ஒருவேளை இந்த மாநிலங்கள் அனைத்தையும் சம்மதிக்க வைக்கக்கூடிய `அதிகாரம்' உங்களுக்கு இருக்கிறது என நீங்கள் நம்பினால், அந்த அதிகாரத்தை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகப் பயன்படுத்துங்கள். அதுபோன்றதோர் அணுகுமுறை இல்லாமல் நதிகள் இணைப்புப் பற்றிப் பேசுவது சரியா? எனவே, ரஜினி விரித்துள்ள மாய வலைக்குள் தமிழக மக்கள் சிக்கி விடக் கூடாது என்பதே தற்போதைய கவலையாக உள்ளது.

மேலும் நதிகளை இணைக்க வேண்டும் என்ற ரஜினியின் குரல் தமிழகத்தில் மட்டுமே ஒலிக்கிறது. அது யாருடைய குரல்? உரிமை உள்ள காவிரிக்காகப் போராட வேண்டாம் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரா ரஜினி? உரிமையில்லாத கோதாவரியைப் பெற்றுத் தருகிறேன் என்று ஒலிக்கிறதே அது ஏன்? இதுபோன்ற பேச்சின் மூலம் காவிரி வராது என்கிறீர்களா? அல்லது வரவே கூடாது என நினைக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement