தமிழக டிஃபென்ஸ் காரிடர்... ஏன், எதற்கு, எப்படி? #DefenceCorridor பகுதி 2 | Story of tamilnadu defence corridor project - part 2

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (12/05/2018)

கடைசி தொடர்பு:11:58 (12/05/2018)

தமிழக டிஃபென்ஸ் காரிடர்... ஏன், எதற்கு, எப்படி? #DefenceCorridor பகுதி 2

டிஃபென்ஸ் காரிடர் திட்டத்தால் நன்மையடையப் போவது யார்?

தமிழக டிஃபென்ஸ் காரிடர்... ஏன், எதற்கு, எப்படி? #DefenceCorridor பகுதி 2

முந்தைய பகுதி: டிஃபென்ஸ் காரிடர் தமிழகம் வந்த கதை! - பகுதி 1

இந்தியாவில் டிஃபென்ஸ் காரிடர் அமைப்பதற்கு தகுதியான மாநிலங்கள் என 8 மாநிலங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் முதலில் தேர்வான மாநிலம்தான் தமிழகம். அடுத்தது உத்தரப்பிரதேசம். இந்தியாவில் முதல்முறையாக அமையவிருக்கும் இந்த டிஃபென்ஸ் காரிடர் தமிழகத்திற்கு வரக்காரணம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, மனிதவளம் என எல்லா ஏரியாவிலும் தமிழகம் சிறப்பாக இருப்பதுதான். மத்திய அரசின் இந்த டிஃபென்ஸ் காரிடர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவும் என்பது நமக்கு இனிதான் தெரியும். ஆனால், தமிழகத்தின் திராவிடக்கட்சிகள் தொழில்வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவியிருக்கின்றன என்பது இதிலிருந்தே தெரியும்!

டிஃபென்ஸ் காரிடர் என்பது என்ன?

டிஃபென்ஸ் காரிடர் என்பது ஏதோ ஓர் அமைப்போ அல்லது தொழிற்சாலையோ கிடையாது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவத்திற்கு உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் ஒன்றிணைந்து, இந்திய ராணுவத்திற்காக கருவிகளை உற்பத்தி செய்யும் ஓர் உற்பத்தி கேந்திரம்தான் டிஃபென்ஸ் காரிடர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய பகுதிகள் இந்த டிஃபென்ஸ் காரிடரில் இடம்பெறவிருக்கின்றன. இத்துடன் பெங்களூரும் இணைந்திருக்கிறது. சென்னை முதல் பெங்களூரு வரைக்கும் என்பதுதான் டிஃபென்ஸ் காரிடரின் ப்ளூ பிரின்ட். இந்த மாவட்டங்களில் அமைந்திருக்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் அனைத்தையும் இந்தியப் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியில் ஈடுபடச்செய்வதுதான் இந்த டிஃபென்ஸ் காரிடரின் நோக்கம். இதற்காக அரசின் சார்பில் தொழில்நுட்ப உதவிகள், உள்கட்டமைப்பு வசதிகள், கருவிகள் தயாரிப்பதற்கான லைசென்ஸ் வழங்குதல் போன்ற உதவிகள் அனைத்தும் செய்யப்படும். இந்த மாவட்டங்களைத் தேர்வு செய்யக்காரணம், இங்கெல்லாம் தொழில்வளர்ச்சி அதிகம் இருப்பது மட்டுமல்ல; இந்த மாவட்டங்களுக்கு அருகிலேயே இந்திய ராணுவத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கிவருவதும்தான். 

தமிழகத்தில் டிஃபென்ஸ் காரிடர்கள் அமையும் இடங்கள்

உள்நாட்டில் தயாராகும் தளவாடங்கள்

இப்போதைக்கு உலகளவில் அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களில் சுமார் 70 சதவிகிதத்திற்கும் மேல் இப்படி இறக்குமதி செய்யப்படுபவைதாம். இறக்குமதியைக் குறைப்பதும், உள்நாட்டிலேயே சொந்தத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதும்தான் இந்த டிஃபென்ஸ் காரிடர்களின் அசைன்மென்ட். அக்னி, ஆகாஷ், பிருத்வி ஏவுகணைகள், அர்ஜூன் டாங்க்குகள், சுகோய் மற்றும் தேஜாஸ் விமானங்கள் என ஏற்கெனவே சில உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆவடி டாங்கி தொழிற்சாலை மற்றும் ஆடை உற்பத்தியகம், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை என ஏற்கெனவே பாதுகாப்புத்துறைக்கு இங்கிருக்கும் சில பொதுத்துறை நிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றைச் சார்ந்து நிறைய சிறு,குறு நிறுவனங்களும் இந்தப் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்து இயங்கிவருகின்றன. இவைதவிர சில தனியார் நிறுவனங்களும் ராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரித்து வருகின்றன.

தற்போது இந்த எண்ணிக்கையை மொத்தமாக உயர்த்த வேண்டுமென்றால் தற்போது இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளும், நிறுவனங்களும் மட்டுமே போதாது. பொதுத்துறை நிறுவனங்களுக்குக் கருவிகளை வழங்கும் சிறு, குறு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு, புதிய நிறுவனங்களும், ஸ்டார்ட்அப்களும் உள்ளே வரவேண்டும்; அவர்களது தொழில்நுட்பங்களை சோதனை செய்வதற்கான, உருவாக்குவதற்கான உள்கட்டமைப்புகள் வேண்டும்.

Defexpo 2018

2001-ம் ஆண்டிலிருந்தே தனியார் நிறுவனங்கள் இந்திய ராணுவத்திற்கு கருவிகளை உற்பத்தி செய்துவருகின்றன. இருந்தும்கூட இந்திய இராணுவத்தின் கொள்முதல் அதிகளவில் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், தற்போது புதிய தொழில்நுட்பங்களும், புதிய நிறுவனங்களும் உடனே இங்கே வரவேண்டுமென்றால் அந்நிய முதலீடு வரவேண்டும்; நிறுவனங்களை தொடங்குவதற்கும், ஆர்டர்கள் பெறுவதற்கும் அரசாங்க முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும்; இத்தனை சவால்கள் இருந்தாலும், இந்த அத்தனை விஷயங்களுக்கும் நாங்கள் பொறுப்பு என்கிறது பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

இந்திய ராணுவத்தின் சாகசம்

சரி, இதனால் தமிழகத்திற்கு என்னவெல்லாம் நன்மை? தமிழக தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத்திடமே கேட்டோம். ``டிஃபென்ஸ் காரிடர் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இரண்டு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழகம் ஏற்கெனவே ராணுவத்திற்கு தேவையான உதிரிபாகங்களை பல ஆண்டுகளாகத் தயாரித்து வருகிறது. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்தும் வருகிறது. வெளிநாடுகளில் தயாரிக்கும் அதே தரத்திலான உதிரிபாகங்கள்தாம் இங்கும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இந்தத் திட்டத்தின் மூலமாக ராணுவத்திற்கு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில் தமிழகம் இன்னும் கூடுதல் பங்கு வகிக்கும். இங்கே இருக்கும் பொறியியல் மாணவர்கள் பலருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தின் தொழில்துறையில் முதலீடும் பெருகும். 

எம்.சி.சம்பத்இந்த டிஃபென்ஸ் காரிடருக்கான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்காக மாநில அரசும் தயாராக இருக்கிறது. அவர்களுக்கான நிலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக நாங்கள் அனைத்து வகையிலும் உதவுவோம். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே தமிழ்நாடு வர்த்தகத் தொழில் எளிதாக்குதல் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்தியிருக்கிறது. இதில் மொத்தம் 11 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி புதிதாகத் தொழில் தொடங்குபவர்களின் விண்ணப்பம் ஒற்றைச்சாளர முறையில்,  30 நாள்களுக்குள் பரிசிலீக்கப்பட்டுவிடும். இதனால் புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் மிக எளிதாக முதலீடு செய்யலாம். இந்த வசதி டிஃபென்ஸ் காரிடருக்கு மேலும் உதவும். இந்த டிஃபென்ஸ் காரிடர் பணிகள் முழுமையடைவதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். மொத்தமாக தமிழகத்திற்கு இதன்மூலம் எவ்வளவு முதலீடு வரும், எத்தனை நிறுவனங்கள் வரும் என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. இன்னும் சில மாதங்களுக்குள் முதலீட்டாளர்களை, தொழில்நிறுவனங்களை எல்லாம் அழைத்துப் பேசவிருக்கிறோம். அதன்பிறகே தெரியவரும்." என்கிறார் எம்.சி.சம்பத்.

புதிய கொள்முதல் திட்டத்திற்கும், டிஃபென்ஸ் காரிடருக்கும் தொழில்துறையினர் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது? 

``டிஃபென்ஸ் காரிடருக்கான பணிகள் அனைத்தும் தற்போது தொடக்க நிலையில் மட்டுதான் இருக்கின்றன. எப்படியும் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருடமாவது ஆகும். திட்டத்தைப் பொறுத்தவரைக்கும் இது நல்ல திட்டம்தான்.

பாபுசுயதொழில்முனைவோருக்கும், சிறுகுறு தொழில்நிறுவனங்களுக்கும் இது நிச்சயம் உதவும். குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், இந்தத் திட்டத்தை எப்படி அமல்படுத்தப்போகிறார்கள், அதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்களை எப்படிக் கையாளப்போகிறார்கள் என்பதையெல்லாம் பொறுத்துதான் எந்தளவுக்கு நன்மையளிக்கும் எனக் கூற முடியும். உதாரணத்திற்கு Credit Guarantee Fund Trust திட்டம் என ஒன்று இருக்கிறது. அதன்படி MSME தொழில்முனைவோருக்கு கொலாட்டரல் இல்லாமல் இரண்டு கோடி வரை கடன் தரலாம். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்று எத்தனை வங்கிகள் இப்படி கொலாட்டரல் இல்லாமல் கடன் தருகின்றன? காரணம், இதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்கள்தாம்.

தமிழகத்தில் சென்னையிலேயே ஏராளமான சிறுகுறு தொழில்நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் எத்தனை நிறுவனங்கள் இதுவரைக்கும் பாதுகாப்புத்துறைக்கு உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன? காரணம், ஆர்டரின் அளவும், அரசின் ஒத்துழைப்பும் குறைவாக இருப்பதுதான். சாதாரண உதிரிபாகங்களை தவிர்த்து பாதுகாப்புத்துறைக்காக, தொழில்நிறுவனங்கள் தயாரிக்கும் உதிரிபாகங்களின் தன்மை முற்றிலும் வேறானது. அவற்றை தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதிகளவில் ஆர்டர் கொடுத்தால்தான் சாத்தியம். ஆனால், மிகக்குறைந்த அளவில்தான் தொழில்நிறுவனங்களுக்கு ஆர்டரே கிடைக்கும். இப்படியிருந்தால் எப்படிச் சிறுநிறுவனங்கள் தொடர்ந்து அவர்களுக்கு உற்பத்தி செய்யமுடியும்? இந்த ஆர்டரின் அளவை அதிகப்படுத்தினாலே நிறையப் பிரச்னைகள் சரியாகும். இல்லையெனில் தொடர்ந்து பெரிய நிறுவனங்கள் மட்டும்தாம் ஆர்டர் எடுக்க முடியும். இதையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால் அரசு, சிறுகுறு தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதர வேண்டும். அதன்பிறகுதான் இது பலனளிக்குமா இல்லையா என்பது தெரியும்." என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுதொழில் சங்கத்தின் தலைவர் பாபு.

Indian Army Tank

கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரத்திடம் இதுகுறித்து கேட்டபோது, ``டிஃபென்ஸ் காரிடர் இங்கே அமைவதன் மூலமாக இந்தப் பகுதிகளில் புதிய நிறுவனங்களும், முதலீடுகளும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கோவை, திருச்சி, ஓசூர், சென்னை, சேலம் ஆகிய பகுதிகளைச் சுற்றியிருக்கிற பொதுத்துறை நிறுவனங்களும் இந்தப் பகுதிகளில் இருக்கும் பிற நிறுவனங்களிடம் இருந்தே உதிரிபாகங்களை கொள்முதல் செய்யவும் முடியும். 

இந்தியாவில் சுமார் 70 சதவிகித தளவாடங்கள் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெறும் 30 சதவிகிதம்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்த 30 சதவிகிதத்தில் 12 சதவிகித நிறுவனங்கள் மட்டும்தாம் MSME-க்கள். மீதி 18 சதவிகிதம் அரசின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அரசின் நோக்கம், MSME-க்களின் உற்பத்தியைப் பெருக்குவதுதான். இதில் 4 சதவிகிதம் MSME-க்களின் பங்கு உயர்ந்தாலே நிறைய முதலீடு இங்கே வரும். அதுவே எங்களுக்குப் பெரிய நன்மையாக இருக்கும். சுந்தரம்

ஆனால், இதெல்லாம் இப்போதே நம்மால் சொல்லமுடியாது. அரசு டிஃபென்ஸ் காரிடருக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்தபின்னர்தான் கூறமுடியும். இந்த அறிக்கையைத் தயார் செய்வதற்காக, தனி ஆலோசகர்களை அமைத்துள்ளதாக டிபெக்ஸ்போவிலேயே கூறினார்கள். அதன்படி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று டிஃபென்ஸ் காரிடருக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்வார்கள். எந்த மாவட்டத்தில் எந்த மாதிரியான பாகங்களை தயார் செய்யலாம், அந்த மாவட்டத்தின் பலம் என்ன போன்றவற்றையெல்லாம் ஆராய்வது, அந்தப் பகுதிகளில் இருக்கும் ராணுவத்திற்காக உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களைக் கலந்தாலோசிப்பது போன்ற பணிகளையெல்லாம் முடித்து பின்னர் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். அந்த அறிக்கை வந்தபின்னர்தான் இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும்." என்கிறார் கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம்.

டிஃபென்ஸ் காரிடர் திட்டம்

திட்டங்களைக் காகிதத்தில் மட்டும் எழுதிவைத்துவிட்டு, பின்னர் அவற்றைக் காற்றில் பறக்கவிடுவதும் நம் அரசாங்கங்களுக்கு புதிதல்ல; அப்படி மற்றுமொரு திட்டமாக இதனை மாற்றாமல், கூடுதல் கவனத்துடன் இதனைச் செயல்படுத்தினால் தமிழகம் மட்டுமன்றி, இந்திய ராணுவமும் இதனால் நிச்சயம் பயன்பெறும். 


உத்தரப்பிரதேசத்தின் டிஃபென்ஸ் காரிடர்

தமிழகத்தைப் போலவே உத்தரப்பிரதேசத்திலும் டிஃபென்ஸ் காரிடருக்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அங்கே ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய பகுதிகள் டிஃபென்ஸ் காரிடரில் இடம்பெறுகின்றன. இதுகுறித்து உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மோடி, இந்த டிஃபென்ஸ் காரிடரின் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 20,000 கோடி ரூபாய் முதலீடும், 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close