பெற்றோர்கள் கவனத்துக்கு... இவையே கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவிகித இடஒதுக்கீட்டு விதிகள்! | Rules and regulations of Right to education act admissions

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (12/05/2018)

கடைசி தொடர்பு:16:39 (12/05/2018)

பெற்றோர்கள் கவனத்துக்கு... இவையே கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவிகித இடஒதுக்கீட்டு விதிகள்!

மாணவர்கள் பள்ளிக் கல்வி

நாடு முழுவதும் நலிவடைந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக மத்திய அரசு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவிகித இடங்களைக் கட்டணம் இல்லாமல் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கும் நடைமுறை அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

2013- ம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதிலும் தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவிகித இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இப்படியான நிலையில் 2018-19 - ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது 

கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், ``அரசின் வழிகாட்டுதலோடு 2013-14- ம் கல்வியாண்டு முதல், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2013- ம் ஆண்டு முதல் 2015- ம் ஆண்டுவரை, தமிழக அரசு இந்தத் திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது .

விண்ணப்ப பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் கவனிக்க!

"1. 2018-19- ம் கல்வியாண்டிற்கான சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக் / மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவுநிலை வகுப்பில் 25 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். 

2. இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தவாறே விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதற்கான குறுஞ்செய்தி விண்ணப்பதாரரின் செல்போனுக்கு வந்து சேரும்.

3. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர் / மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

4. மேலும் தமிழக அரசு சார்பில் செயல்படும் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

5. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதரத் துறையினரும் கண்காணிப்பார்கள். 

6. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ்க்கண்ட முறையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆதரவற்றோர் / எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர்/  துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளிகள் ஆகியோரிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.  

7. தனியார் சுயநிதிப் பள்ளிகளின் பட்டியல் மற்றும் அப்பள்ளிகளில் 25 சதவிகிதஇடஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். 

8. இந்த ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய முகவரி மற்றும் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, அடையாளச் சான்று, புகைப்படங்கள் போன்றவற்றை முறையாகச் சமர்பிக்க வேண்டும். மேலும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

9. ஏப்ரல் 20 - ம் தேதியிலிருந்து மே 18- ம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது 


டிரெண்டிங் @ விகடன்