"தென்னிந்தியாவில் கால்பதிப்பதற்கு வாழ்த்துகள்!" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம் | significant victory of BJP in Karnataka Assembly Elections, a grand entry to South India.

வெளியிடப்பட்ட நேரம்: 21:07 (15/05/2018)

கடைசி தொடர்பு:21:07 (15/05/2018)

"தென்னிந்தியாவில் கால்பதிப்பதற்கு வாழ்த்துகள்!" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்

ஓ பி எஸ்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 15 ம் தேதியான இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் அதிக இடங்களில் பி.ஜே.பி முன்னிலை வகித்தது. அதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சியும் மூன்றாவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வந்தன. இதில், மதியம் 2 மணி அளவில் பி.ஜே.பி 105 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 75 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும் ஓட்டுப் பதிவு அன்று எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு என்று பெரும்பாலான ஊடகங்கள் எழுதின. இதற்கு அடுத்து பி.ஜே.பி-யும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பெருவாரியான இடங்களைப் பிடிக்கும் என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போக்கு பி.ஜே.பி-க்கு ஆதரவாக இருப்பதுபோலவே மதியம் வரை டிரெண்ட் இருந்தது.

எனவே, ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்களில் தனிப்பெரும்பான்மையாக பி.ஜே.பி ஜெயித்து விடும் என்று கர்நாடக பி.ஜே.பி தலைவர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ``பி.ஜே.பி ஆட்சி அமைக்கும்'' என்று பேட்டி ஒன்றில் உற்சாகமாகச் சொன்னார். டெல்லி சென்று பிரதமர் மோடி, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கப்போவதாக முதல்வர் வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்த எடியூரப்பாவும் உற்சாகமாகப் பேசினார். அகில இந்திய அளவிலும் இதே போன்ற பேச்சுகள்தாம் நிலவின. அதே உற்சாகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்னார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பிரதமர் மோடிக்கும் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா-வுக்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதில், 'இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற பி.ஜே.பி-க்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி தென்னிந்தியாவில் பி.ஜே.பி பிரமாண்டமாக நுழைவதற்குக் காரணமாக அமையும்' என்று சொல்லியிருந்தார். 

ops letter

இப்படி,  ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து சொல்லியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வை பி.ஜே.பி-யின் அடிவருடி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், பி.ஜே.பி வெற்றியைப் பாராட்டியதோடு நிறுத்துக்கொள்ளாமல் தமிழகத்துக்குள் வாருங்கள் என்று வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பது போல ஓ.பி.எஸ் வாழ்த்துச்செய்தி இருக்கிறது என்று எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா விசுவாசிகள் நொந்துபோயிருக்கிறார்கள். 

வாக்கு எண்ணிக்கை முடிவில், கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பி.ஜே.பி 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி என்று மாலை 6 மணிக்கு செய்தி வெளியானது. காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பி.ஜே.பி தனக்குத்தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள். எனவே, இப்போது கர்நாடகத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என்பது அந்த மாநிலத்தின் ஆளுநர் கையில்தான் உள்ளது. எனவே, கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது இப்போது தொடங்கியிருக்கும் குதிரை பேர வேலைகள் முடிந்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வரும் என்று கர்நாடக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close