வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (25/05/2018)

கடைசி தொடர்பு:11:20 (25/05/2018)

நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் - இந்திய கம்யூ.!

குமாரசாமி பதவியேற்பு - இந்திய கம்யூ. டி. ராஜா

ந்திய அரசியல் சட்டத்தையும், இந்திய நாட்டையும் காப்பாற்ற மதச்சார்பற்ற சக்திகள், கட்சிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட வேண்டிய வரலாற்றுத் தேவை ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து, பி.ஜே.பி-யின் நாடகம் அரங்கேற முடியாமல், அங்கு காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமியும், துணை முதல்வராக ஜி. பரமேஸ்வராவும் பெங்களூரில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றனர்.

இந்த விழாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஒரு மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் இத்தனை கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டது, அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிகள் அனைத்தும் அமைக்கவுள்ள கூட்டணிக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. 

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங், லோக் தந்த்ரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``இப்போதைய அரசியல் சூழலை இரண்டு நிலைகளில் பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றிடமிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய ஜனநாயகம், இதுவரையில் நாம் கட்டிக்காப்பாற்றி வரும் ஜனநாயக நெறிகள், ஒட்டுமொத்தமான நம் இந்திய நாடு அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 

டி.ராஜா - இந்தியக் கம்யூனிஸ்ட்கடந்த நான்கு ஆண்டுகால மோடியின் ஆட்சியில் நாடு முழுவதும் ஒரு கலவரச் சூழல்தான் இருக்கிறது. இந்த மாதிரியான சூழலில் அரசியல் சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதற்கும் ஒரு விரிந்த, பரந்த வெகுமக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக, எல்லா மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள், சக்திகள் இடதுசாரிக் கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது.

காங்கிரஸ் தலைமையா, யாருடைய தலைமை என்பதெல்லாம் இப்போது எழவில்லை. தேர்தல் என்று வரும்போது, மாநிலத்துக்கு மாநிலம் சில வேறுபாடுகள் உள்ளன. என்றாலும் தலையாய நோக்கம் என்று எடுத்துக்கொண்டால், பி.ஜே,.பி-யை எவ்வாறு முறியடிப்பது என்பதுதான். அந்த அடிப்படையில் எல்லாக் கட்சிகளின் ஒன்றுபட்ட செயல்பாடு தேவைப்படுகிறது. தேர்தல் வரும்போது, அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை எடுக்கும். அப்போது, தேர்தல் யுக்திகள் உருவாக்கப்படும். எல்லாக் கட்சிகளுமே ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. 

நம்முடைய அரசியல் வரலாற்றில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. 1996-ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தபோது, ஜோதிபாசு பிரதமர் பதவியை மறுத்துவிட்டதால், தேவ கவுடா பிரதமராகப் பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி அப்போது வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. வழிகாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது அரசின்போது, இடதுசாரிகள் 61 எம்.பி-க்களைக் கொண்டிருந்தன. ஆனாலும் வெளியிலிருந்து ஆதரவு அளித்து, பல்வேறு கொள்கைகளைக் கொண்டுவரப் பாடுபட்டோம். அப்போதும் ஒருங்கிணைப்புக் குழு ஒன்று இருந்தது. எனவே, எதிர்காலத்தில் சூழலைப் பொறுத்து முடிவெடுப்போம். பி.ஜே.பி. எதிர்ப்பு நிலைப்பாட்டில் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட வேண்டும் என்பதே இப்போதைய நிலைப்பாடு" என்றார். 

சி.மகேந்திரன் - இந்தியக் கம்யூனிஸ்ட்இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் பி.ஜே.பி. அரசை வீழ்த்த மாநிலக் கட்சிகளும், தேசிய அளவிலான கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன். 

``கூட்டணி என்பதே ஒரு சூழலைப் பொறுத்தது. அதுவே எல்லாவற்றையும் மாற்றக்கூடியது. ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. இன்றைய காலத்துக்கு உள்ள அரசியல் என்பது, பாரதிய ஜனதா கட்சியின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் இந்திய மரபுக்கு எதிராக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மையமாகக் கொண்ட இந்த ஆட்சியை எதிர்க்கக்கூடிய அரசியல் எனலாம். அப்படி ஏற்பட்டுள்ள இன்றைய அரசியல் சூழலில் எல்லோரும் ஒன்றிணைவது என்பதும், ஒரு விரிந்த அணி அமைந்து பாரதிய ஜனதாவுக்கு எதிராகப் போராடுவது என்பதும் தவிர்க்க முடியாதது. அதனால் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே ஒன்று சேர்ந்து பி.ஜே.பி-யை எதிர்க்கக்கூடிய ஒரு நிலைமைதான் எதிர்காலத்தில் உருவாகும். 

பி.ஜே.பி-யின் கொள்கைகள் அனைத்தும் ஒரு ஒற்றைத் தன்மை என்பதோடு மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே விரோதமாகச் சென்று கொண்டிருக்கிறது. இப்போதைய நிலைப்பாடு என்பது பி.ஜே.பி-யை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்கிற ஒரே பார்வையில்தான் இருக்கும். அதை நோக்கியே எல்லாக் கட்சிகளும் செயல்பட முடியும்.

தேசிய அளவில் காங்கிரஸ் தலைமை என்பதை விடவும், கூட்டுத் தலைமை என்று எடுத்துக் கொள்ளலாம். பெரிய கட்சி என்ற அடிப்படையிலும் தவிர்க்க முடியாத சூழலிலும் காங்கிரஸ் தலைமை தாங்க வேண்டி வரலாம். ஆனால், எல்லாவற்றையும்விட ஒன்றுபட்டால்தான் பி.ஜே.பி-யை வீழ்த்த முடியும் என்பதால், தேசிய அளவிலான கட்சிகள் ஒன்றுபட வேண்டியது அவசியம்" என்றார் சி. மகேந்திரன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்