வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (03/06/2018)

கடைசி தொடர்பு:21:47 (03/06/2018)

''காவிரி விவசாயிகளைப் பி.ஜே.பி அரசு ஏமாற்றுகிறதா..?'' எச்சரிக்கும் தலைவர்கள்

 

காவிரி

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க  வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, 104 நாட்களுக்குப் பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் அரசிதழினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த இறுதித்தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை அளிக்க, தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாயிகள் அமைப்புகளும், பொதுமக்களும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தின. அ.தி.மு.க தரப்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். ராணுவத் தளவாடக் கண்காட்சியைத் திறந்துவைக்க பிரதமர் மோடி சென்னை வந்தபோது, தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இப்படி, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான், கடந்த 18.5.2018 அன்று உச்ச நீதிமன்றத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, ஜூன் 1- ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், இறுதி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று  மட்டுமே இப்போது அரசிதழில் வெளியாகியிருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் ஒதுக்கீடு விவரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அந்தத் திருத்தப்பட்ட இறுதித்தீர்ப்பின் நீர் பங்கீட்டு அளவுகள், மத்திய அரசின், இந்த அரசிதழிலும் இடம்பெறவில்லை. இதுகுறித்து, அரசியல் கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளன. மேலும், இப்போது வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பு, தமிழக நலனுக்கு எதிராக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்

இதுகுறித்து, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ``காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களில் 5 பேர், அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்திய அரசைச் சார்ந்தவர்கள் என்பதால், ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு உறுதி செய்யப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் வரைவுத்திட்டத்திலோ, ஆணையம் அமைக்கும் அரசிதழிலோ இடம்பெறவில்லை. அவர்கள், மத்திய பி.ஜே.பி. அரசின் எண்ணத்தைத்தான் செயல்படுத்துவார்கள் என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது. ஆகவே, மத்திய பி.ஜே.பி. அரசு ஏதோ உள்நோக்கத்துடன் இன்னும் தெளிவின்மையையும், குழப்பத்தையும், தாமதத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களின் மனதில் எழுகிறது.

எனவே, தலைவர், உறுப்பினர்கள் கொண்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைகளை அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, சுதந்திரமான தன்னாட்சி அதிகாரங்கள் இருக்கும் அளவுக்கு விரிவான விதிமுறைகள் உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலான நீர்ப்பங்கீடுகள் குறித்து ஓர் அரசிதழ் வெளியிட வேண்டும். இப்போதாவது, அதற்கான முழுமூச்சிலான நடவடிக்கைகளில், பி.ஜே.பி. அரசிடம் கைகட்டிச் சேவகம் செய்வதை மறந்து, தன்மானத்தோடு தலைநிமிர்ந்து, அ.தி.மு.க அரசு உடனடியாக ஈடுபட்டு, ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்துக்கு மேட்டூர் அணையைத் திறப்பதை உறுதிசெய்ய வேண்டும்''  என்று வலியுறுத்தி உள்ளார்.

மணியரசன்

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், ``நடுவண் நீர்வளத் துறையின் முழுநேர அதிகாரியாக இருக்கும் யு.பி. சிங்-குக்கு, கூடுதல் பொறுப்பாகக் காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர்வளத் துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்? அடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத் துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில்? சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்?

தமிழ்நாடு அரசு, இந்தத் தற்காலிக பணி அமர்த்தியதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. மோடி அரசு, யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அமர்த்த வேண்டும்.  தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும்'' என்றார்.

ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி மேலாண்மை ஆணையம் முறையாகச் செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைத்திருந்தால் மத்திய நீர்வளத் துறையில் பணியாற்றும் நீர்ப்பாசன வல்லுநர் ஒருவரைத் தற்காலிகத் தலைவராக நியமித்திருக்கலாம். மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமிப்பதற்கும்,  இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை நியமிப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தின் நீர்தேவை குறித்தும், இடர்ப்பாட்டுக் காலத்தில் எந்தெந்த மாநிலத்துக்கு எவ்வளவு தண்ணீரை வழங்கலாம் என்பது குறித்தும் நீர்ப்பாசன வல்லுநர்களால்தான் தீர்மானிக்க முடியும். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளால் முடியாது.

காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம்  ஒரு தலைவரையும், முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேரையும் கொண்டிருக்கும். இவர்களில் 8 பேர் நீர்ப்பாசனத் துறை வல்லுநர்களாகவும், ஒருவர் வேளாண் மற்றும் பொருளாதார வல்லுநராகவும் இருப்பார்கள் என்பதுதான் அந்த அமைப்பின் சிறப்பாகும். ஆனால், இப்போது மத்திய அரசு அமைக்கவுள்ள மேலாண்மை ஆணையம் ஒரே ஒரு நீர்ப்பாசன வல்லுநரையும், 8 நிர்வாக அதிகாரிகளையும் கொண்டிருக்கும். 8 நிர்வாக அதிகாரிகளில் குறைந்தது 5 பேர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக இருப்பர். இதன்மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முழுக்க முழுக்க நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பால் மாநிலங்களின் நீர்ப்பாசனத் தேவைகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமிஅதுமட்டுமின்றி, நீர்ப்பகிர்வு சார்ந்த சிக்கல்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும்கூட, அதன் தீர்ப்பை ஏதேனும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதுபற்றி மத்திய அரசிடம் முறையிட்டு உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே காவிரி மேலாண்மை ஆணையம் பல் இல்லாத அமைப்பு என்பது தெளிவாகிவிட்டது. இனிவரும் காலங்களில் ஆணையம் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளாது. அதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட்டாலும் கர்நாடகத்துக்கு எதிராக மத்திய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்பதால் காவிரிப் பிரச்னை 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைத்து அதனை மத்திய அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. இது, தமிழக அரசுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின்  வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வதுபோல இது மாபெரும் வெற்றியா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்