வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (04/06/2018)

கடைசி தொடர்பு:10:41 (04/06/2018)

கோவை மாநகராட்சியில் நடக்கும் டீசல் முறைகேடு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஒரு புறமிருக்க, மறுபக்கம் அதிகாரிகள் கல்லா மேல் கல்லா கட்டி வருகின்றனர். அதில், நீண்ட நாள்களாக தொடர்வது டீசலில் நடக்கும் திருட்டு. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மத்திய மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளுக்கு, தூய்மை பணிகளுக்காக ஜே.சி.பி 1, பாய்ன்ட் 3 ரக வாகனங்கள் 3, பாய்ன்ட் 5 ரக வாகனங்கள் 12, ஒரு டன் வாகனங்கள் 9, டாடா ஏசி 14 என 43 வாகனங்கள் உள்ளன. பொதுவாக, நிரந்தரப் பணியாளர்கள் 2 டன் வாகனங்களைத்தான் ஓட்டுவார்கள். மீதம் இருக்கும் வாகனங்களை ஒப்பந்தப் பணியாளர்கள் இயக்குவார்கள்.

கோவை மாநகராட்சியில் நடக்கும் டீசல் முறைகேடு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஒருபுறம் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் அதிகாரிகள் கல்லா மேல் கல்லா கட்டி வருகின்றனர். அதில், நீண்டநாள்களாகத் தொடர்வது டீசலில் நடக்கும் திருட்டு. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. இவற்றில், தூய்மைப் பணிகளுக்காகச் சுமார் 250 வாகனங்கள் உள்ளன. இதில், மத்திய மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளின், தூய்மைப் பணிகளுக்காக மட்டும் ஜே.சி.பி 1, பாய்ன்ட் மூன்றுரக வாகனங்கள் 3, பாய்ன்ட் 5 ரக வாகனங்கள் 12, ஒரு டன் வாகனங்கள் 9, டாடா ஏசி 14 என 43 வாகனங்கள் உள்ளன. பொதுவாக, நிரந்தரப் பணியாளர்கள் 2 டன் வாகனங்களைத்தான் ஓட்டுவார்கள். மீதமிருக்கும் வாகனங்களை ஒப்பந்தப் பணியாளர்கள் இயக்குவார்கள்.

கோவை மாநகராட்சி

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம், ``ஒப்பந்தப் பணியாளர்கள், பணியில் சேரும்போது அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வைக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம். எனவே, இவர்கள் இருவரும் லாபம் பார்ப்பதற்காகத்தான் டீசலில் கை வைப்பார்கள். பாய்ன்ட் 3, பாய்ன்ட் 5 போன்ற பெரிய வாகனங்களுக்கு முன்பு 50 லிட்டர் டீசல் தந்தனர். ஒருநாளைக்கு, அதிகபட்சமாக இந்த வண்டிகள் 50 கி.மீதான் ஓடும். அதன்படி பார்த்தால், ஒருநாளைக்கு 10 லிட்டர்தான் செலவாகும். மீதம் உள்ள 40 லிட்டரை இவர்கள் திருடிவிடுவார்கள். இவற்றில், பாதி சம்பந்தப்பட்ட வண்டி டிரைவர்களுக்கும், பாதி அதிகாரிகளுக்கும் சென்றுவிடும்.

இந்தக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகளுக்கும் ஷேரிங் உண்டு. ரெகுலராக வருவதால்,ஒரு லிட்டர் டீசல் விலையில் இருந்து, 25 ரூபாய் குறைத்து பெட்ரோல் பங்க்காரர்கள் உதவி செய்வார்கள். இப்படி முக்கோண அடிப்படையில் ஷேரிங் பிரியும். இந்த வாகனங்களில் தற்போது,  ஜி.பி.எஸ் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆனால், வண்டியின் டேஷ்போர்டு அருகிலேயே ஒரு துளை இருக்கும். அதன்மூலம், கி.மீட்டரை அட்ஜெஸ்ட் செய்துகொள்வார்கள்.

இப்படி ஒரு மாதத்தில் மட்டும் பெரிய வண்டிகளுக்கு 87,000 ரூபாய், சிறிய வண்டிகளுக்கு 21,000 ரூபாய் என 1,08,000 ரூபாய் அதிகாரிகளுக்குச் செல்லும். இதனால், பெரிய வாகனங்களுக்கு 25,200 லிட்டர் டீசலும், சிறிய வாகனங்களுக்கு 3,780 லிட்டர் டீசலும் என கோவை மாநகராட்சிக்கு மாதத்துக்கு 14,81,400 ரூபாய் நஷ்டம் ஏற்படும். கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களையும் சேர்த்து சுமார் 250 வாகனங்கள் உள்ளன. இந்த அனைத்து வாகனங்களிலும், டீசல் கொள்ளை அமோகமாக நடந்துவருகிறது.

பெரிய வாகனம்

தற்போது, இந்த வாகனங்களுக்கு டீசல் கொடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. பெரிய வாகனங்களுக்கு 25 லிட்டரும், சிறிய வாகனங்களுக்கு 5 லிட்டரும் கொடுக்கிறார்கள். ஆனால், அதிலும், பெரிய வாகனங்களில் 15 லிட்டர் டீசலையும், சிறிய வாகனங்களில் 3 லிட்டர் டீசலையும் கொள்ளையடிக்கிறார்கள். அளவு குறைக்கப்பட்டது. ஆனால், கொள்ளையடிப்பதை நிறுத்துவதில்லை. இதுதவிர கொசு மருந்து அடிப்பதற்காக, ஒரு வார்டுக்கு 9 லிட்டர் டீசலும், 2 லிட்டர் பெட்ரோலும் கொடுப்பார்கள். மத்திய மண்டலத்தில் மட்டும், கொசு மருந்து அடிக்கும் வாகனங்களில், மாதத்துக்கு 5,400 லிட்டர் டீசலும், 1,200 லிட்டர் பெட்ரோலும் கொள்ளையடிப்பார்கள். இது நிரந்தரப் பணியாளர்கள் சம்பாதிக்கும் விதம்.

இதில், மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து வாகனங்களும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில்தான் டீசல் நிரப்புவார்கள். அதிகாரிகளின் உறவினர்கள்தான் பல இடங்களில் டெண்டர் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் அட்ராசிட்டியும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வண்டிகளின் அனைத்து சாவிகளும், டெண்டர்காரர்களிடமும் இருக்கும். தற்போது, கவுன்சிலர்களும் இல்லாததால், அதிகாரிகளின் காட்டில் பணம் கொட்டுகிறது” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

சிறிய வாகனம்

இந்த டீசல் கொள்ளையில் மத்திய மண்டல எஸ்.ஓ குணசேகரன், கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்க குணசேகரனைத் தொடர்புகொண்டோம். “அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் இருக்கிறது. அதன்படிதான் ஓட்டுகிறோம். கமிஷனர் சாரிடம் கேட்காமல், மேற்கொண்டு நான் எதுவும் பேச முடியாது” என கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.