ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

``நீட் மரணங்களைத் தடுக்க இதுதான் வழி..!'' ஜெயலலிதா சொன்னதை எடப்பாடி செய்வாரா? 

பிரதிபா சுபஶ்ரீ , நீட் மரணங்கள்

ல வகையான பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள பள்ளிக் கல்வித்திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா! இதில், 'அனைத்துத் தரப்பு மாணவ - மாணவிகளுக்கும் பொதுவானதாக தேசிய அளவில் நீட் என்கிற பொதுத் தகுதித் தேர்வைக் கொண்டு வந்திருப்பது சரியான நடைமுறை இல்லை' என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு நீட் தேர்வு முடிவின் போதும் உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் அனைத்து வசதி வாய்ப்புகளையும் கொண்ட பெற்றோர்களால் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு நீட் தேர்வுக்கு உரிய முறையான பயிற்சி கொடுத்து அத்தேர்வில் அவர்களை உச்சபட்ச மார்க் பெற வைக்க முடிகிறது. இதுவும் ஒவ்வொரு நீட் தேர்வின் முடிவுகளின்போதும் உறுதியாகிக் கொண்டேயிருக்கிறது. இப்படி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் செலவில் மருத்துவம் படிக்க சேர்ந்து விடுகின்றனர். மேலும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் என்று பணத்தைக் கொடுத்து சீட்களைக் கைப்பற்றி விடுகின்றனர். இதுதான், நீட் தேர்வின் யதார்த்த நிலையாக இருக்கிறது.


எஸ்.எஸ்.பாலாஜி இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், ``எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நடக்கும் கட்டணக் கொள்ளையைப் பார்த்தால், ஆரம்பக் கட்டத்திலேயே.. அதாவது நீட் தேர்வுக்கு முன்பே மாணவர்கள் - பெற்றோர்கள் வேறு கோர்ஸ்களுக்குச் சென்றுவிடுவார்கள். அதாவது, குறைந்த செலவில் படிக்க முடியாது என்பதால், முன் கூட்டியே திட்டமிட்டு வேறு படிப்புகளைப் படிக்கத் தெளிவாக முடிவெடுத்து வந்தனர். ஆனால், இப்போது கட்டணக் கொள்ளை தடுக்கப்பட்டுவிட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், தகுதித் தேர்வில் பாஸாக வேண்டும் என்பதற்காக, கையிருப்பில் உள்ள சில லட்சம் ரூபாயை செலவு செய்து நீட் சிறப்புப் பயிற்சி மையங்களில் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். இந்த சிறப்புப் பயிற்சிகளிலும் சி.பி.எஸ்.இ பாடமுறையைப் படித்துவரும் தனியார் பள்ளி மாணவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். இதற்கு அவர்கள் சில லட்சங்களைச் செலவு செய்கிறார்கள். அது ஏழை மாணவர்களால் முடியாது. அப்படியே கிராமப்புறத்தில் ஓரிரு மாணவர்கள் பாஸ் ஆனாலும் கட்டணக் கொள்ளையால் விழுப்புரம் பிரதீபா போல, தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். இந்த வேதனை தீர வேண்டும். இது தொடரக்கூடாது. தமிழக அரசு உறுதியான முடிவை எடுத்து அரசுப் பள்ளி மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்றார்.


சுனில் ராஜாதமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் சுனில் ராஜா கூறுகையில், `` சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சென்னையில் உள்ள தேசிய அளவில் புகழ்பெற்ற பயிற்சி மையங்களில் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுகிறார்கள். இதற்கு அவர்கள் சில லட்சங்களைச் செலவு செய்கிறார்கள். கூடுதல் மதிப்பெண் எடுப்பதால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சீட் பெற்று விடுகிறார்கள். அதாவது பணக்காரர்கள், சில லட்சங்களை முதலீடு செய்து அரசு ஒதுக்கீடு சீட்டுகளை அபகரித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் அரசு நிர்வாகத்துக்குத் தெரியவில்லை என்பதுதான் ஏமாற்று வேலை என்று சொல்கிறோம். தமிழக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,337 பேர் இந்த நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளார்கள். அதிலும், 460 பேர் தமிழ் வழியில் தேர்வெழுதி தகுதித் தேர்வில் ஜெயித்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சீட் கொடுக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா போல, நம்முடைய மருத்துவக் கல்லூரி இடங்களை நாமே நிரப்பிக்கொள்ள சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசுக்கு நம்முடைய சீட்களை கொடுக்கவும் வேண்டாம்; அவர்களிடம் இருந்து சீட்களை வாங்கவும் வேண்டாம். நம்முடைய இடங்களை யாருக்கு கொடுக்க வேண்டும்; எந்த முறையில் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுக்க உடனே சட்டம் இயற்ற வேண்டும். ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தார். அவர் வழியில் செயல்படும் அரசு  என்று சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ஏற்கக்கூடாது. ஆந்திரா, தெலங்கானா போல தமிழக அரசும் மருத்துவக் கல்லூரி சீட்களை நாமே நிரப்பிக்கொள்ள வேண்டும்'' என்றார்.


ராமதாஸ்பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'செஞ்சி மாணவி பிரதீபாவின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சோகமும் இன்னும் முழுமையாக தீராத நிலையில், திருச்சி சுபஸ்ரீயின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தகைய தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும். நீட் தேர்வு நடத்தப்படும் விதமும், அதற்கான பாடத்திட்டமும் தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் புதிதாகும். அதுமட்டுமன்றி, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டால் மட்டும்தான் இத்தேர்வில் வெற்றி பெற முடியும் எனும் சூழலில், அதற்கான வாய்ப்பு இல்லாத மாணவச் செல்வங்கள் தோல்வியடைவது இயல்புதான். இதில் மாணவச் செல்வங்களின் தவறு எதுவும் இல்லை. அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களைத் தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

 

ஜெயலலிதா சொன்னதை எடப்பாடி பழனிசாமி செய்வாரா...?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!