வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (08/06/2018)

கடைசி தொடர்பு:17:08 (08/06/2018)

குடிசைகளின் கனவுகளை அபகரிக்கிறதா நீட் பயிற்சி வகுப்புகள்?

குடிசைகளின் கனவுகளை அபகரிக்கிறதா நீட் பயிற்சி வகுப்புகள்?

பிரபல ஆங்கில நாளேடுகளின் முன்பக்கத்தைப் பெரிய அளவில் ஆக்கிரமித்திருந்தது அந்த விளம்பரம். 'எங்கள் மாணவர்கள் மீண்டும் வரலாறு படைத்திருக்கிறார்கள்’ என்கிற ரீதியில் பெரிய எழுத்துகளால் பொறிக்கப்பட்ட அந்த வாசகத்தின்கீழ் நீட் தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றிருந்த அந்தத் தனியார் பயிற்சி மையத்தின் ஏழு மாணவர்களின் புகைப்படங்கள் இருந்தன. அடுத்த பக்கம், அந்தப் பயிற்சி மையத்தில் படித்து நீட் தேர்வில் சாதனை படைத்த தமிழக அளவிலான மாணவர்களால் நிரம்பியிருந்தது. இவர்கள் அனைவருமே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் வழி படித்த மாணவர்கள். இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரியும், தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனாவும் அதில் இடம்பெற்றிருந்தனர். 600-க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருக்கும் இவர்கள் அனைவருக்குமே இந்திய அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த செலவில் மருத்துவக் கல்வி என்பது உறுதி. வாழ்த்துகள் வருங்கால மருத்துவர்களே! நிற்க. 

நீட்

போட்டித் தேர்வுகளுக்காக இந்திய அளவில் மாணவர்களைத் தயார் செய்வதில் தொடர்ந்து இயங்கிவருகிறது அந்தத் தனியார் கல்வி சேவை நிறுவனம். 2013 தொடங்கி நீட் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பின் போதே அந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது எழுதப்படாத விதி. "நீட் சிறப்புப் பேக்கேஜில் நீங்கள் குறைந்தபட்சம் ரூபாய் 45,000/- செலுத்தினாலே போதும்” என்னும் விளம்பரத்தை நாம் அந்தத் தனியார் பயிற்சி மையத்தின் வலைதளத்தில் பார்க்கலாம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் அண்மையில் மேற்கல்வி ஆலோசனைக்காக என்னை அணுகியபோது பேச்சுவாக்கில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார், "நீட் தேர்வு எழுத பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியே போதுமான தகுதி என்பதால், நாங்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்காகத் தனியாக கவனம் செலுத்தாமல் தனியார் பயிற்சி மையத்தின் உதவியுடன் நீட் தேர்வுக்காகவே முழுக்க முழுக்கக் கவனம் செலுத்துகிறோம்” என்றார். இப்படி பல தனியார் கல்விச் சேவை நிறுவனங்கள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என முழுக்க முழுக்க மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் நீட் போன்ற தேர்வுகளுக்காகவே தனியாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பயிற்சி திருவினையாக்கும்!.    

அனிதா- பிரதீபா- சுபஸ்ரீ

அதே செய்தித்தாளின் நான்காவது பக்கத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டு இறந்த விழுப்புரம் மாணவி பிரதீபா குடும்பத்துக்கான நிவாரண உதவித் தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது குறித்த செய்தி வெளியாகி இருந்தது. நீட் தேர்வு அறிவிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் விட்டுச் சென்ற தாக்கமே, இன்னும் தணிந்திருக்காத நிலையில் ஏற்பட்டிருக்கும் இன்னொரு மரணம் பிரதீபாவினுடையது. பிரதீபாவின் மரணம் பற்றிய செய்திகளை நீங்கள் படித்து முடித்துக் கடக்கும் வேளையில், நீட் தேர்வுத் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட திருச்சி மாணவி சுபஸ்ரீயின் மரணம் பற்றிய முக்கியச் செய்திகள் உங்கள் வீட்டு தொலைக்காட்சி செய்திகளில் முதன்மையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். இத்தனைக்கும் அனிதா ப்ளஸ் டூவில் எடுத்த மதிப்பெண் 1176, பிரதீபா எடுத்த மதிப்பெண் 1125 மற்றும் சுபஸ்ரீயின் மதிப்பெண் 907. 

இதுநாள் வரைக்கும் ப்ளஸ் டூ மதிப்பெண்தான் தங்களுடைய மருத்துவக் கனவை நனவாக்கும் என்று அதற்காக மட்டுமே அயராது உழைத்துத் தயாராகி வந்த பிள்ளைகளுக்கு, "இல்லை! உங்கள் மருத்துவக் கனவுக்கு நீட் தேர்ச்சி என்னும் தகுதி வேண்டும்” என்ற கனவுக்குத் தடை விதிக்கப்பட்டது. 2018 நீட் தேர்வில் பிரதீபா எடுத்த மதிப்பெண் 39, சுபஸ்ரீ எடுத்த மதிப்பெண் 24. 

"உண்மையில், கட்டடத்தொழிலாளியின் மகளான பிரதீபாவுக்கும் கூலித் தொழிலாளியின் மகளான அனிதாவுக்கும் மருத்துவக் கல்விக்கான இவ்வகை தனியார் நிறுவனப் பயிற்சிகளே கனவாகத்தானே இருந்திருக்கும்? மாநில அரசே முன்வந்து முதன்முறையாகத் தரும் நீட் தேர்வுப் பயிற்சிகளும் எந்த அளவுக்குத் தமிழக மாணவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்? அரசுப் பள்ளிகளில் படிப்பது தரக்குறைவாகவும் ஏழைகளுக்கானது என்றும் பிறப்பு முதலே புகட்டப்பட்டு வளர்க்கப்படும் சமூகச் சூழல் இது. ஆனால், அரசுப் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதும் அங்கே குறைந்த கட்டணச் செலவில் படிப்பதும் கௌரவமாகவே பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளுக்கு இல்லாத போட்டிகள் எதற்கு அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும்? எதற்காக அதற்கு இங்கே இத்தனை போட்டிகளும் இவ்வளவு தகுதித் தேர்வுகளும்?. எதற்கு கல்வி தருவதிலும் அதற்கான பயிற்சிகளிலும் இத்தனை பாரபட்சங்கள்? பாரபட்சமற்ற கல்விமுறையின் மீது கட்டப்படும் ஒற்றைத் தகுதித்தேர்வு மட்டுமே நியாயமானதாக இருக்கமுடியும். அதுவரை இப்படியான அவசரத் தகுதித் தேர்வுகளால் ஏற்படும் மரணங்களுக்கு அரசு இயந்திரம் குற்ற உணர்வுடன் பொறுப்பேற்றுக் கொண்டே ஆகவேண்டும்'' என்று சீற்றத்துடன் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.

"கண்களை எரிக்கலாம் கனவு எரியுமோ?

தலைமுறை கனவுகள் உனக்குப் புரியுமோ?
குடிசை விளக்கில் எரியும் நானொரு ஞான சூரியன் 

எனை ஆளும் தேசமே!”

என்னும் பாடலாசிரியர் உமாதேவியின் வரிகள் இந்த அத்தனை மரணங்களின் சாட்சியாகவும் நம்மை நோக்கி மீண்டும் மீண்டுமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க