ஓ.பன்னீர்செல்வம் தியானம் முதல் தினகரன் கட்சி வரை.... 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் என்ன நடந்தது?

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு குறித்த தீர்ப்பு, நாளை (14/6/18) வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்த ஃப்ளாஷ்பேக்கை இங்கே பார்ப்போம்....

உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா, கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் திடீரென்று  ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் இருந்த நிகழ்வுகள் அரங்கேறின. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையால் பெங்களூரு ஜெயிலுக்குப் போனார் சசிகலா. அதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்தார். இதையடுத்து, கட்சி - ஆட்சி நிர்வாகத்தில் சசிகலா குடும்பத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வெடித்த உட்கட்சி மோதலால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள், கவர்னரைச் சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்காகத் தனித்தனியாகக் கடிதங்களும் கொடுத்தனர்.

``இது, கட்சி விரோதச் செயல்'' என்று அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், அந்த 19 எம்.எல்.ஏ-க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அவர்கள் அனைவரும் விளக்கம் சொல்லி கடிதம் அனுப்பினர். இதில், ஜக்கையன் அனுப்பிய விளக்கக் கடிதம் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்ற, 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர்களுடைய எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சபாநாயகர் தனபால் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த 18 எம்.எல்.ஏ-க்களும் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, அந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த  தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜனவரி 23-ம் தேதி தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடந்து டி.டி.வி தினகரன் மேலுரில் மார்ச் 15- ம் தேதி தனது கட்சிக் கொடியையும் பெயரையும் வெளியிட்டார் என்பது தனிக்கதை!

தனபால், அதிமுக

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ-க்கள் தனியாகச் செயல்பட்டபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது, எதிர்த்து வாக்களித்த அந்த 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ``சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது'' என்று அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தத் தீர்ப்பை, டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் கடுமையாக விமர்சித்தார். அவர்மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரிய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்திரா பானர்ஜி

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ``தீர்ப்பு பற்றி கருத்துக் கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. நாங்கள் மனசாட்சியுடன் கடமையை உணர்ந்து செயல்படுவதால் விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை. நாங்கள், ஆண்டவனுக்கு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும்; பயப்பட வேண்டும். நீதிபதிகளின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மனசாட்சியுடனும் முழுமனதுடனும்தான் விசாரித்து தீர்ப்பு வழங்குகிறோம். 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தீர்ப்பு உரிய நேரத்தில் வரும்'' என்றார். அரசியல் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு நாளை ஒன்றாக அமர்ந்து வழக்குகளைக் கவனிக்க இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!