வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (14/06/2018)

கடைசி தொடர்பு:10:26 (15/06/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் மாறி மாறி தீர்ப்பளித்த நீதிபதிகள்... குழம்பி நிற்கும் தினகரன் தரப்பு!

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்புகளை ஒன்பது மாதங்களுக்குப் பிறகு வழங்கியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

அதாவது, ``டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரையும் சபாநாயகர் பதவி நீக்கம் செய்தது செல்லும்'' என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ``பதவி நீக்கம் செல்லாது'' என்று அந்த அமர்வில் இடம்பெற்ற மற்றொரு நீதிபதியான சுந்தரும் தீர்ப்பளித்துள்ளனர். அவர்கள், இருவரும் தங்களின் முடிவுகளுக்கான காரணங்களையும் எடுத்துரைத்துள்ளனர்.

நீதிபதிகள்

இந்தத் தீர்ப்பு குறித்து, அ.தி.மு.க முன்னாள் எம்.பி. கோவை கே.சி. பழனிசாமி கூறுகையில், ``இரண்டு நீதிபதிகளும் ஆளுக்கொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த வழக்கு அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி, மீண்டும் இதுதொடர்பான தீர்ப்புவர குறைந்தது ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகலாம். இனி, மூன்றாவது நீதிபதி கவனிப்பார் என்று சொன்னாலும் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியே இல்லை. அரசியல் வழக்குகள், தேர்தல் வழக்குகளைப் பொறுத்தவரையில், அந்தக் காலம் முடிந்த பிறகுதான் தீர்ப்புகள் வருகின்றன. அதாவது, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரை எதிர்த்து வழக்கு தொடுத்தால், அந்தச் சட்டமன்றப் பதவிக்காலமான ஐந்தாண்டு முடிந்த பிறகுதான் தீர்ப்பு சொல்லப்படுகிறது. அதனால், வழக்கு தொடுத்தவருக்கு எந்தப் பயனும், நிவாரணமும் கிடைக்கப்போதில்லை. இதுதொடர்பாக பல வழக்குகளை முன்னுதாரணமாகச் சொல்ல முடியும். 

கே.சி.பழனிசாமி , அரசியல் தலைவர்கள்

தேர்தல் வழக்குகளை, அரசியல் வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள நீதிமன்றங்களை நாடுவதற்கு பதில், மக்களைச் சந்திப்பதே நல்லது. ஏனென்றால், காலம் கடந்து சொல்லப்படும் தீர்ப்புகளால் என்ன பயன்? இது, நீதிமன்றங்கள்மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவிடும். சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமல்ல, டெல்லி உச்ச நீதிமன்றமே, `அரசியல் வழக்குகளை மக்கள் மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பல தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏ-க்களைப் பொறுத்தவரை, இப்போது தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அந்த எம்.எல்.ஏ-க்கள், அவர்கள் சார்ந்த தொகுதி மக்களின் குறைகளைக் கேட்க முடியாது. மக்கள் பிரச்னைகளை அதிகாரிகளிடம் சொல்லி பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. சட்டமன்றத்துக்கும் செல்ல முடியாது. இடைத்தேர்தலும் நடத்த முடியாமலும், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவர முடியாத சட்டச் சிக்கல் இப்போது உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பது, மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. வருங்காலத்தில், இதையெல்லாம் நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார்.

ராமதாஸ்

இதுகுறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ``சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு ஒருபுறம் இருக்க, தார்மிக அடிப்படையில் இந்த அரசு பதவியில் நீடிக்கலாமா? என்று வினா எழுப்பப்பட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பவர்தான் முதல்வராக நீடிக்க முடியும். அந்த வகையில் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 136 சட்டமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு முதல்வருக்கு இல்லை. மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 117 உறுப்பினர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநரிடம் மனு அளித்த நாளுக்கும், அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாளுக்கும் இடைப்பட்ட ஒரு மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆணையிட்டிருந்தால், அப்போதே இந்த அரசு கவிழ்ந்திருக்கும். 

இந்த வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் 4 மாதங்களில் முடிவடைந்து விட்ட நிலையில், அதன்மீது தீர்ப்பளிப்பதற்காக எடுத்துக் கொண்ட 5 மாத கால தாமதம், இதன் பின்னர் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளவிருக்கும் காலம் எனக் கால தாமதங்களின் புண்ணியத்தில்தான் இந்த அரசு காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது. எந்த வகையில் பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டது. ஆகவே, அ.தி.மு.க அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும். இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும். இந்த வழக்கில் மிகவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அ.தி.மு.க அரசுக்குச் செயற்கையான ஆயுளைக் கொடுத்து, அதன் மூலம் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை'' என்றார்.

வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ``18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்த உத்தரவு செல்லும் என்றும், அதில் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியிருக்கிறார். மற்றொரு நீதிபதி சுந்தர், சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளார். மூன்றாவது நீதிபதியின் முடிவே இறுதியானது என்பது சட்டப்படி உள்ள நிலை. ஜனநாயகம் தனது பயணத்தில் பாதியளவு தூரம் சென்றுள்ளது. அடுத்து எப்படியோ என்பதுதான் யதார்த்தம். தமிழ்நாட்டில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. `பிழைக்குமா - பிழைக்காதா?' என்பது பிறகே தெரியும்'' என்றார்.

இந்தத் தீர்ப்பு வெளியானதும் ஆளும் கட்சித் தரப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆனால், தினகரன் தரப்பில் அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளின் மூலம் அப்பட்டமாகத் தெரிந்தது. 18 எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் செய்யப்பட்டது தவறு எனத் தீர்ப்பு வருமென்று காத்திருந்தார்கள். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லும், செல்லாது என்று இரு நீதிபதிகளும் தனித்தனி தீர்ப்புகளை வழங்கிவிட்டார்கள். இதனால், எந்த முடிவும் எட்டப்படாமல் வழக்கு இழுத்துக்கொண்டே போவதால் தினகரன் தரப்பு குழப்பத்தில் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்