வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (15/06/2018)

கடைசி தொடர்பு:22:04 (15/06/2018)

மூன்று நீதிபதிகளும் 18 எம்.எல்.ஏ-க்களும்... அடுத்தது என்ன?

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ள நிலையில், மூன்றாவது நீதிபதி யார்? அவர் என்ன தீர்ப்பை வழங்குவார் என்பதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.

``முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது நம்பிக்கை இல்லை; அவரை மாற்ற வேண்டும்'' என்று தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 19 பேரில், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், 18.09.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ``உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கூடாது'' என்று 20.09.2017 அன்று உத்தரவிட்டார். இந்த வழக்கு பின்னர், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. அவர்கள், வழக்கு விசாரணையை முடித்து 23.01.2018 அன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் ஜூன் 14-ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நீதிபதிகள் - எம் எல் ஏக்கள் வழக்கு

இந்த வழக்கு விசாரணை அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ``18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் வெளியிட்ட உத்தரவு செல்லும்'' என்று தெரிவித்ததும் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியடைந்தனர். டி.டி.வி.தினகரன் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அமர்வில் இடம்பெற்ற மற்றொரு நீதிபதியான எம்.சுந்தர், தலைமை நீதிபதியின் தீர்ப்பிலிருந்து தான் மாறுபடுவதாக அறிவித்தார். அதனால், நீதிமன்ற ஹாலில் நிலவிய மகிழ்ச்சியும் வருத்தமும் அதிகநேரம் நீடிக்கவில்லை. ``மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்றம் செய்வதாகவும், ஏற்கெனவே இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரித்துள்ளதால் மூத்த நீதிபதியான ஹூலுவாடி ஜி.ரமேஷ், மூன்றாவது நீதிபதி யார் என்பதை முடிவு செய்வார்'' என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்தார்.

யார் இவர்கள்..?

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். 1957- ம் ஆண்டு பிறந்த அவர், கொல்கத்தாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்குள்ள மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர், கொல்கத்தா சட்டக் கல்லூரியில் கல்வி பயின்றார். 1985- ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவுசெய்து கொண்ட அவர், கிரிமினல் வழக்குகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆகத் திகழ்ந்தார். 2002- ம் ஆண்டு பிப்ரவரி 5- ம் தேதி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 2016- ம் ஆண்டு ஆகஸ்ட் 8- ம் தேதி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், பதவி உயர்வு பெற்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 5.4.2017 அன்று பொறுப்பேற்றார்.

நீதிபதி எம்.சுந்தர், சென்னையைச் சேர்ந்தவர். 1966- ம் ஆண்டு ஜூலை 19- ம் தேதி பிறந்த இவர், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டு சட்டக் கல்வியின் முதல் பேட்ஜ் மாணவர். அதாவது, பிளஸ்-டூ முடித்துவிட்டு, சட்டக் கல்வியை ஐந்தாண்டு படிக்கும் முறையில் இவர் படித்தார். 1989- ம் ஆண்டில் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட சுந்தர், சிவில் வழக்குகளில் சிறந்த அனுபவம் உடையவர். தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2003- ம் ஆண்டு முதல் 2006- ம் ஆண்டு வரை வழக்கறிஞராகச் செயல்பட்டார். 05.10.2016 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார். 

ரமேஷ்

மூன்றாவது நீதிபதியை முடிவு செய்யவிருக்கும் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கர்நாடகாவைச் சேர்ந்தவர். 1957- ம் ஆண்டு மே 5- ம் தேதி பிறந்த இவர், வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு, 1981-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டவர். மைசூரு, பெங்களூரூ கீழமை நீதிமன்றங்களிலும் பெங்களூரூ உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. கர்நாடகச் சட்டத்துறையில் 1993- ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகப் பணியில் சேர்ந்தார். 2003- ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2015- ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின்னர் 11.04.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதி ஆவார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பை அளித்துள்ள நிலையில், இந்த வழக்கில் 3-வது நீதிபதி யார் என்பதை முடிவு செய்து ஹூலுவாடி ரமேஷ் அறிவிப்பார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோரைக் கொண்ட அமர்வில், இருவரும் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். மலைக்கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் கூடுதல் மதிபெண் வழங்கப்படும் என்றும், அந்த இடங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மகப்பேறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு எடுத்தால் அந்தச் சலுகை கிடையாது என்றும் தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து டாக்டர் அருணா உள்பட 6 பெண் மருத்துவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி அமர்வு, ``பெண் ஊழியர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றுதான் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அந்த விடுப்பு காலத்தையும் பணிக்காலமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் மேற்படிப்புக்குக் கூடுதல் மதிப்பெண் சலுகையை அரசு வழங்க வேண்டும்'' என்று தீர்ப்பு அளித்தது.

இதேபோல் `சென்னை ஐ.ஐ.டி-யில் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல் பணி நியமனங்கள் நடைபெறுகிறது' என்று ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு எதிராக ஆழ்வார்பேட்டை முரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,  நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி அமர்வு, ``இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி பணி நியமனங்களைச் செய்யவேண்டும். இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் எச்சரிக்கை விடுத்தது. நடிகர் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான `காலா' திரைப்பட டிக்கெட்டுகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான வழக்கும் இந்த அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ``மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கான ஆதாரம் உள்ளது. விதிமீறலில் ஈடுபடும் தியேட்டர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டியது தியேட்டர் நிர்வாகத்தின் கடமை. அதற்கு வசூலிக்கும் கட்டணம், திரைப்பட கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இப்படிப் பல பரபரப்புத் தீர்ப்புகளை வழங்கிய மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவிருக்கிறார். 

அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்