''161-வது பிரிவைப் பயன்படுத்துங்கள்!'' - எடப்பாடி பழனிசாமிக்கு வழிகாட்டும் கட்சிகள்! | Other parties suggest way to release Rajiv Gandhi case convicts

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (16/06/2018)

கடைசி தொடர்பு:17:43 (16/06/2018)

''161-வது பிரிவைப் பயன்படுத்துங்கள்!'' - எடப்பாடி பழனிசாமிக்கு வழிகாட்டும் கட்சிகள்!

ச்ச நீதிமன்ற கெடு முடியும் தருவாயில் மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழியாகப் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, கடந்த 2014- ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18- ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, `குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி, அவர்களை விடுதலை செய்வது பற்றி அரசு உரிய முடிவு செய்யலாம்' என்று அறிவுரை வழங்கியது. அதனடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்த நிலையில், மன்மோகன்சிங் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, அவர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றம், பேரறிவாளன் முருகன் சாந்தன்

அதன்பின்னர், `அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று 2014 மற்றும் 2016- ம் ஆண்டுகளில் இரு முறை மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை வைத்த போதிலும், அதை ஏற்க மத்திய ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து, மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் ``தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டாம்” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் இந்த முடிவு குறித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கூறுகையில், ``குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும். ஏனெனில், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில் முக்கியமானப் பிழையை, தான் செய்ததாக, இவ்வழக்கைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். உச்ச நீதிமன்ற அமர்விலேயே அவர் தன் உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார். இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த மூத்த நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டு, ஏழு பேரையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை வெங்கட்ராமன்

கொலையுண்ட ராஜீவ்காந்தியின் குடும்பத்தினர், ராகுல் காந்தி உட்பட `குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழுபேரையும் விடுதலை செய்வதில் தங்களுக்கு மறுப்பேதுமில்லை' என்று தெரிவித்து விட்டனர். ராஜீவ் காந்தி கொலையில் பன்னாட்டுச் சதி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு பேரின் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது. இந்திய அரசோ, ஏழு பேரின் விடுதலையை ஏற்க முடியாது எனக் குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. 

மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும். அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்டப்பிரிவு 161-இன் படி தண்டனை குறைப்பை வழங்க முடியும். அந்த அதிகாரம் கட்டற்றது. ஆளுநர் முடிவு என்பது, தண்டனை  குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சரவையின் முடிவே ஆகும். குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கூறியிருப்பது, மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது. எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்டப்பிரிவு 161-இன் படி அறிவிக்க வேண்டும்" என்றார்.

ஸ்டாலின்

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ``ஏறக்குறைய நான்கு வருடத்துக்கும் மேலாக அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போது திடீரென்று, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை நிராகரித்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற முடிவு. அவர்களை விடுதலை செய்யும் பிரச்னையில், பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும் குழப்பம் ஏற்படுத்துவதிலும், மாநில அரசும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் அமைச்சரவை, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஏற்கெனவே எடுத்த முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், தனது கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 27 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ``தண்டனை குறைப்பு தொடர்பாக ராஜீவ் கொலைக்கைதிகள் ஏழு பேரின் விவகாரத்திலும், இந்தித் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் விவகாரத்திலும் மத்திய அரசு எவ்வாறு மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொண்டது என்பதிலிருந்தே இதை உணர்ந்துகொள்ள முடியும். மும்பைத் தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்தும் மத்திய அரசின் சட்டமான ஆயுதச் சட்டத்தின்படி சி.பி.ஐ. வழக்கில்தான் தண்டிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையில் 17 மாதங்கள் தண்டனை குறைப்பு செய்யப்பட்டு முன்கூட்டியே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசு, இந்த ஏழு பேரின் விடுதலையை மட்டும் எதிர்ப்பது ஏன்? எனவே, அவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது, ஏழு பேரின் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை சிறப்பாக நடத்தி, சாதகமான தீர்ப்பைப் பெறுவது. இரண்டாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி, ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது ஆகும். 

அன்புமணி

நீதிமன்றத்தின் மூலமாக அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என்பதாலும், மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளாது என்பதாலும் முதலாவது வாய்ப்பின்படி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, தமிழக அரசின் முன் உள்ள கடைசி வாய்ப்பு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது  பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமே. இதை உணர்ந்து உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 161-ஆவது பிரிவின்படி, ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்; அத்தீர்மானத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி, அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ``பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. உச்ச நீதிமன்றத்தில் இதை தமிழக அரசின் சார்பில் எடுத்துச் சொல்லி, ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்க துணையாக இருப்போம்" என்றார். பேரறிவாளனுக்குப் பரோல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, அரசியலமைப்புச் சட்ட விதி 161-ஐ பயன்படுத்தி அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யுமா என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்