''ஆசிரியர் தகுதித் தேர்வும் மத்திய அரசின் அந்தர் பல்டியும்!'' டெல்லி பரபர காட்சிகள் | Political leaders reaction on Central's teacher eligibility test 2018

வெளியிடப்பட்ட நேரம்: 21:07 (18/06/2018)

கடைசி தொடர்பு:21:08 (18/06/2018)

''ஆசிரியர் தகுதித் தேர்வும் மத்திய அரசின் அந்தர் பல்டியும்!'' டெல்லி பரபர காட்சிகள்

'மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு' என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஆகும். இத்தேர்வில் வெற்றிபெறுவோர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியில் சேர முடியும். இதுபோல, மாநில அளவில் ஒவ்வொரு மாநிலமும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களைப் பள்ளிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது என மத்திய மனிதவளத் துறை 2011-ஆம் ஆண்டு அறிவித்தது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆசிரியர் தேர்வு

இந்தத் தேர்வில், `தாள் ஒன்று' என்று அழைக்கப்படும் தேர்வை, முதலாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்க, 12-ம் வகுப்பு தேர்வுடன் ஆசிரியர் கல்வியில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ளவர்கள் எழுதலாம். பட்டப்படிப்புடன் பி.எட் படிப்பு முடித்துள்ளவர்கள், `தாள் இரண்டு' என்ற தேர்வை எழுத வேண்டும். அவர்கள், 6-ம் ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கலாம். இந்தத் தேர்வில் மொத்தமுள்ள 150 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுப்போர் மட்டுமே இத்தேர்வில் தகுதி பெறுவார்கள். அவர்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தகுதிச் சான்றிதழ் கொடுக்கிறது. இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதிகபட்ச மதிபெண்கள் எடுக்க, மீண்டும் மீண்டும் இத்தேர்வெழுத அனுமதி உண்டு.

விதிமுறை

இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வரும் 22-ஆம் தேதியில் இருந்து ஜூலை 19-ஆம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு, 16.09.2018 அன்று நாடு முழுவதும் 92 இடங்களில் நடைபெறுகிறது. இந்த இரண்டு (தாள் ஒன்று, தாள் இரண்டு) தேர்வுகளிலும், ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் ஐந்து பாடங்கள் உண்டு. அதில் இரண்டு மொழிப்பாடங்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்,  ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளை எடுத்துக்கொள்ள முடியும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளை எடுக்கலாம். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தை எடுக்க முடியும். மேலும், இந்த மொழிப் பாடத்தில் ஆங்கில மொழிப் பாடத்தைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இரண்டாவதாக மொழிப்பாடம் எடுக்கவேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள 20 மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

வீரமணி

இதுகுறித்து அரசியல் தலைவர்களிடம் பேசினோம். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ''பள்ளிக்கல்வித் துறையின் கீழ் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுப் பட்டியலிலிருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் நீக்கப்பட்டு சமஸ்கிருதம், இந்தி மட்டுமே தகுதித் தேர்வுக்கான மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம் பொதுமொழியாக இருந்துவருகிறது. தமிழ்நாடு அரசு 50 ஆண்டுகளாகப் பின்பற்றிவரும் இருமொழிக் கொள்கையான, 'தமிழ் - ஆங்கிலம்' கொள்கை முடிவுக்கு விரோதமான ஏற்பாடு இது'' என்றார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி, ''இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இரண்டாம் தாளை எழுத முடியாது என்பதால், அதற்குரிய 30 மதிப்பெண்களை இழப்பார்கள். அதேநேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதி அதற்குரிய 30 மதிப்பெண்களை எளிதாக எடுத்துவிடுவார்கள். அத்தகைய சூழலில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெறும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 120-க்கு 90 மதிப்பெண்களை எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

அன்புமணி

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழி வாய்ப்புப் பட்டியலில் இருந்து இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைத் தவிர மற்ற மாநில மொழிகளை நீக்கிவிட்டால், அந்த மாநில மொழிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது. இது கொடூரமான மொழித் திணிப்பு. எனவே, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழிப்பாட வாய்ப்புப் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட ஏற்கெனவே இருந்த 20 மொழிகளும் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்'' என்றார்.

பாலாஜிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ''ஆட்சிக் கட்டிலில் மோடி அமர்ந்ததில் இருந்தே மத்திய அரசு, தனது காவிக் கொள்கையைக் கல்வியில் புகுத்தி வருகிறது. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் என்று இந்த மூன்று மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? அதில்தான் இவர்களின் சூட்சுமம் இருக்கிறது. கல்வித்துறையை இயக்குவது யார் என்பது இந்த அறிவிப்பின் மூலம் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. இதிலிருந்தே, கல்வி அமைச்சருக்குத் தெரியாமல் என்னென்னவோ நடந்துகொண்டிருக்கின்றன என்பது உறுதியாக உள்ளது. இந்தித் திணிப்பைக் கண்டிப்பாக்கும் சூழலை மத்திய அரசு வெளிப்படையாகவே சொல்லிவிட்டது. அதிலும் சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில்கூட, `11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் தமிழ்ப் பாடங்களுக்கு நடக்கும் இரண்டு தேர்வை இந்த ஆண்டு ஒன்றாக்குகிறோம்' என்று அறிவித்துள்ளார்கள். இதிலும் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகம் கிளம்பியிருக்கிறது. இதுபற்றியும் விளக்க வேண்டும். கடந்த ஆண்டு நடந்ததுபோலவே இந்தத் தடவையும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என்று லட்சக்கணக்கானோர் நம்பியிருந்தார்கள். அவர்களை இந்த அறிவிப்பு பதறவைத்துள்ளது. அவர்களின் மனவேதனைக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?'' என்ற கேள்வியோடு முடித்தார்.

சுனில் ராஜாதமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் சுனில் ராஜா, ''நாடு முழுவதும் பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் உள்ளன. தென் இந்தியாவில் இந்தியே தெரியாத ஆசிரியர்கள் பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், தற்போதைய மனிதவளத் துறை சுற்றறிக்கையின்படி தென் இந்தியா மற்றும் இந்தி அல்லாத அனைத்து மாநிலத்தவர்களுமே ஆசிரியர்களாக வர இயலாத நிலை உருவாகிவிடும். இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்கமொழி மற்றும் குஜராத்தி பேசும் மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் முதல் தேர்வு தமிழ் மொழியாகத்தான் உள்ளது. இரண்டாம் பட்சமாகத்தான் அவர்கள் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். 

இந்த நிலையில் இந்தி, சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து மற்ற மொழிகளை அகற்றி இருப்பதும் தேவையற்ற செயல். இதனால் இந்தி மொழி ஆசிரியர்கள் அதிகம் பேர் தமிழகப் பள்ளிகளில் ஊடுருவும் நிலை ஏற்படும். இதன்மூலம் தமிழக ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவது நிச்சயம். இப்போது வெளிவந்துள்ள அறிவிக்கையின்படி, இரண்டு தேர்வுகளையுமே கட்டாயமாக இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலம் இவற்றில்தான் எழுதவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் ஆசிரியர்கள் இந்த மூன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அதாவது, கண்டிப்பாக, முதல்தாள் என்கிற முறையில் ஆங்கிலத்தை எடுப்பார்கள். அடுத்ததாக மொழிப்பாடம் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில், சமஸ்கிருதம் அல்லது இந்தி ஆகிய மொழிகளில் ஒன்றைத்தான் தேர்வு செய்தாக வேண்டும். அதிலும், சமஸ்கிருதம் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதால், இந்தியைத் தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. மீண்டும், இந்தித் திணிப்பு நேரடியாக வந்துவிட்டது. உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது'' என்று எச்சரித்தார்.

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்துக்கான தகுதித்தேர்வில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஜவடேகர், ``மாநில மொழிகளுக்கும் முன்புபோல வாய்ப்புத் தரப்படும்'' என்று அறிவித்துள்ளார். இதனால், தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு முன்னுக்குப் பின் அறிவிப்பதால், தேர்வுக்குத் தயாராவோர் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னை வெடித்ததும் அமைச்சர் ஜவடேகர், சி.பி.எஸ்.இ அதிகாரிகளை அழைத்து பேசினார்.

ஜவடேகர்

அதற்கு அவர்கள், "ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் நேர்முகத் தேர்வு வைக்கும் போது இந்தியில்தான் முக்கியத்துவம் குறித்து கேள்வி கேட்கப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் வேலை கொடுக்கப்படுகிறது. எனவே, அதற்கு தகுந்தாற்போல்தான் மொழித் தாள்களை இத்தேர்வில் அமைத்துள்ளோம். நீதிமன்ற உத்தரவுப்படி குறுகிய காலத்தில் தேர்வு நடத்த வேண்டுமென்றால் வேறு வழியில்லை" என்றார்கள். அதற்கு ஜவடேகர், "அதையெல்லாம் தேர்வு எழுதுவோர் பார்த்துக்கொள்வார்கள். இந்தப் பிரச்னை ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் வெடித்துள்ளது. இது அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிடும்" என்று வருத்தமுடன் அதிகாரிகளை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்துதான் ஏற்கெனவே நடத்தியது போல இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று ஜவடேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதான் மத்திய அரசின் திடீர் மனமாற்றத்திற்கு பின்னணியில் நடந்த சம்பவம் என்கிறார்கள் டெல்லி உள்அரசியல் தெரிந்தவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்