``குட்கா முதல் உறுப்பு தான ஊழல் வரை" - அமைச்சர் விஜயபாஸ்கர்மீது தொடரும் குற்றச்சாட்டு! | social activists blame minister vijayabaskar on several corruptions

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (19/06/2018)

கடைசி தொடர்பு:11:02 (19/06/2018)

``குட்கா முதல் உறுப்பு தான ஊழல் வரை" - அமைச்சர் விஜயபாஸ்கர்மீது தொடரும் குற்றச்சாட்டு!

``குட்கா முதல் உறுப்பு தான ஊழல் வரை

உறுப்பு தான அமைப்பு

பான் மாசலா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களைத் தடையின்றி விற்பனை செய்ய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக 2016- ம் ஆண்டு நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனை அரசியல் களத்தையே அதிரச் செய்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக அமைச்சர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்ட விவகாரம், ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதற்காகப் பாலாஜிக்குப் பணம் கொடுத்த விவகாரம் என அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அதிகரித்தன. எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் கைதுசெய்யப்படலாம் என்று அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கெல்லாம் அசராமல் ``சட்டப்படி இதனை எதிர்கொள்வேன்" என்று கூலாகப் பதிலளித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர் (  அமைச்சர் )

அப்படியே அந்தக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர்மீது மற்றொரு புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உறுப்புதான அமைப்பில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உறுப்புகளுக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும்போது வெளிநாட்டு நோயாளிகளுக்கு அதிக விலைக்கு உறுப்புகள் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்த உறுப்புதான அமைப்பில் டாக்டர் பாலாஜி நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், டெண்டர் விடப்பட்ட விவகாரத்திலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்டேசன். 

``உறுப்புதான அமைப்பில் எந்த அனுபவமும் இல்லாத மருத்துவர் பாலாஜி, தமிழ்நாடு உறுப்புதான அமைப்பின் உறுப்பினர் செயலாளராக, சுகாதாரச் செயலாளரால் 2016- ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சுகாதாரத் துறைச் செயலர் அவரை நியமித்திருந்தாலும், அமைச்சர் விஜயபாஸ்கரின் கண்ணசைவின் காரணமாகவே இந்த நியமனம் நடந்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை குறித்துப் பொதுமக்கள் மத்தியில் விஜயபாஸ்கர் சொன்னதைக் கேட்டு, அப்படியே பாலாஜி பேசியதற்காகவும், இடைத்தேர்தலுக்கு ஜெயலலிதாவின் ரேகையைப் பெற்றுக் கொடுத்தார் என்ற காரணத்துக்காகவும் அவருக்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளார் விஜயபாஸ்கர். இந்தப் பதவி நியமன நடவடிக்கையைச் சட்டரீதியாக அந்த அமைப்பில் உள்ள நிர்வாகக் குழுவே செய்ய வேண்டும். ஆனால், அந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் நியமனம் நடந்துள்ளது. பாலாஜியின் சட்டவிரோத நியமனம் குறித்து ஏற்கெனவே எங்களுடைய அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும், `இப்படியான நியமனத்தால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது' என்றும் அந்த மனுவில் கூறியிருந்தோம். அந்த மனு மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில்தான் உறுப்புதான அமைப்பில் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உறுப்புதான ஊழல்!

பாலாஜி உறுப்பினர் செயலராக இருந்த காலகட்டத்தில்தான், இந்தியர்கள் இருக்கும்போது வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்புகள் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. விஜயபாஸ்கரின் செல்வாக்கில் நியமிக்கப்பட்டவர் பாலாஜி. அதனால், இந்த ஊழலில்  விஜயபாஸ்கருக்கும் பங்கு உள்ளது. 5000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், உடல் உறுப்புதான அமைப்பிலிருந்து உடல் உறுப்புகளைப் பெற முடியாமல் இருக்கிறபோது வெளிநாட்டு நோயாளிகளுக்கு, `மெடிக்கல் டூரிஸம்' என்ற அளவில் மிகப் பெரிய அளவிலான மோசடி செய்து உறுப்புகளை விற்றுள்ளனர்.

சமூக ஆர்வலர்கள்

டெண்டர் முறைகேடு...

இது, ஒருபுறம் இருக்க... மறுபுறம் அந்த அமைப்பின் இணையதளத்தைப் புதுப்பிக்க விடப்பட்ட டெண்டரிலும் ஊழல் நடந்துள்ளது. இவோக்பிராண்ட் ஆர்கிடெக், கனெக்டிங் பாய்ன்ட் பிரைவேட்  லிமிடெட், இன்னொரு நிறுவனம் ஒன்று. இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதில் இவோக்பிராண்ட் ஆர்கிடெக் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், கனெக்ட்டிங் பாய்ன்ட் பிரைவேட்  லிமிடெட் என்ற நிறுவனம் ஒன்றே இல்லை. ஆனால், இந்த நிறுவனமும் டெண்டரில் பங்கேற்றுள்ளது. போலியான ஒரு நிறுவனத்தைச் சேர்க்க என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தெரியவில்லை" என்றார்,  ஜெயராமன் வெங்டேசன்.

இதுகுறித்து பேசிய சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்,``தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைச்சிகிச்சை அமைப்பின் இயக்குநர் விமல் பாண்டாரியா, `தமிழகத்தில் உறுப்புதான அமைப்பில் ஊழல் நடக்கிறது' என்று கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்தை அலட்சியப்படுத்திவிட  முடியாது. இதுதொடர்பாக முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதில் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதில், பயன்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்