நிறைவுற்றது ம‌ஹா கும்பமேளா!

- ஆர்.ஷஃபி முன்னா
 படங்கள்:
பவண்குமார்

 

ம்பத்தைந்து நாட்களாக அமர்க்களப்பட்ட‌ ஆன்மிக விழிப்புணர்வின் அடையாளமான மகாகும்ப மேளா நேற்றுடன் முடிந்தது. இதில் 120 மில்லியன் பேர் கலந்து கொண்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புராணங்களில் குறிப்பிட்டபடி, சாகாவரம் தரும் தேவாமிர்தம் பெற அசுரர்களும், தேவர்களும், பாற்கடலில் கைலாச மலையை போட்டு ஆதிசேஷன் பாம்பை கயிறாக்கி கடைகிறார்கள் அதை பகிர்ந்து கொள்வதில் வந்த சண்டையில் அமிர்தம் சிதறி நான்கு இடங்களில் விழுந்ததாம். அந்த இடங்களான அலகாபாத், உஜ்ஜைன், ஹரித்துவார் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கும்ப மேளா நடத்தப்படுகிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பது மஹா கும்ப மேளா.

இந்தக் கும்ப மேளா சுதந்திரப் போராட்டக் காலங்களில் தான் சூடு பிடித்தது. அப்போது, பொதுமக்களிடம் தேசப்பற்றை வளர்ப்பதற்காக பலவித யுக்திகள் கையாளப்பட்டன. விநாயகர் சதூர்த்தியில் பிள்ளையார் ஊர்வலங்களை அறி முகப்படுத்திய‌து போல், இந்த கும்ப மேளாவுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டது. தொடக்க‌ காலங்களில் சாதுக்கள் மட்டுமே பிரதானமாக இருந்த மேளாவில் இன்று சாதாரண ம‌க்களும் மிகப் பெரிய அளவில் கலந்து கொள்கின்றனர். அதனால், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் ஒரே இடத்தில் கூடும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாக கின்னஸ் புத்தகத்திலும் தடம் பதித்திருக்கிறது கும்பமேளா

 ஜனவரி 14 தை பொங்கலன்று தொடங்கி மார்ச் 10 வரை என 55 நாட்களுக்கு நடைபெற்ற கும்பமேளா மொத்தம் ஆறு புனித நீராடல்கள் நடந்தன. அதில் மகர சங்ராந்தி (ஜனவரி 14), மவுணி அமாவசை (பிப்ரவரி 10) மற்றும் வசந்த் பஞ்சமி (பிப்ரவரி 15) ஆகிய மூன்று வைபவங்கள் மட்டும் சாதுக்களிடையே ராஜ குளியல்களாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த மூன்று குளியல்களுக்குப் பின் பெரும்பாலான சாதுக்கள் தங்கள் கூடாராங்களை காலி செய்து கொண்டு கிளம்பி விட்டனர். அதன்பிறகு, பொதுமக்களின் கூட்டமே அலை மோதியது.

இந்த மஹா கும்பமேளாவில் வழக்கம் போல் அனைவரையும் கவர்ந்தது நாகா சாதுக்களே. இந்து தர்மத்தை காக்க போர் காவலர்களாக அறிமுகப்படுத்தப்ட்ட இந்த சாதுக்களின் கைகளில் பல்வேறு விதமான பழங்கால ஆயுதங்கள். கழுத்தில் ருத்ராட்ச மாலைகளுடன் பொதுமக்களுக்கு கலர்ஃபுல் விருந்தளித்தனர். இதற்காக அவர்கள் ஊர்வலமாக வந்து கும்பலாக போடும் குளியலை பார்க்க அலை மோதியது கூட்டம்.

இதை விட மகர சங்ராந்திக்கு முன்னதாக சங்கமத்திற்கு தங்கள் வருகையை சாதுக்கள் ஆஜர்படுத்திய பாணி பார்க்க வேண்டிய ஒன்று. அந்தக் காலங்களில் ராஜா, மகாராஜாக்கள் பொதுமக்களிடையே தோன்றும் ஊர்வலங்களுக்கு சற்றும் குறையாமல், ஒவ்வொரு சாதுக்கள் சபையும் வந்து பந்தா காட்டினார்கள். யானை, ஒட்டகம், குதிரை என சவாரிகள், சபை தலைவர்களின் ரதசவாரி, மியூசிக் பேன்ட் வாத்தியம் என ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் ஆர்ப்பாட்டமான ஊர்வலங்கள் நடத்தினார்கள். இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழிநெடுக கூடி நின்று குஷியாகப் பார்க்க, சாதுக்களுக்கும் உற்சாகம். இதில், தங்கள் கலைகள் மற்றும் வித்தைகளுடன் வாள் வீச்சு, கம்பு சண்டை என  காட்டி அசுத்துவதற்கு சாதுக்களிடையே ஒரு தனி போட்டி இருந்தது. மியூசியங்களிலும் பார்க்க முடியாத அரியவகை ஆயுதங்கள் மற்றும் ஊதும்  கருவிகளை இந்த ஊர்வலங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. இத்துடன் வித, விதமான சங்குகளை ஊதி தம் நீண்ட மூச்சுக்களின் அளவுகளை காட்டி ஆச்சரியப்படுத்திய சாதுக்களின் சாகசங்கள் வேறு.

இப்படி, நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் இந்திய‌ சாதுக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சாதுக்கள், வெளிநாட்டு மீடியாக்காரர்கள் நூறு பேர் உட்பட 700 பத்திரிகையாளர்கள், கும்பல் கும்பலாக லட்சக்கணக்கில் குவியும் பொதுமக்கள் என திரண்ட மஹா கும்பமேளா கொண்டாட்டங்கள் குறித்து விகடன் டாட் காமிற்காக அலகாபாத்தின் டிவிஷனல் கமிஷனர் தேவேஷ் சத்துர்வேதியிடம் பேசிய போது, 'இந்த மஹா கும்ப மேளா ஏற்பாடுகளுக்காக ரூபாய் 12,000 கோடிகளை அரசு செலவு செய்துள்ளது. இதை விட பத்து மடங்கு கூடுதலாக வர்த்தகம்  நடந்திருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்.நாள் ஒன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் வீதம் கடந்த 55 நாட்களில் 120 மில்லியன் பேர் இங்கு வந்து போயிருக்கிறார்கள். இறுதி நாளான நேற்று  மகா சிவராத்திரியில் மட்டும் 70 லட்சம் பேர் வந்திருந்தனர்.' எனத் தெரிவித்தார்.

அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்த இந்த மஹா கும்ப மேளாவில் எதிர்பாராது நடந்துவிட்ட ஒரு விபத்தில்  மவ்ய்ணி அமாவாசை அன்று அலகாபாத் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். இரு முறை முகாம்களின் கூடாரங்களில் நடந்த இரண்டு தீ விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதுவன்றி கங்கையின் ஆழத்தில் முழ்கி ஒருவர்  இறந்தார். இதற்கு முன்பாக,. 1954 ல்  நடந்த கும்ப மேளாவில் நெரிசல் ஏற்பட்டு சுமார் 500 பேர் பலியானார்கள். ஆனால், அதன் பிறகு நடந்த எந்த மேளாவிலும் ஒரு சிறு அசாம்பாவிதமும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

அடுத்த மஹா கும்பமேளாவுக்கு இன்னும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!