வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (25/06/2018)

கடைசி தொடர்பு:07:44 (26/06/2018)

"வீடுகளில் கறுப்புக்கொடி, அரசாணை நகல் எரிப்பு” பசுமைச் சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை அறிவிப்பு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்வாதாரங்களை இழக்கும் மக்கள், தங்கள் போராட்டங்களின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சேலம் வரை சுமார் 277 கி.மீ. தொலைவுக்கு 10,000 கோடி செலவில் பசுமைச் சாலை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்கள், காடுகள், மலைகள், நீர்நிலைகள் என இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு இந்தச் சாலை அமையும் என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. இதனால் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம் சென்னை 8 வழி பசுமைச் சாலை

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்தரமேரூர் ஆகிய மூன்று தாலுகாவில் உள்ள 42 கிராமங்கள் வழியாக 59 கி.மீ. தொலைவிற்கு இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வரை பறக்கும் சாலையாகவும், மண்ணிவாக்கத்திலிருந்து தரைவழியாகவும் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இடையிடையே பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தில் தொடங்கும் 8 வழிச்சாலை கரசங்கால், படப்பை, பாலூர், குருவன்மேடு, அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் வழியாகத் திருவண்ணாமலை மாவட்டத்தை அடைகிறது. இந்தச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக 600 அடி அகலத்திற்குக் கற்கள் நடப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 1300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏரி, குளங்கள், விவசாயக் கிணறுகள் எனப் பல்வேறு நீர்நிலைகள் தூர்க்கப்படும் அபாயம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ தொலைவு இந்தச் சாலை செல்வதால், அப்பகுதியில் அதிக அளவு பாதிப்புகள் இருக்கும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் அளவில் காடுகள் அழிக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

காஞ்சிபுரம், சேலம்-சென்னை 8 வழி சாலை

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நேருவிடம் பேசினோம். “சேலத்திற்கு எட்டுவழிச்சாலை அமைக்கும் அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டு இந்தச் சாலை அமைக்கப்பட ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. இந்தச் சாலை அதிவேக சாலையாக அமைக்கப்பட உள்ளதால், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புசுவர் அமைக்க உள்ளனர். இதனால் சாலையை கடப்பது சவாலாக இருக்கும். சாலையைக் கடக்க வேண்டும் என்றாலோ, அதே சாலையில் திரும்ப வர வேண்டும் என்றாலோ பல கி.மீ. செல்ல வேண்டியிருக்கும். கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லமுடியாது. சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாகவும், வேலூர் வழியாகவும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சேலம் செல்ல முடியும். பிறகு எதற்கு இந்தப் பசுமைச் சாலை?

சேலம்-சென்னை பசுமைச்சாலை, காஞ்சிபுரம் மாவட்டம்

நேரு, விவசாயிகள் சங்கம்விவசாயிகளுக்கு எவ்விதமான அறிவிப்பும் கொடுக்காமல் அதிகாரிகள் நிலத்தைக் கையகப்படுத்தி வருகிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளைக் காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள். 2013ல் அறிவித்துள்ள நிலஎடுப்பு மசோதாவின்படி நிலம் எடுக்கும் பகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். 80 சதவிகித மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால் அந்த விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு சர்வாதிகாரிகள் போல அரசாங்கம் செயல்படுகிறது.  விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிலங்களை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும், மத்திய அரசும் இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு கொடுத்திருக்கிறோம். சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பசுமைச் சாலை அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தோம். அப்போது பா.ஜ.க பிரமுகர்கள் "காசு கொடுக்கிறார்கள் வாங்கிக் கொண்டு அமைதியாகச் செல்லுங்கள். மாவோயிஸ்ட்டுகள் எல்லாம் உள்ளே வருகிறார்கள்" என எங்களைப் பார்த்து சொன்னார்கள். போராடுபவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்க நினைக்கிறார்கள் அவர்கள். பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பசுமைச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூன் 26ம் தேதி தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். ஜூலை 6ஆம் தேதி எட்டு வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் செய்ய உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எங்கள் போராட்டம் நடைபெறும்.” என்கிறார் ஆதங்கமாக.

மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமதுவிடம் பேசினோம், “42 கிராமங்களில், 59.10 கி.மீ. தொலைவிற்கு இந்தச் சாலை செல்லும் எனச் சொல்லி இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிக அளவு கிராமங்கள் வருகின்றன. செங்கல்பட்டு தாலுகாவில் 6 கிராமங்களே வருகின்றன. மக்கள் போராட்டம் செய்யப் போவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து 3A அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. அதன்பிறகே நிலம் கையகப்படுத்துவது குறித்துத் தெளிவாக சொல்லமுடியும்” என்கிறார்.

வளர்ச்சி என்ற பெயரில் ஒரு பக்கம் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு சாலைகள் போடப்படுகின்றன. இன்னொருபக்கம் சாலை வசதி வேண்டும் என பல குக்கிராமங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. அந்தப்பகுதிகளும் இந்தியாவில்தானே இருக்கின்றன!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்