தண்ணீர்ப் பஞ்சத்துக்கு கடல்நீரை குடிநீராக்குவதுதான் ஒரே தீர்வா? - ஒரு விளக்கம்

தண்ணீர்ப் பஞ்சத்துக்கு கடல்நீரை குடிநீராக்குவதுதான் ஒரே தீர்வா? - ஒரு விளக்கம்

ந்த வருடம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டே தண்ணீருக்கு வழியின்றி கஷ்டப்படுவோம்; எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இதுதான் சென்னையின் நீர்மேலாண்மை இலக்கணம்; இயற்கையை நாம் கையாளும் லட்சணம். வறட்சிக் காலங்களில் சென்னையின் ஏரிகள் வறண்டுபோகும்போதெல்லாம், மக்கள் பெரிதும் சார்ந்திருப்பது நிலத்தடி நீரை மட்டும்தான். தற்போது அதற்கும் ஆபத்து என எச்சரிக்கிறது நிதி ஆயோக்கின் புதிய அறிக்கை. இந்தியாவின் 24 மாநிலங்களின் நீர் மேலாண்மையை ஆராய்ந்து Composite Water Management Index என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு. இந்தியாவின் தண்ணீர்ப்பிரச்னை பற்றிய பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அதில் அதிர்ச்சியளிக்கும் முக்கியமான விஷயம் சென்னையின் நிலத்தடி நீர் பற்றியது. 2020-க்குள் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட இந்தியாவின்  21 பெருநகரங்களில் நிலத்தடிநீர் முழுமையாகத் தீர்ந்துவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையும் ஒன்று. இதுபோன்ற அறிக்கைகளும், ஆய்வு முடிவுகளும் புதிதல்ல என்றாலும், அரசின் நிதி ஆயோக் அமைப்பே இதனை ஒப்புக்கொண்டதுதான் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்வதற்காக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான ஜனகராஜனிடம் உரையாடினோம். இந்த அறிக்கை குறித்தும், சென்னையின் தற்போதைய நீர் மேலாண்மை பற்றியும் விரிவாக விளக்குகிறார் ஜனகராஜ்.

"நிதி ஆயோக்கின் இந்த அறிக்கையை எப்படி புரிந்துகொள்வது?"

"இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எதுவும்  நமக்கு புதிதல்ல; பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட தகவல்கள்தான் இந்த அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதற்கு முன்பு இந்தப் பிரச்னை குறித்து யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது நிதி ஆயோக்கே சொல்லிவிட்டது என்பதால் அறிக்கை வந்தபின்பு பெரிதாகப்பேசப்படுகிறது. அவ்வளவுதான்!"

சென்னை ஏரி

"நிதி ஆயோக் குறிப்பிடுவது போல, சென்னையின் நிலத்தடி நீர் முழுமையாகத் தீர்ந்துவிடும் நிலை வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?"

"சென்னையில் நிலத்தடி நீர் எப்போதும் பூஜ்யத்திற்கு செல்லாது; காரணம், இங்கே நிலத்தடிநீர் குறைந்தவுடன் கடல்நீர் உள்ளே புகுந்துவிடும். ஏற்கெனவே சென்னையில் பல இடங்களில் கடல்நீர் உள்ளே புகுந்துவிட்டது. அதுவும் நிலத்தடி நீர்தானே? அப்படியிருக்கையில் எப்படி நிலத்தடி நீர் முழுமையாகத் தீர்ந்துவிட்டது எனச்சொல்ல முடியும்? அந்தக் கருத்தை நிதி ஆயோக் எதன் அடிப்படையில் கூறுகிறது எனத் தெரியவில்லை. சென்னை கடல்சார்ந்த நகரம் என்பதால் இங்கே பூஜ்யத்தைத் தொட வாய்ப்பில்லை. ஆனால், கோவை, நாமக்கல் போன்ற தமிழகத்தின் பிறபகுதிகளில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிடுவதற்கு வாய்ப்புண்டு. நிலத்தடி நீரைப் பொறுத்தவரைக்கும் நாம் எவ்வளவு நீரை எடுக்கிறோமோ, அதே அளவு நீரை மீண்டும் உள்ளே செலுத்த வேண்டும். இந்த சுழற்சி தொடர்ந்து நடந்தால்தான் நிலத்தடிநீர் வளம் குறையாமல் இருக்கும். ஆனால், அந்த சுழற்சி இங்கே முறையாக எடுப்பதில்லை. எனவே நீரைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால் முதல் நிலத்தடிநீர் கொஞ்சம் கொஞ்சமாக நீர்வளம் குறையும்.பின்னர் முழுமையாகத் தீர்ந்துவிடும். நிலத்தடியில் நீர்வளம் குறைந்தால் மண்ணின் மேற்பரப்பில் இருக்கும் ஈரப்பதம் குறையும். அதற்கடுத்து நிலம் பாலைவனமாகிவிடும்."

"இந்தியாவின் தேவையில் நிலத்தடி நீரின் பங்கு என்ன?"

"இந்தியாவில் 70 சதவீத விவசாயம் நிலத்தடி நீரை நம்பித்தான் இருக்கிறது. 80 சதவீத குடிநீர்த்தேவையையும், 90 சதவீத தொழிற்சாலைகளின் தேவையையும் நிலத்தடி நீர்தான் பூர்த்தி செய்கிறது. ஆனால், எத்தனைபேர் நிலத்தடிநீரை சேமிக்கிறோம்? பூமியின் மேற்பரப்பிலிருக்கும் குளம், குட்டை, ஏரி, ஆறு என அத்தனையையும் நாசமாக்கிவிட்ட நமக்கு இப்போதிருக்கும் ஒரே தண்ணீர் மூலம் நிலத்தடிநீர் மட்டும்தான். ஆனால், முறையாகப் பராமரிக்காததால் தற்போது அதற்கு ஆபத்து வந்திருக்கிறது"
"சென்னை மாதிரியான நகரங்களின் நிலத்தடியில் கடல்நீர் உள்ளே புகுவதால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?"
"மிகப்பெரிய சூழலியல் சீர்கேடுகளுக்கு இது வழிவகுக்கும். இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்த பிரச்னையல்ல; கடந்த 20 வருடங்களாகவே இருந்துவரும் பிரச்னை. இந்த அச்சுறுத்தல் சென்னைக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் 1076 கி.மீ கடல்பகுதி முழுக்க இந்தப் பிரச்னை இருக்கிறது. ஏற்கெனவே நாகப்பட்டினத்தில் கடல்நீர் உள்ளே வந்துவிட்டது. சென்னையில் மரக்காணம் வரையிலும் கடல்நீர் உள்ளே வந்துவிட்டது. இந்த கடல்நீர் உட்புகும் நிகழ்வால், நம்முடைய நிலத்தடிநீர் வளம் முழுமையாகப் பறிபோகும். மேலும் கடல்மட்டம் உயரும் என்பதால் தொடர்ந்து கடல்நீர் அதிகரித்துக்கொண்டே செல்லும். "

"குடிநீர்த்தட்டுப்பாட்டிற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நம்பிக்கையளிக்கிறதா?"

"ஒரு சின்ன உதாரணம்; சென்னையில் தற்போது இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் மையங்கள் இருக்கின்றன. இரண்டும் 100 MLD திறன்கொண்டவை. இதேபோல, மூன்றாவது மையம் கட்டும்பணிகள் நடைபெற்றுவருகிறது. அதன் திறன் 150 MLD. இதுதவிர நான்காவது மையம் அமைப்பதற்கான திட்டமும் தயாராகிவிட்டது. இது 400 MLD திறன்கொண்டது. இவற்றின் மொத்த கொள்ளளவு 450 MLD. இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தக் கடல்நீரை குடிநீராக்கும் மையங்கள் அனைத்துமே 60 முதல் 70 சதவீதம் மட்டுமே உற்பத்தி திறன்கொண்டவை. அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்பவை. ஆயிரம் லிட்டர் நீருக்கே 46 ரூபாய் வரை செலவாகும். இவ்வளவு செலவு செய்து நாம் கட்டும் சுத்தகரிக்கும் மையங்கள் என்ன செய்கின்றன? ஒவ்வொருநாளும் கடல்நீரை எடுத்து அவற்றிலிருந்து குடிநீரை சுத்தகரித்துவிட்டு மீண்டும் அதிக உப்புகலந்த நீரை கடலிலேயே விடுகின்றன. இதன்மூலம் கரையின் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். மீன்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அரசின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் மட்டுமே இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன."

ஜனகராஜ்

"அப்படியெனில் கடல்நீரை குடிநீராக்கும் மையங்களே வேண்டாம் என்கிறீர்களா?"

"நமக்கு நிச்சயம் குடிநீர் வேண்டும்தான். ஆனால், அதற்கு இயற்கையான வழிகளே வேறு இருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு சென்னையில் மட்டும் 1350 மி.மீ மழை பெய்கிறது. இவ்வளவு மழை பெய்யும் இடத்தில் நமக்கு எதற்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்? மழைநீரை ஒழுங்காக சேமித்தாலே குறைந்தது நான்கு வருடங்களுக்கு வறட்சியின்றி தப்பிக்கலாம். 2015-ம் ஆண்டு மொத்தம் 300 டி.எம்.சி நீரை கடலில் விட்டோம். சென்னைக்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மழையளவு வெறும் ஒரு டி.எம்.சி.,தான். ஒரு வருடத்திற்கு 12 டி.எம்.சி. இதனை ஒழுங்காக செமித்திருந்தாலே சென்னையின் குடிநீர்த்தேவை பூர்த்தியாகியிருக்குமே? ஆனால், 2016-ம் ஆண்டே இங்கு தண்ணீர் தீர்ந்ததுதானே வரலாறு?

தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையின் மொத்த பரப்பளவில் மட்டும் சுமார் 4100 ஏரிகள் இருக்கின்றன. இதிலேயே 150 டி.எம்.சி தண்ணீரை நம்மால் சேமித்திருக்க முடியும்.  மழைநீரை சேமிப்பதன் மூலம் வெள்ள அபாயத்தைக் குறைத்திருக்க முடியும்; நிலத்தடி நீர் மட்டும் உயரும்; சென்னையின் சூழலியல் பன்மடங்கு வளரும்; கடல்நீர் சுத்தகரிப்பு மையங்கள் மூலம் கடல்வளமும் பாதிக்கப்படாது; குறைந்தது மூன்று வருடங்களுக்காவது தண்ணீர் நம்மிடம் இருந்திருக்கும். இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் மழைநீரை ஏன் நாம் சேகரிப்பதில்லை? இதைத்தவிர்த்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் மையங்கள் என்பவை சோம்பேறித்தனமான திட்டம். இஸ்ரேல் போல மழைவளம் இல்லாத நாடுகளுக்கு வேண்டுமானால் கடல்நீர் சுத்தகரிக்கும் மையங்கள் தீர்வாக இருக்கலாம். ஆனால், இவ்வளவு மழைவளம் கொண்ட சென்னைக்கு இவை தீர்வல்ல; அரசின் சோம்பேறித்தனமே இது!"

"சரி... நிலத்தடி நீர் பிரச்னையில் இருந்து தப்பிக்க சென்னைக்கு என்னதான் வழி?"

"ஏரிகள்... இவற்றை நீங்கள் காப்பாற்றினால், அவை நம்மைக் காப்பாற்றும். சென்னையில் இருக்கும் குளம், குட்டைகள், கோவில் குளங்கள், ஏரிகள் போன்றவற்றை மீட்டெடுக்க வேண்டும். நம் மாநிலத்தில் பெய்யும் மழைநீரை முழுமையாகக் கண்காணிக்க Rainwater Accounting செய்ய வேண்டும். இங்கே பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரும் எங்கே செல்கிறது என்பதை இதன்மூலம் நம்மால் துல்லியமாகத் தெரிந்துகொள்ளமுடியும். இதுதான் நிலத்தடி நீர்வளத்திற்கான ஒரே தீர்வு. அரசாங்கத்தால் எவ்வளவு பெரிய திட்டங்களை வேண்டுமானாலும் நினைத்தவுடன் முடித்துவிட முடியும். ஆனால், ஒரே ஒரு ஏரியை அரசால் உருவாக்க முடியுமா? ஒரே ஒரு ஆற்றை இவர்களால் உருவாக்க முடியுமா? முடியவே முடியாது; இவை இயற்கை நமக்கு அளித்திருக்கும் செல்வங்கள்; அவற்றை இழந்ததற்கான நஷ்டத்தைத்தான் தற்போது நாம் அனுபவிக்கிறோம்"

"குடிநீர்த் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் குறைதல் போன்ற பிரச்னைகள் சென்னையில் மட்டுமல்ல; கேப்டவுன், மெக்ஸிகோ, சவ்போலோ, லண்டன் உள்ளிட்ட எல்லா பெருநகரங்களும் தற்போது சந்தித்துவருகின்றன. உலகெங்கும் வளர்ந்த நகரங்கள் அனைத்தும் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திகின்றன. இதற்கு என்ன காரணம்?"

"அந்த வளர்ச்சிதான் காரணம். இந்த எல்லா நகரங்களுமே மிகவும் குறுகிய கண்ணோட்டத்தில்தான் பிரச்னைகளை அணுகுகின்றன. நீண்டகாலத் தீர்வுகளை நோக்கி நகர்வதில்லை. பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், இயற்கை வளங்களை பெருநகரங்கள் காவுகொடுத்ததுதான் இந்தப் பிரச்னையின் ஆதிமூலம். சில நகரங்கள் காலநிலை மாற்றத்தின் மீது பழிசுமத்துகின்றன. இதுவும் மனிதனால் வந்த பிரச்னைதான். இதற்கு நாம்தான் தீர்வு காணவேண்டும். புதுமையான தொழில்நுட்பங்கள் முதல் இதனைக் கையாளவேண்டும். இஸ்ரேலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நாட்டில் 80 சதவீத நீர் முழுமையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஜப்பானில் பூமிக்கடியில் அணைகட்டி நீரை சேமிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்ன செய்வது என சும்மா இருக்கவில்லை. புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் குறைவான மழைவளம் கொண்ட அவர்களுக்கு ஒவ்வொரு சொட்டுத்தண்ணீரின் மதிப்பும் தெரியும். மனிதனால் எதை வேண்டுமானாலும் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், ஒரே ஒரு சொட்டு மழைநீரையாவது நம்மால் உருவாக்க முடியுமா?

வறட்சி

"அரசு தற்போது உடனே செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன?"

"முதலில் தமிழகத்தின் நீர்வளம் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவேண்டும். எல்லா மாவட்டங்களிலும்இதற்காக என்ன செய்யவேண்டும் என்பதற்கான செயல்திட்டங்களை வரையறுக்க வேண்டும். தமிழகத்தை பாதுகாக்கும் பணியை இந்த நேரத்திலாவது தொடங்கவேண்டும்"

ஆட்சியாளர்களின் புத்திக்கு எட்டவேண்டிய விஷயம் இது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!