``மாற்று நிலத்தில் வாழ்வாதாரமே இல்லையே?”- ஆந்திர அரசைக் கேட்கும் பழங்குடியினர் ஆணையம்

இந்தத் திட்டமானது துரதிர்ஷ்டவசமாக ஊழலுக்கு உதவிவிட்டது. நாங்கள் கிராமங்களுக்குச் சென்றபோது, உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள நபர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளது கணக்குகளுக்கும் மாற்றிக்கொள்ளப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் பற்றி மக்கள் எங்களுக்குப் புகார் அளித்தனர்.

``மாற்று நிலத்தில் வாழ்வாதாரமே இல்லையே?”- ஆந்திர அரசைக் கேட்கும் பழங்குடியினர் ஆணையம்

ந்திரா மாநிலத்தில் கோதாவரி நதிநீரைக் கிருஷ்ணா நதிநீருடன் இணைப்பதற்கான போலாவரம் அணைக்கட்டு கட்டும் பணியில் இருக்கிறது ஆந்திர அரசு. அதற்கு முன்னர் அம்மாநிலத்தில், பட்டிசீமா எனும் இடத்தில் நீரேற்று நிலையத்தின் மூலம் கோதாவரியை, கிருஷ்ணாவுடன் 173 நாள்களில் இணைத்திருந்தது. இப்போது மிகப்பெரிய அளவில் கட்டிக்கொண்டிருக்கும் போலாவரம் அணைக்கட்டானது, ஊழலுக்கான கதவை முற்றிலுமாகத் திறந்துவிட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

ஆந்திரா நதிநீர் இணைப்புத் திட்டம்

போலாவரம் அணை கட்டுவதற்காகப் பழங்குடி மக்களிடமிருந்து நிலங்கள் வாங்கப்பட்டன. அவர்களின் நிலங்கள் நல்ல வளமான விவசாய நிலங்கள். வளமான நிலங்களுக்குப் பதிலாகப் பாறைகளைக் கொண்ட நிலங்கள் வழங்கப்பட்டு அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டார்கள். அதை வைத்துக்கொண்டு பழங்குடி மக்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்துகொள்ளவே முடியவில்லை. சில நாள்களுக்கு முன்னர், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் குடிபெயர்ந்த மக்களைச் சந்தித்த பின்னர், ஆந்திர அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. அதில் 'வாழத் தகுந்த வளமான விவசாய நிலம், முறையான வீடுகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் 55,000 பழங்குடியின குடும்பங்கள் ஒரே ஒரு திட்டத்துக்காக மறு குடி அமர்த்தப்பட்டிருப்பது, வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய குடியமர்வு" என்று குறிப்பிட்டுள்ளது. 

"கோதாவரி ஆற்றின் நீரானது திருப்பிவிடப்பட்டால் 29,000 ஹெக்டேர் நிலங்களில் நீர்ப்பாசனம் நடக்கும். 540 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும். ஆனால், இது மொத்தமாக 3 லட்சம் மக்களைத் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேற வைக்கும். மக்களைத் தவிர, அதிகாரபூர்வமான அறிவிப்பின்படி, மொத்தம் 1,17,065 ஏக்கர் நிலம் போலாவரம் நீர்த்தேக்கத்தால் மூழ்கடிக்கப்படும். அதில் 3,838 ஏக்கர் வனப்பகுதி நிலங்கள் முழுவதும் மொத்தமாக நீரில் மூழ்கும்"

இது கோதாவரி நதிநீர் இணைப்பின் திட்ட அறிக்கை. 

பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களை நேரில் சந்தித்தபோது சற்று அதிர்ந்துதான் போனது, மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பாறைப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்ததும் அரசாங்கம் ஒதுக்கிய நிலத்தில் தண்ணீர் வளமே முற்றிலுமாக இல்லை என்பதால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்ததும் தங்கள் கண்முன்னே கண்டனர். அதைக் கண்ட அந்த ஆணையம் போலாவரம் திட்ட நீர்ப்பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் இவர்களுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் தங்கியுள்ள பழங்குடியின மக்களை வேரோடு பிடுங்கி, வாழ்வாதாரமே இல்லாத இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது. போலாவரம் அணைக்கட்டு திட்டம் 56 சதவிகிதத்தை எட்டியிருக்கும் நிலையில், மறுகுடியமர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்குத் தகுந்த வாழ்வாதாரம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. 

ஆந்திரா நதிநீர் இணைப்புத் திட்டம்

ஏப்ரல் 17 மற்றும் 18 அன்று, மக்கள் கூட்டணியின் தேசிய கூட்டமைப்பு (NAPM), ஆதிவாசி சங்ஷேமா பரிஷத், மனித உரிமைகள் மன்றம் மற்றும் பலர் அடங்கிய உண்மைக் கண்டறியும் குழு ஒன்று மறுகுடியமர்வால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அறிக்கை ஒன்றைத் தயார் செய்தது. ``வன உரிமைச் சட்டம் (FRA) 2006, மற்றும் நிலம் கொள்முதல் மற்றும் மறுவாழ்வு சட்டம் (LARR) 2013 ஆகியவற்றின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களின் வன உரிமைகளை (வாழ்வாதாரங்களை) தீர்த்து வைக்காமல், இந்தத் திட்டத்துக்கான நிலங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. வன உரிமைச் சட்டம் (FRA) 2006-ன் படி மாவட்ட நிர்வாகத்தால் தனித்தனி நிலங்கள் பிரித்தது அங்கீகரிக்கப்படவில்லை. அப்பல்லு, கொய்தா, தேகூபல்லி, பெற்றோர்பால் பல்லி, கத்குரு மற்றும் தெக்குரு உள்ளிட்ட பல கிராம மக்களின் கருத்துகளையும் உண்மைக் கண்டறியும் குழு கேட்டறிந்தது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா இடையே நிர்வாக மற்றும் அதிகாரபூர்வ பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், கிராம மக்களின் கேள்விகளுக்கும் அரசாங்கத்தின் சார்பில் தெளிவான பதில் எங்கும் கொடுக்கப்படுவது இல்லை. 

2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்படி நிலத்தை வழங்குவதற்குப் பதிலாக, இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதில் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதற்கான காரணத்தையும் உண்மை கண்டறியும் குழு அறிந்துள்ளது. அதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள அக்குழு, ``நிலத்துக்கு ஈடாகப் பணம் கொடுப்பது ஊழல் மற்றும் மோசடிக்கான நோக்கத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர, அவர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்காது. அந்த ஊழலை மட்டும் அளந்தால் கோடிக்கணக்கில் இருக்கும். ஒதுக்கப்பட்டுள்ள நிலத்துக்கும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளை நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டும். அந்த வீட்டில் இரண்டு பேருக்குமேல் இருக்க முடியாது. உண்மையில் காடுகளில் வாழ்கிற மக்கள் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்க்கையைப் பழங்குடியின மக்கள் அறவே வெறுக்கின்றனர்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நதிநீர் இணைப்பு திட்ட எதிர்ப்பு

Photo - sandrp.files.wordpress.com

மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பிரபுல்லா சமந்தா இதுபற்றி, "இந்தத் திட்டமானது துரதிர்ஷ்டவசமாக ஊழலுக்கு உதவிவிட்டது. நாங்கள் கிராமங்களுக்குச் சென்றபோது, உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள நபர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளது கணக்குகளுக்கும் மாற்றிக் கொள்ளப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் பற்றி மக்கள் எங்களுக்குப் புகார் அளித்தனர். உண்மையைக் கண்டறியும் குழுவின் 17 பக்க அறிக்கையின் படி"கிராம வருவாய் உதவியாளர்கள், வருவாய் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் அலுவலர்கள் ஆகியோருடன் இந்த ஊழலைத் தீவிரமாக முன்னிறுத்துவதுடன், வருவாய் பதிவேடுகளில் நிலங்களைக் குறைத்து, ஏழைகளுக்கு வழங்கப்பட்ட பணத்தில் குறைந்த அளவிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது" என்கிறார். 

மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NAPM) கடந்த மே 17-ம் தேதி, பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், "போலாவரம் திட்டப்பகுதிகளில், குறிப்பாக மேற்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் நிலப்பரப்பு கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றம் ஆகியவற்றுக்கான முழுமையான விசாரணையை நடத்த வேண்டும். அங்கு பெரிய அளவிலான ஊழல்களும் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல்களும் நடந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!