வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:29 (07/07/2018)

``8 வழிச்சாலையும்...எண்ணூரில் அதானியும்..!” - என்ன தொடர்பு?

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை 100 சதவிகிதம் அதானிகளுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக அறுதியிட்டுச் சொல்கிறார், சூழலியலாளரும் எண்ணூர் படுகை பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளருமான நித்யானந்த் ஜெயராமன்.

``8 வழிச்சாலையும்...எண்ணூரில் அதானியும்..!” - என்ன தொடர்பு?

`சேலத்திலிருந்து சென்னைக்கு 277.3 கிலோ மீட்டர் தூர பசுமை வழிச்சாலையில் மூன்று மணி நேரத்தில் அதிவிரைவாகச் சென்று என்ன செய்யப்போகிறோம்?' என்று மக்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான், அதானி குழுமம் தனது ட்விட்டர் வலைதளத்தில் தங்களது பெருமைமிகு அடுத்தகட்ட நகர்வு தொடர்பான தகவல் ஒன்றைப் பகிர்ந்திருந்தது.

`தென்னிந்தியாவின் புதிய ஏற்றுமதி-இறக்குமதிக்கான நுழைவுவாயிலாக எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இன்னும் மூன்று வருடங்களில் சுமார் 40 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான சரக்குகளைக் கையாளும் அளவுக்கு இந்த மண்டலத்திலேயே மிகப்பெரும் துறைமுகமாகக் காட்டுப்பள்ளியை உருவாக்குவதற்கு எங்கள் நிறுவனம் உறுதியேற்றுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சென்னை சேலம் பசுமைவழிச்சாலை

மேலே குறிப்பிட்டிருக்கும் இரண்டு வேறுபட்ட செயல்திட்டங்களுக்கும் என்ன தொடர்பு? சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை 100 சதவிகிதம் அதானிகளுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக அறுதியிட்டுச் சொல்கிறார், சூழலியலாளரும் எண்ணூர் படுகை பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளருமான நித்யானந்த் ஜெயராமன்.

“…அதுமட்டுமல்ல, சென்னை புறநகரைச்சுற்றி அமைக்கப்படும் அதிவேகப் நித்யானந்த் ஜெயராமன்பயணத்துக்கான வட்டப்பாதை நெடுஞ்சாலை (High Speed Circular transport Corridor), சென்னை தொடங்கி பெங்களூருவரை அமைக்கப்பட இருக்கும் தொழில்துறைக்கான நெடுஞ்சாலைத் திட்டம் (Chennai - Bengaluru Industrial Corridor), மாமல்லபுரம் தொடங்கி எண்ணூர் வரை 162 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்னை புறவழிச்சாலை, பொன்னேரியில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் `ஸ்மார்ட் சிட்டி' ஆகிய அத்தனையுமே அதானி மற்றும் ஜப்பானிய பெருமுதலாளிகளுக்கான வணிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட இருப்பதுதான். மேலும் தற்போது அதானி நிறுவனம் விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ள இடம் கடல்மட்ட உயர்வின் தாக்கம் அதிகம் இருக்கக் கூடிய பகுதி. இந்தத் துறைமுகத்துக்கான விரிவாக்க நடவடிக்கையை முன்னெடுக்கும் சூழலில் பழவேற்காடு ஏரி அருகில் இருக்கும் கடலுக்கான முகத்துவாரம் பாதிக்கப்படும். அதனால் பழவேற்காடு தொடங்கி கும்மிடிப்பூண்டிவரை, கடலாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. போர்த்திறன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அரசுத் திட்டங்கள் செயல்படுவதற்கு எவ்விதச் சட்டதிட்டங்களும் தடையாக இருக்காது. சாகர்மாலா மற்றும் பாரத்மாலா திட்டத்தின் கீழ் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் ஆற்றின் நடுவிலேயேகூட கட்டுமானங்களை எழுப்பிக்கொள்ளலாம், அதற்கு எவ்விதத் தடையும் இருக்காது. ஆனால், இதில் பொதுமக்களின் இருப்பிடம் உட்பட சுமார் 4,500 ஏக்கர் வரையிலான நிலம் இதனால் பாதிக்கப்படும். இதுகுறித்தான ஆதாரபூர்வ அறிக்கையை விரைவில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.

மத்திய அரசின் முன்னெடுப்பில் நாட்டிலேயே முதன்முதலாக பாதுகாப்புத் தளவாடப்  போக்குவரத்துக்கான பிரத்யேகப் பாதை (Defence Corridor), சென்னை - பெங்களூரு இடையே அமையவிருப்பதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்தார். இந்தியாவின் மிகப்பெரும் ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் நிறுவனங்களில் ஒன்று அதானி நிறுவனம். இத்தகைய சூழலில், தனியார் நலனுக்காகவே சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையும் எண்ணூர் துறைமுகப் பகுதிகளை நோக்கிய இதர நெடுஞ்சாலைகளும் திட்டமிடப்பட்டிருக்கிறதா? என்று கேட்க மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டோம். போக்குவரத்துத் துறை செயலாளர் அலுவலகம் `இதுகுறித்தான விவரம் தெரியவில்லை' என்று கருத்துக்கூற மறுத்து விட்டது. 

``பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி என ஐந்து மாவட்டங்களுக்கு இடையே 1,900 ஹெக்டேர் நிலப்பரப்பில் நிறுவப்பட இருக்கும் எட்டுவழிச் சாலையை சென்னையிலிருந்து சேலம் வரையில் அனைத்து மக்களுமே பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட தனிநபர் யாருக்காகவும் இந்தச் சாலை அமைக்கப்படவில்லை" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறியதை இங்கே ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்