பொருளாதார சர்ச்சையை கிளப்பும் விவசாய கொள்முதல் விலை உயர்வு! | economists opinion on minimum support price hike

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:27 (07/07/2018)

பொருளாதார சர்ச்சையை கிளப்பும் விவசாய கொள்முதல் விலை உயர்வு!

பொருளாதார சர்ச்சையை கிளப்பும் விவசாய கொள்முதல் விலை உயர்வு!

இதுவரை இல்லாத அளவுக்குப் பயிர்க் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP)  அதிக அளவில் பி.ஜே.பி அரசு உயர்த்தியிருக்கிறது எனப் பெருமிதத்துடன் சொல்கிறார், பிரதமர் மோடி. இந்த அறிவிப்பால் பணவீக்கம் அதிகரிக்கும் என அரசு ஆதரவு பொருளாதார வல்லுநர்கள் அதிருப்தியும் தெரிவித்திருக்கிறார்கள். 

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் விவசாயப் பயிர் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிக அளவுக்கு உயர்த்துவோம்; விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஒற்றை இலக்க சதவிகிதம் மட்டுமே கு.ஆ.விலை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் விவசாயிகள் குழு ஒன்றைத் திடீரெனச் சந்தித்த பிரதமர், கு.ஆ.விலையை உற்பத்திச்செலவைக்காட்டிலும் ஒன்றரை மடங்கு அதிகமான அளவு உயர்த்துவதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஜூலை 4 அன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூடி, கு.ஆ.விலை உயர்வை அறிவித்தது. 

அதன்படி, நெல், கரும்பு உட்பட 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை இரட்டை மடங்கு அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.1,750 ஆகவும், துவரம் பருப்புக்கு ரூ.225, பாசிப்பருப்புக்கு ரூ.1,400, உளுத்தம்பருப்புக்கு ரூ.200, நிலக்கடலைக்கு ரூ.440, சூரியகாந்தி விதைக்கு ரூ.1288, பருத்திக்கு ரூ.1,130, சோயாபீன்சுக்கு ரூ.349 போன்ற அளவுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. 

விவசாயி கொள்முதல்

இந்த உயர்வானது சராசரியாக இப்பயிர்களின் உற்பத்திச்செலவைவிட 66 சதவிகிதம் அதிகம் என்று மூத்த அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார். இந்த உயர்வை வரலாற்றுச் சாதனை என்று வர்ணித்துள்ள பிரதமர் மோடி, 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்கப்போவதாகவும் கூறியுள்ளார். 

அரசுத் தரப்பில் இந்தச் சாதனை பெருமிதம் ஒரு பக்கம் இருக்க, ஆதரவுவிலை அதிகரிப்பால் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று 'உச்' கொட்டவும் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், இதனால் நாட்டில் பணவீக்கம் ஏற்படலாம் எனப் பெரு நிதிநிறுவனங்கள் சார் பொருளாதார வல்லுநர்கள் அலறல் குரலில் சொல்கிறார்கள். 

இந்த அறிவிப்பின் கொண்டாட்ட அளவுக்கு விவசாயிகளுக்குப் பெரிய அளவு பலன் ஒன்றும் இல்லை என அதிருப்தி தெரிவிக்கிறார்கள், அவர்கள் தரப்பில். பெரும்பாலான விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முன்வைக்கும் ஒரே கருத்து, சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைப்படி மத்திய அரசு ஆதரவுவிலையை அதிகரித்திருந்தாலாவது விவசாயிகளுக்குப் பயன் கிடைத்திருக்கும் என்பதுதான்!

விவசாயி

அதென்ன சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரை? 

விவசாயிகளின் தற்கொலை போன்ற பிரச்னைகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கையளித்த வேளாண்விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம், குறைந்தபட்ச ஆதரவுவிலையைக் கணக்கிட ஒரு முறையை வகுத்துத் தந்தது. அதுதான் சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரை. 

விவசாய விளைபொருள்களுக்கு பொதுவாக இரண்டு முறைகளில் உற்பத்திச்செலவு நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்று, விதையின் விலை, கூலி, உரம், பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருள்களின் விலை மற்றும் பிற செலவுகளுடன், விவசாயக் குடும்பத்தின் கூலியையும் சேர்த்துக்கொள்வது. மற்றொன்று, இதனுடன் நிலத்தின் மதிப்பையும் சேர்த்து நிர்ணயிப்பது இரண்டாம் வகை. இந்த மதிப்பில் ஒன்றரை மடங்கு கூடுதலாக இருக்கும்படி குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என்று சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதைச் செயல்படுத்துமாறு கோரிதான் வடமாநிலங்களில் பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது இந்த இடத்தில் நினைவுகூரப்படவேண்டியது. 

மத்திய அரசின் அறிவிப்பில், நிலத்தின் மதிப்பையும் கணக்கில்கொண்டு அதாவது நிலத்தின் வாடகையையும் சேர்த்துதான் ஆதாரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அரசு அறிவிப்பின்படி, நெல்லுக்கான கு.ஆ.விலையானது சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்டிருந்தால், ரூ.2,340 ஆக இருக்கவேண்டும். ஆனால், அரசின் அறிவிப்பில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உத்தேச ஆதரவுவிலையாகக் குறிப்பிடப்பட்டிருப்பது ரூ.1,750. அதாவது, ரூ.590 குறைவாக இருக்கிறது. இதைப்போலத் துவரம் பருப்புக்கான விலையில் ரூ.1796.5 குறைகிறது என்கிறார்கள் வேளாண்மைப் புள்ளியியலாளர்கள். 

இந்த விவகாரம் குறித்து பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் கேட்டோம். 

கேள்வியை எதிர்பார்த்திருந்தவரைப் போலப் பேசியவர், ஒரே மூச்சில் பதிலளித்தார்.

கொள்முதல் ஆத்ரேயா

`` இது ஒன்றும் மத்திய அரசு வாரிவழங்கிவிட்ட பெரிய கொடை அல்ல. முன்னர் சுவாமிநாதன் ஆணையம் பரித்துரைத்தபடி இல்லை என்பது முக்கியமானது. விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பெரிய நன்மை பயக்காது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தபோதும் கலால்வரியை அரசு குறைத்தபாடில்லை. வறட்சி நீடிக்கிறது. உரம், பூச்சிமருந்துகள் போன்ற விவசாய இடுபொருள்களின் விலை அதிகரித்திருக்கிறது. குழந்தைகளின் கல்விச்செலவு அதிகரித்துள்ளது. இதை எதையும் கணக்கெடுக்காமல், ஆதரவுவிலையை அதிகரித்திருப்பதாகக் கூறுவது, பொருத்தம் இல்லை. இது அறிவிப்பு எனும் நிலையிலேயே பணவீக்கம் என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் பேசுவது, ரொம்பவும் அதிகம். இப்படிப்பட்டவர்கள் விவசாயிகளுக்கு விரோதமானவர்களாக மட்டுமே இருக்கமுடியும். ஒரு கிலோ விளைபொருள் ஒரு ரூபாய்க்கு வீழ்ச்சியடைந்தபோது அதனால் ஏற்படும் இழப்பைப் பற்றி இவர்கள் எல்லாம் ஏன் பேசவில்லை? பெருநிறுவனங்கள் செலுத்தவேண்டிய வரியையும் கடனையும் வசூலிக்காமல் இருக்கிறார்களே; அதனாலெல்லாம் நாட்டின் பணவீக்கம், நிதிநிலைமை பாதிக்கப்படவில்லையா? ஏதோ இந்த அறிவிப்பால் நாடே காடாகிவிடும் என்பதைப் போலச் சொல்வது அபத்தம்” எனக் காட்டமாகச் சொல்கிறார், பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா. 


டிரெண்டிங் @ விகடன்