அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் எவ்வளவு பேர்... கணிக்க முடியுமா? | decrease in public transport passengers

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (11/07/2018)

கடைசி தொடர்பு:12:17 (12/07/2018)

அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் எவ்வளவு பேர்... கணிக்க முடியுமா?

முந்தைய ஆண்டைவிட பயணிகளின் எண்ணிக்கை 22.1 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது என அரசின் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் எவ்வளவு பேர்... கணிக்க முடியுமா?

மிழக அரசுக்குச் சொந்தமான அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஓராண்டில் 23.1 கோடி பேர் குறைந்துள்ளது. 

அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து நிதித்துறையின் மூலம் தணிக்கை செய்யப்பட்டு, சட்டப்பேரவையில் அந்தத் தணிக்கை அறிக்கையானது வைக்கப்படும். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித்தனியாகச் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவை தொடர்பான தணிக்கை அறிக்கை கடந்த வாரம் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டன. அதில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மிக மோசமான நிலை புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது. 

கடந்த 2016-17 நிதியாண்டைப் பொறுத்தவரை 22,571 பேருந்துகள் இயக்கத்தில் இருந்தன. முந்தைய ஆண்டில் இயக்கப்பட்ட பேருந்துகளில் 562 பேருந்துகள் பழுதாகி ஒன்றும் செய்ய இயலாத நிலையில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன. முந்தைய ஆண்டில் பழைய பேருந்துகளுக்குப் பதிலாகவும் புதியதாகவும் 1,740 பேருந்துகள் வாங்கப்பட்டன; கடந்த நிதியாண்டிலோ 607 புதிய பேருந்துகள்தான் வாங்கப்பட்டன. இவையெல்லாம் தணிக்கையறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள். 

பயணிகளின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டைவிடக் கடந்த ஆண்டு மிக அதிக அளவில் குறைந்துவிட்டது. ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜனவரி 20 அன்று அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் வருவாய் எதிர்பாராதவகையில் குறைந்தது. அது தற்காலிகநிலைதான் எனப் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரும் வேறு சில அமைச்சர்களும் சமாளித்தனர். ஒரு வாரம்கூட ஆகவில்லை; அதற்குள் ஒட்டுமொத்த அரசுப் பேருந்துகளின் வருவாயும் குறைந்தது எனப் புள்ளிவிவரங்களுடன் தகவல்கள் வெளியாகின. 

சில பிரச்னைகளை ஒழுங்குபடுத்தினாலே ஓரளவுக்கு வருவாயைச் சரிக்கட்ட முடியும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் தொழிலாளர் சங்கத்தினரும் போராடிப் பார்த்தனர். யாரின் குரலுக்கும் அரசுத் தரப்பு செவிசாய்ப்பதுபோலத் தெரியவில்லை. 

அரசுப் பேருந்து பயணிகள்

அவர்கள் கூறிவருவது இதுதான்: உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்துகளின் கட்டணத்தைவிட தனியார் பேருந்துகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதால், அவற்றைப் பயணிகள் நாடுவது யதார்த்தமானது. அதிக கட்டணம் கொடுத்து அரசுப் பேருந்துகளில் பயணித்தாலும் அவற்றில் வசதிக் குறைவு, பழுதுகளால் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த அழகில் தனியார் பேருந்துகளுக்குச் சாதகமாக அரசுப் பேருந்து நேரத்தை விட்டுக்கொடுப்பதும் நடக்கிறது; இதைத் தடுக்க கறாரான நடவடிக்கை ஏதுமில்லை என நேர்மையான அதிகாரிகளே குறைபட்டுக்கொள்கிறார்கள். இதை எப்போதும் நிரூபிக்கத் தயார் எனச் சவால்விடாத குறையாகச் சொல்கிறார்கள் தொழிலாளர் சங்கத்தினர். 

இந்தச் சூழலில், முந்தைய ஆண்டைவிட பயணிகளின் எண்ணிக்கை 22.1 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது என அரசின் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டில் அரசுப் பேருந்துகளில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 653.35 கோடி. இதுவே கடந்த ஆண்டில் 631.25 கோடியாகக் குறைந்துவிட்டது. 

இதில் வியப்பளிக்கும் வகையில் விரைவுப் போக்குவரத்துக் கழகம், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 2015-16-ம் ஆண்டில் 2.69 கோடி பேராக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, 2016-17-ம் ஆண்டில் 2.72 கோடி பேராக அதிகரித்துள்ளது. சேலம் அ.போ.கழகத்திலோ 28.91 லட்சம் பயணிகள் அதிகரித்து, கடந்த ஆண்டில்  55.62 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 

கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட, சென்னை  மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 6.31 கோடி பேர் குறைந்து 171.84 கோடி பயணிகளும் விழுப்புரம் அ.போ.கழகத்தில் 6.01 கோடி பேர் குறைந்து 78.19 கோடி பயணிகளும் கும்பகோணம் கழகத்தில் 4.07 கோடி பேர் குறைந்து 104.9 கோடி பயணிகளும், கோவை கழகத்தில் 3.02 கோடி பேர் குறைந்து 90.21 கோடி பயணிகளும், மதுரைக் கழகத்தில் 3.03 கோடி பேர் குறைந்து 61.04 கோடி பயணிகளும் பதிவாகியுள்ளனர். 

நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் அளவிலேயே பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் 66,73,7,000-மாக இருந்த பயணிகளின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டில் 66,72,74,000-மாகப் பதிவாகியுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்