வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (31/07/2018)

கடைசி தொடர்பு:19:48 (31/07/2018)

காவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி! - பரபரப்பான 10 நிமிடங்கள்

அன்றாடம் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், ராகுல் காந்தி இன்று சென்னை வந்து, கருணாநிதியின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.

காவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி! - பரபரப்பான 10 நிமிடங்கள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி, குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜூலை 28-ம் தேதி அதிகாலை ரத்த அழுத்தம் குறைந்ததால், ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, பதைபதைத்துப் போன தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் அன்று முதல் ஆழ்வார்பேட்டை மருத்துவமனை வளாகத்தின் முன் குழுமத் தொடங்கினர். அதிலும், கடந்த 28-ம் தேதி இரவு, மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகத் தாமதம் ஆனதாலும், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வந்ததாலும் பதறிப்போன கட்சித் தொண்டர்கள், கண்ணீர்மல்க வாயிலில் காத்திருந்தனர். பின்னர் ஒருவழியாக சனிக்கிழமை இரவு 9.50 மணியளவில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின், உடல்நிலை சீரானதாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையின் அறிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தொண்டர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், மருத்துவர்கள் குழு கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் கட்சியினர் கலைந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியினர் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

ராகுல் காந்தி - ஸ்டாலின் - ஸ்டாலின்

இந்தச் சூழலில், தமிழக அமைச்சர்கள் தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்து வருகிறார்கள். அந்தப் பட்டியலில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இலங்கை அமைச்சர்கள், சிங்கப்பூர் தூதர் உள்ளிட்டோர் அடங்குவர். 

ஏறக்குறைய தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும், நடிகர் சங்கத்தினரும், நடிகர்கள், இலக்கியவாதிகள், மடாதிபதிகள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலத்தைக் கேட்டறிந்து செல்கிறார்கள். மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவமனைக்கு வரும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விவரித்து வருகிறார்கள். மருத்துவர்களும் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி எடுத்துரைத்து வருகிறார்கள். இந்தச் சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இப்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் மூத்தத் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஏற்கெனவே சென்னை வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்துச் சென்றனர். 

ராகுல் காந்தி - ஸ்டாலின் - கனிமொழி . திருநாவுக்கரசர்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்னர், 75 நாள்கள் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், ஏறக்குறைய எல்லா கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து, அவரின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தது நினைவுகூரத்தக்கது. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக அவரை வந்து பார்த்தார் ராகுல். ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததற்கும், இப்போது கருணாநிதி மருத்துவமனையில் இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற பல்வேறு நோய்கள், ஜெயலலிதாவுக்கு இருந்த நிலையில், அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, சிகிச்சை பெற்றார். ஆனால், ஜெயலலிதாவுக்கு இருந்த நோயின் தீவிரத்தால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் கடைசிவரை பலனளிக்காமல் போனது. நிறைவாக, டிசம்பர் 5-ம் தேதியன்று மாரடைப்பு ஏற்பட்டு ஜெயலலிதா, மரணம் அடைந்தார். 

அதே நேரத்தில், கருணாநிதியைப் பொறுத்தவரை, அவருக்கு வயோதிக அடிப்படையிலான உடல் பாதிப்புகள் மட்டுமே உள்ளன. சர்க்கரை நோயோ, இருதய நோயோ, ரத்தக்கொதிப்போ கருணாநிதிக்கு இல்லவே இல்லை என்பது அவருக்கான ப்ளஸ். 

கருணாநிதிக்கு அண்மையில் செய்யப்பட்ட ட்ரக்கியோஸ்டமி பொருத்திய சிகிச்சை காரணமாக, அவருக்கு சிறுநீர்க் குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் காய்ச்சல் அதிகரித்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டாலும், அவரின் ரத்த அழுத்தம் குறைந்ததால் கோபாலபுரம் வீட்டிலிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே, இப்போதுவரை கருணாநிதியின் உள்ளுறுப்புகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாலேயே அவருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அன்றாடம் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், ராகுல் காந்தி இன்று சென்னை வந்து, கருணாநிதியின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ராகுல் வந்து சேர்ந்தபோது, லேசான மழை தூறிக் கொண்டிருந்தது. கீழ்தளத்தில் ராகுல் காந்தியை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோரும் வந்திருந்தனர்.

ராகுல் காந்தி பேட்டி தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற ராகுல் காந்தி, கருணாநிதியைப் பார்த்தார். பின்னர், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துமனைக்கு வெளியே திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ``தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக இங்கு வந்தேன். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. தி.மு.க-வுடன், காங்கிரஸ் கட்சி நீண்டநெடுங்காலமாக உறவு கொண்டுள்ளது. எண்ணற்ற தமிழ் மக்களின் நல்ஆதரவை கருணாநிதி பெற்றுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். கருணாநிதி உடல் நலம் தேற வேண்டும் என்று சோனியா காந்தி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன்" என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது. 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும், காங்கிரஸ் கட்சி 6 சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக சென்னை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கூட்டணியின் தலைவராக கருணாநிதி இருந்தபோதெல்லாம், பலமுறை தமிழகம் வந்த ராகுல், அவரைச் சந்திக்கவில்லை. எனவே, ராகுலின் இந்தச் சந்திப்பு, கருணாநிதியின் உடல் நலத்தில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

திராவிட அரசியலில் நீடித்த வரலாறு படைத்தவரும், தி.மு.க-வின் தலைவராக 50 ஆண்டு காலம் பதவி வகித்து, கட்சியைக் கட்டிக்காத்தவருமான கருணாநிதி என்ற மாபெரும் தலைவரை, அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, எல்லா கட்சிகளின் தலைவர்களுமே சந்தித்து, அவரின் உடல்நலம் கேட்டு வருகிறார்கள். 'ஓய்வறியா சூரியன்' என்று கருணாநிதியை அவருடைய கட்சியின் தொண்டர்கள் பாராட்டி வர்ணிப்பதைப் போன்று அவர் எப்போது உதித்தெழுவார் என்று மிகுந்த ஆவலுடன் தி.மு.க. தொண்டர்கள், எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கருணாநிதி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதே கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பமாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்