கவிதா கைது… சிலை கடத்தல் வழக்குகள் சி.பி.ஐ-க்கு மாற்றம்… மிரளும் தமிழக அரசு!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவையே தமிழக அரசு கலைக்கும் அளவிற்கு கவிதாவின் கைது சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர் சர்ச்சையில் உற்சவர் சிலை! 

கவிதா கைது… சிலை கடத்தல் வழக்குகள் சி.பி.ஐ-க்கு மாற்றம்… மிரளும் தமிழக அரசு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவராக ‘சோமாஸ் கந்தர்’ அருள்பாலிக்கிறார். ஆகம விதிப்படி ஒரு கோயிலில் ஓர் உற்சவர் சிலைதான் இருக்க முடியும். ஆனால், 100 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை, 2009-ல் காஞ்சி மடத்தால் செய்து தரப்பட்ட சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை ஒன்று, 2015-ம் ஆண்டு முத்தையா ஸ்தபதி, கூடுதல் ஆணையர் கவிதா மற்றும் ஆணையரால் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை ஒன்று என மொத்தம் 3 உற்சவர் சிலைகள் இந்தக் கோயிலில் இருக்கின்றன. இது ஆகம விதிகளுக்கு முரண்பாடானது. இந்து அறநிலையத்துறை சார்பாகச் செய்யப்பட்ட புதிய சிலைகளில் தங்கம் கலக்கவில்லை எனவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரின் மகன்கள் டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோர் இந்து அறநிலையத்துறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவந்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் தொடர்நடவடிக்கை இந்து அறநிலையத்துறையே அதிரச் செய்துள்ளது.

சிலை கடத்தல் வழக்குகள்!

1992-ம் ஆண்டு இந்தக் கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு பள்ளியறை சிவன் - பார்வதி சிலைகள் களவாடப்பட்டுள்ளன. அப்போது சிவகாஞ்சி காவல் நிலையத்தினரால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் மாயமான சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் அளித்த அறிக்கையின்படி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதேபோல 1993-ம் ஆண்டு ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள சிறிய கந்தர் சிலை அறுத்து எடுக்கப்பட்டுக் களவாடப்பட்டது. இதற்கும் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிவில், `கண்டுபிடிக்க முடியவில்லை' என்று காவல்துறையினர் அறிக்கை கொடுத்ததால், விசாரணை முடித்து வைக்கப்பட்டது. தற்போது அந்தச் சிறிய கந்தர் சிலை எங்குள்ளது எந்த வெளிநாட்டு மியூசியத்துக்குக் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட புலன் விசாரணைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்த மியூசியத்தைச் சேர்ந்தவர்கள் சிறிய கந்தர் சிலையைத் தருவதாகவும் கூறியுள்ளார்கள்.

காணாமல் போன ஆகம விதிகள்!

பழைய சோமாஸ் கந்தர் சிலை

பழைமையான சோமாஸ்கந்தர் சிலையில் முக்கிய அங்கங்களான முகம், நெஞ்சு, தொடை என எப்பகுதியிலும் பின்னம் ஏற்படவில்லை. வழிபாட்டில் இருந்து வந்த அந்தச் சிலையில், கை விரல் நகம், காது நுனி பகுதிகளில் மட்டும் லேசான சேதம் இருந்தது. இதைக் காரணமாக வைத்து 2009-ம் ஆண்டு ஒரு சோமாஸ்கந்தர் சிலையும் ஏலவார் குழலி சிலையும் செய்தனர். சிலையில் உள்ள பெரிய அங்கங்கள் சேதமடைந்தால் மட்டுமே புதிய சிலை செய்ய வேண்டும். இல்லையென்றால், பழைய சிலையைச் சரிசெய்து வழிபடலாம் என ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால், தொன்மையான சிலையை ஒதுக்கிவிட்டு புதிய சிலை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கைகள்!

இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ள கவிதா மற்றும் ஒரு சில ஸ்தானிகர்கள் ஒன்று சேர்ந்து, 'தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை பின்னமாகிவிட்டது' என்று கடந்த 2015-ல் ஒரு அறிக்கை கொடுத்திருந்தனர். அப்போது தொன்மையான சோமாஸ் கந்தர் சிலையைப் பார்வையிட்ட முத்தையா ஸ்தபதி, பார்வைக்கு75 விழுக்காடு வரை தங்கம் இருப்பதாகவும் பழைய சிலையை வைத்தே வழிபடலாம் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரே 2015-ல் புதிய சிலை செய்ய முரணான கருத்துரு வழங்கி இருப்பது சர்ச்சைக்குரியது. முத்தையா ஸ்தபதியின் கருத்துருவைக் கொண்டு ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோர் 2015-ல் 50 கிலோ எடையில் சோமாஸ்கந்தர் சிலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்கள்.

புதிய சிலைகளில் தங்க மோசடி!

புதிய சோமாஸ் கந்தர் சிலை

ஆணையில் குறிப்பிட்டுள்ள 50 கிலோ சிலைக்குப் பதிலாக 111 கிலோ எடையில் புதிய சோமாஸ் கந்தர் சிலை செய்யப்பட்டுள்ளது. சிலை அதிக எடையில் இருந்தால்தான் அதிகளவில் தங்கம் பெறமுடியும் எனச் சிலை செய்தவர்கள் நினைத்திருக்கிறார்கள். அதுபோல் 2016-ல் எவ்வித சேதமும் இல்லாத தொன்மையான ஏலவார்குழலி அம்மன் சிலைக்கு மாற்றாகப் புதிய சிலை செய்ய ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோர் உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்த உத்தரவின் பெயரில், 63 கிலோவில் புதிய ஏலவார்குழலி அம்மன் சிலை செய்யப்படுகிறது. புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை (111 கி.கி.), ஏலவார் குழலி சிலை (63கி.கி.) என மொத்தம் 174 கிலோவில் இரண்டு சிலைகள் செய்யப்பட்டதிலும் ஆணையர் உத்தரவுப்படி 5 சதவிகித தங்கம் கலக்கப்பட வேண்டும். அப்படியானால், 8.77 கிலோ கிராம் இந்த இருசிலைகளிலும் தங்கம் இருக்க வேண்டும்.

இந்தச் சிலைகளைப் பரிசோதனை செய்த ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தச் சிலைகளில் எள்ளளவும் தங்கம் இல்லை என அறிக்கை வழங்கி இருக்கிறார்கள். இதற்கிடையில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிரடி கிளப்பிய சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினர்!

பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்த பின்னர், சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உத்தரவுப்படி சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர். பின்பு இந்த வழக்கு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்த தீவிரம் காட்டினார்.

ஆனால், கடந்த 7 மாதங்களாக இந்த வழக்கின் விசாரணைக்குக் கூடுதல் ஆணையர் கவிதா ஒத்துழைக்கவில்லை. இதன் அடிப்படையில்தான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால்,நேற்று கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

எல்லாமே கமிஷனர்தான்!

கவிதா, இந்து அறநிலைத்துறை கூடுதல் ஆணையர்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா, ‘எல்லா உத்தரவுகளையும் கமிஷனர்தான் செய்தார். நான் வெறும் ஃபார்வர்டு மட்டுமே செய்தேன்’ எனக் கூறினார். இதையடுத்து கவிதாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திருச்சி மத்திய சிறையில் கவிதா சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

புதிய வழக்கு பீதியில் அறநிலையத்துறை!

முத்தையா ஸ்பதி

இதே கோயிலிலிருந்து தொன்மையான இன்னொரு சோமாஸ்கந்தர் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 15-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கொடுக்கப்பட்ட இந்தச் சிலையில் தெலுங்கினால் ஆன குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சிலை காணாமல் போனது குறித்து எவ்வித வழக்கும் இதுவரை பதியப்படவில்லை.

இந்த விவகாரமும் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. இந்தச் சிலை காணாமல் போனது குறித்துச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்கு பதிய இருக்கிறார்கள். ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி, தற்போது வீட்டுச்சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர்களிடம் நடத்தும் விசாரணைகளால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பீதியில் இருக்கிறார்கள்.

சிக்கும் அதிகாரிகள்; மிரளும் தமிழக அரசு!

கவிதா கைது செய்யப்பட்டதால் மேலும் பல அதிகாரிகளும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் இதில் சிக்குவார்கள் என்ற அச்சம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பொன்.மாணிக்கவேல் அதிரடிகளைத் தமிழக அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவைக் கலைக்கவும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கை முடிவை ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அறிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!