``இனிமேல் தகவல் ஆணையமும் மத்திய அரசுக்கு கைகட்டி சேவகம் செய்யும்!" கொதிக்கும் செயற்பாட்டாளர் | "RTI will work for Central government hereafter"

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (05/08/2018)

கடைசி தொடர்பு:07:52 (06/08/2018)

``இனிமேல் தகவல் ஆணையமும் மத்திய அரசுக்கு கைகட்டி சேவகம் செய்யும்!" கொதிக்கும் செயற்பாட்டாளர்

``இனிமேல் தகவல் ஆணையமும் மத்திய அரசுக்கு கைகட்டி சேவகம் செய்யும்!

`` `எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது தானா அடங்கும்' என்பது பழமொழி. இந்தச் சொலவடையே மத்திய தகவல் ஆணையத்தின்மீது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்குப் பொருந்தும்'' என்று சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

மத்திய தகவல் ஆணையத்தின் அதிகாரங்களையும் அந்த ஆணையத்தின் உள்ள பிரதிநிதிகளின் சம்பளத்தையும் மறு சீரமைப்புச் செய்ய, மத்திய அரசு திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இப்படியான ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க அரசியல்ரீதியான சில காரணங்களை முன்வைக்கிறார்கள், அவர்கள்.

``பிரதமர் மோடியின் கல்வித் தகுதியைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தனி நபர் ஒருவர் கேட்க, அதனைத் தகவல் ஆணையமும்  கொடுப்பதற்கு முடிவு எடுத்ததே இப்படியான தாக்குதலை மத்திய அரசு தொடுக்கக் காரணம்'' எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மோடி

இதுகுறித்து பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ``மத்திய தகவல் ஆணையம் என்பது  தன்னிச்சையான ஓர் அமைப்பாகும். இது, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு இணையான ஓர் அமைப்பாகும். இந்த ஆணையத்தின் நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளை மத்திய அரசு தற்போது செய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, `தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005'  சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அது, மத்திய - மாநில தலைமை ஆணையர்களின் சம்பளம் மற்றும் அதிகாரங்களை மாற்றி அமைக்கும் சட்டத் திருத்தமாகும். அந்தச்  சட்டத் திருத்தத்தை வரும் மழைக்காலத் கூட்டத்தொடரில் கொண்டுவர உள்ளது மத்திய அரசு. இதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு தயார் செய்து ரகசியமாக வைத்துள்ளது. பொதுவாக, மத்திய அரசு ஒரு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவுசெய்திருந்தால், அதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு அதன்மீதான கருத்துகளைக் கேட்டறியும். ஆனால், இந்தச் சட்டத் திருத்த வரைவு அறிக்கையை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. மேலும், என்ன திருத்தம் கொண்டுவரப் போகிறது என்ற எந்த ஒரு வெளிப்படையான தகவலையும்  மத்திய  அரசு கசியவிடாமல் வைத்துள்ளது. 

மோடி - தகவல் ஆணையத் பிரதிநிதிகள்  

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் சைலேஷ் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், `தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நரேந்திர மோடியின் படிப்பு குறித்த தகவலை மத்திய தகவல் ஆணையம் கொடுக்க முன்வந்ததையடுத்தே இப்படியான மோசமான  நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது' எனக் கூறியுள்ளார். `தகவல் ஆணையத்தில் பணியாற்றுபவர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்தான் இதுவரை சலுகைகள் செந்தில் ஆறுமுகம் - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதனை தற்போது மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் கொண்டுவரும் முயற்சியே இந்த நடவடிக்கை என்று சைலேஷ் காந்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மத்திய அரசே, மத்திய - மாநிலத் தகவல் தலைமை ஆணையர்களின் சம்பளத்தை முடிவு செய்யுமானால், அவர்கள் எப்படி நேர்மையாகப் பணியாற்றுவார்கள். இது, மிகப்பெரிய அளவிலான பிளாக் மெயில் இல்லையா? இன்னும் தெளிவாகச் சொன்னால்... இது, மத்திய தலைமை தகவல் ஆணையத்தை மிகச் சைலண்டாக மிரட்டும் செயலாகும்.  

விரைவில் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வர உள்ள நிலையில், அந்த நேரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல்வாதிகளின் வரவு - செலவுக் கணக்குகள் பற்றிய தகவலைப் பெறுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாகவும் இது இருக்கிறது. மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர்களின் சம்பளத்தையும், அதிகாரத்தையும் மத்திய அரசு முடிவு செய்யுமானால், இது முற்றிலும் அவர்களுடைய வெளிப்படையான நடவடிக்கையைப் பறிக்கும் செயலாகும். இதுகுறித்து வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால், `அவர்களது  சம்பளத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும்போது, இந்த ஆணையத்தில் உள்ள பிரதிநிதிகள் எந்த நிபந்தனையும் இன்றி, மத்திய அரசுக்கு கைகட்டி சேவகம் பார்க்கும் சேவகர்களாகிறார்கள் என்பதே உண்மை' என்றார், செந்தில் ஆறுமுகம் மிகத் தெளிவாக.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close