வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (07/08/2018)

கடைசி தொடர்பு:19:13 (07/08/2018)

`தேசத் துரோகியின் அடையாளம்..!’ - பிரதமர் மோடியைப் பகடி செய்யும் மம்தாவின் கவிதை

`தேசத் துரோகியின் அடையாளம்..!’  - பிரதமர் மோடியைப் பகடி செய்யும் மம்தாவின் கவிதை

ஸ்ஸாம் மாநிலத்தில் பி.ஜே.பி ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ள தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் பதிவு அடிப்படையில், அங்கு வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர், 1960-ம் ஆண்டுகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் சமயத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும் 1970-களில் பங்களாதேஷ் பிரிவினையின்போது அடைக்கலமாகவும் இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களுக்கு சட்டப்படியான பதிவுகள் இல்லையென்றாலும், இந்தியாவில் பல ஆண்டுக்காலமாக வசித்தவர்கள் என்கிற அடிப்படையில், அவர்களுக்கு பங்களாதேஷ் செல்வதும் ஏற்புடையதாக இல்லை. இதனால், தேசியக் குடியுரிமைப் பதிவுப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், தற்போது வேறு மாநிலத்துக்கு முறையற்ற வகையில் இடம்பெயர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் அப்படி வருபவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையையும் மேற்கொண்டுவருகின்றன. மற்றொரு பக்கம் அஸ்ஸாம் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களில் பலரின் பெயர்களும் குடியுரிமைப் பதிவில் விடுபட்டுள்ளன. இதனால், இந்தப் புதிய திட்டம்குறித்து சர்ச்சையும் எழுந்துள்ளது. குடியுரிமை குறித்தான இறுதிப் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் பட்டியல் வெளியாகும் நிலையில், அவர்கள் பங்களாதேஷுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என குடியுரிமைப் பதிவாளர் கூறியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், அஸ்ஸாம் மாநிலத்துக்குப் புலம் பெயர்ந்தவர்களுக்கான சிறப்பு அட்டை வழங்கப்பட்டது, இருந்தும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பல மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆதார் அடையாள அட்டைத் திட்டம், அஸ்ஸாமில் செயல்படுத்தப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் குடியுரிமைத் திட்டத்துக்குப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. அதன் நம்பகத் தன்மைகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறார்கள். 

அடையாளம் (பரிச்சய்)

குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, அஸ்ஸாம் குடியுரிமைப் பதிவேடு பட்டியலுக்கு எதிராகவும், அதற்குக் காரணமான ஆட்சியாளர்கள் குறித்தும் பகடி செய்யும் வகையில் கவிதை ஒன்றை இந்தியில் 'பரிச்சய்' என்கிற தலைப்பில் எழுதியுள்ளார். கவிதையின் மொழிப்பெயர்ப்பு கீழே... 

அடையாளம் அஸ்ஸாம் குடியுரிமை பற்றிய மம்தா கவிதை

அடையாளம் (परिचय)

 

உங்கள் குடிப்பெயர் என்ன? 

தந்தை பெயர் என்ன?

நீங்கள் பேசும் மொழி என்ன?

உங்கள் மதம் என்ன? 

உங்கள் உணவு என்ன?

ஓ...! உங்களுக்குத் தெரியாதா? 

அப்படியென்றால் நீங்கள் செல்லலாம்;

உங்களுக்கு இந்த நிலத்தில் இடமில்லை...

 

நீங்கள் யார்?

உங்கள் அடையாளம் என்ன?

நீங்கள் தங்கியிருப்பது எங்கே?

நீங்கள் படித்தது எங்கே?

சொல்லுங்கள்...

இல்லையென்றால் நீங்கள் இந்தத் தேசத்தின் துரோகி.

 

நீங்கள் யார்?

நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்?

உங்கள் முன்னோர்களின் பெயர்கள் இங்கே பதிவாகியுள்ளதா? 

உங்கள் ஆடை அடையாளம் என்ன?

உங்கள் வங்கிக் கணக்கு என்ன?

ஓ! அப்படியொன்றும் இல்லையா?

நிச்சயம் நீங்கள் எங்களுக்கு ஆகாதவர்...

 

நீங்கள் ‘மனதின் குரலைக்’ கேட்கிறீர்களா?

இருந்தும் ஆட்சியாளருக்கு எதிராக எழுதுகிறீர்களா?

உங்கள் அலைபேசி ஆதாருடன் இணைக்கப்பட்டதா?

நீங்கள் 'பே.டி.எம்மில்' இன்னும் உறுப்பினராகவில்லையா?

எல்லாவற்றையும் பதிவு செய்துவிட்டீர்கள்தானே?

நீங்கள் சுரண்டல்வாதிகளை எதிர்க்கிறீர்களா?

ஆம் என்றால் உங்களுக்கு இடமில்லை,

ஏனெனில் நீங்கள் போராட்டக்காரர்.

 

நீ என்ன சாப்பிடுவாய்?

எங்கெல்லாம் செல்வாய்?

உன் மதம் வேறா?

நீ என்ன தலித்தா?

நீ என்ன கிறிஸ்துவனா? 

நீ என்ன சிறுபான்மைக்காரனா? 

நீ  ராவணனை எதிர்ப்பவனா?

அப்படியென்றால் உனக்கான இடம் இது இல்லை..

 

ஆட்சியின் அதிகாரம் தெரியுமா உனக்கு?

சுரண்டலுக்குத் துணை நிற்பவர்களைத் தெரியுமா உனக்கு?

குற்றவாளியாக்கப்படுவாய் நீ...

 

ஆட்சிக்குத் துரோகியா நீ?

தேசத்துக்கும் துரோகிதான் நீ...

இங்கிருந்து இப்போதே வெளியேறவும்..!

- மம்தா 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்