வெளியிடப்பட்ட நேரம்: 09:12 (14/08/2018)

கடைசி தொடர்பு:09:51 (14/08/2018)

"அழகிரியால்தான் தென் மாவட்டங்களில் தி.மு.க. பலம் பெறும்!" ஆதரவாளர் மன்னனின் லாஜிக்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியில் குருஷேத்திரப் போர் ஆரம்பமாகியுள்ளது என்றே கூறலாம். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருந்த சவால்கள் பட்டியலில், கருணாநிதி உயிருடன் இருந்தபோதே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரியின் நிலைப்பாடு பின்னாளில் என்னவாக இருக்கும் என்ற கேள்வி இருந்துவந்தது. இந்த நிலையில், சென்னையில் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில், "தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள்" என அதிரடியாகத் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 7-ம் தேதி காலமானார். அவருடைய உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பின், தி.மு.க-வின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று அரசியல் களத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மு.க.அழகிரி அளித்த பேட்டி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது. மு.க.அழகிரி, "அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டுள்ளேன். அது என்ன ஆதங்கம் என்பது தற்போது தெரியாது. வரும் நாள்களில் தெரியவரும். தலைவர் கலைஞரின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க விசுவாசிகளும் என்னை ஆதரிக்கிறார்கள். எனவே, இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்" என்றார்.  

அழகிரி

"உங்களுடைய ஆதங்கம் கட்சித் தொடர்பானதா, இல்லை குடும்பம் தொடர்பானதா" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சித் தொடர்பானதுதான்" என்றார் அழகிரி. இதைத் தொடர்ந்து "தி.மு.க-வின் செயற்குழு நாளை கூடுகிறதே" என்று கேட்டதற்கு, "அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் இப்போது தி.மு.க-வில் இல்லை" என்றார்.

மன்னன்

"தி.மு.க-வில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவீர்களா" என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அதுகுறித்து என் ஆதங்கத்தைக் கலைஞரிடம் தெரிவித்துள்ளேன்" என்று கூறிவிட்டுச் சென்றார் அழகிரி. அவருடைய இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. அழகிரியின் பேட்டி குறித்து அவருடைய ஆதரவாளர் மன்னனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். "தலைவர் கலைஞரின் உண்மை விசுவாசி, அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆதரவாளன் என்ற முறையில் அண்ணனை தி.மு.க-வில் மீண்டும் சேர்த்து, கட்சியில் செயல்பட அனுமதிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் தி.மு.க-வை தூக்கி நிறுத்த வேண்டுமானால், அது அழகிரியால் மட்டுமே முடியும். ஒரு கையை மட்டும் தட்டினால் ஓசை எழாது. இரண்டு கைகளும் இணைந்து ஓசை எழுப்பினால் எட்டுத் திக்கும் ஒலிக்கும். மேலும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டுமானால், கட்சிக்குள் அழகிரியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கட்சித் தலைமை அதுபற்றி சிந்தித்துச் செயல்பட வேண்டும்" என்றார்.

திமுக  பிரச்னை

இதைத் தொடர்ந்து, " 'அழகிரி அவரின் ஆதங்கத்தைக் கருணாநிதியிடம் சொல்லி இருக்கிறேன்' என அழகிரி பேட்டி அளித்துள்ளாரே, அது குறித்து உங்கள் கருத்து என்ன" என்றோம் "தலைவர் கலைஞர், மரணம் அடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே உடல்நலம் குன்றி, ஓய்வில் இருந்த காரணத்தால், அழகிரியின் எண்ணத்தைச் செயல்படுத்தக்கூடிய சூழல் இல்லாமல் இருந்தது. தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, கட்சி மேலிடத்தில் எதுவும் பேச முடியாது என்பதால், அழகிரி அமைதி காத்து வந்தார். தலைவர் இப்போது மரணம் அடைந்துவிட்டார். தற்போது செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியை இயக்கிக்கொண்டிருக்கிறார். கட்சியை வழிநடத்தும் அவர், தன் அண்ணனை இணைத்துக்கொண்டு கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" என்றார். 

மேலும், "அழகிரியைக் கட்சியில் இணைத்துக்கொள்ள மாட்டார் என்று பரவலாகச் சொல்லப்படுகிறதே" என்று கேட்டபோது, "அழகிரியைக் கட்சியில் இணைத்துக்கொண்டால் அவர் தென்மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கட்சிக்காகப் பாடுபடுவார். தி.மு.க இப்போது உள்ள பலத்தைவிட மேலும் வலுப்பெறும். எனவேதான், அழகிரியைக் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறோம்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்