அமெரிக்க, பிரெஞ்சு சுதந்திரத்தைவிட இந்திய சுதந்திரம் பெரிது. ஏன்? - விகடனின் 1947 நாஸ்டாலஜியா

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வெளியான ஆனந்த விகடன் மக்களிடத்தில் சுதந்திரத்தை அன்று எடுத்துச் சென்றது. அதில் `இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்கான சுதந்திரம் மட்டுமல்ல; உலக நாடுகளுக்கான நம்பிக்கை இந்தச் சுதந்திரம்' என்று தலையங்கம் எழுதியிருந்தது.

அமெரிக்க, பிரெஞ்சு சுதந்திரத்தைவிட இந்திய சுதந்திரம் பெரிது. ஏன்? -  விகடனின் 1947 நாஸ்டாலஜியா

இன்று 72 வது சுதந்திர தினம், கோட்டையில் முதல்வர் கொடியேற்றுகிறார், டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். நாம் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளும் நாளாக இது உள்ளது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கிடைத்த சுதந்திர நாட்டில் நாம் 72 ஆண்டுகளாகப் பயணிக்கிறோம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வெளியான ஆனந்த விகடன் மக்களிடத்தில் சுதந்திரத்தை அன்று எடுத்துச் சென்றது. அதில் `இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்கான சுதந்திரம் மட்டுமல்ல; உலக நாடுகளுக்கான நம்பிக்கை இந்த சுதந்திரம்' என்று தலையங்கம் எழுதியிருந்தது.

``உலக சரித்திரத்தில் இதுவரையில் முக்கியமாகக் கருதப்பட்ட சம்பங்களில் அமெரிக்கா சுதந்திரம் பெற்றதை, பிரெஞ்சு புரட்சியையும், ரஷ்யாவில் தோன்றிய சமூக எழுச்சியையும் குறிப்பிட்டுவந்தது. ஆனால், அந்தச் சம்பவங்களைவிட இந்தியச் சுதந்திரமடைந்த சம்பவமே உலகத்தில் மகத்தான நிகழ்வாகியுள்ளது. இதற்கு காரணம், இந்திய விடுதலையிலிருந்து உலகின் எதிர்காலம் நம்பிக்கையளிக்கக் கூடிய தன்மைபெற்றுவிட்டதுதான் எனில் மிகையாகாது. 

சுதந்திரம்

அமெரிக்கா சுதந்திரம் பெற்றதனாலோ, பிரெஞ்சு நாட்டிலொ புரட்சி ஏற்பட்டதனாலோ உலகம் கண்ட பலன்கள் ஏதுமில்லை. அவ்வாறன்றி சுதந்திர இந்தியாவின் மூலம் தங்களுக்கு நிச்சயமான பலன் உண்டு என்பதை உலகோர் உணர்ந்து, நல்லநாள் ஆரம்பமாவதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆகையினாலேயே ஆகஸ்ட் 15-ம் தேதி உலகோர்க்கு நன்மையை நிர்ணயிக்கும் தினமாகவும், உலக சரித்திரத்துக்கு மகத்தான புது ஆரம்பமாகவும் குறிப்பிடப்படும். உலக சரித்திரத்தில் 150 ஆண்டுக்காலம் தொடர்ந்து போராடிய தேசம் எதுவுமில்லை. அப்பேர்பட்ட ஒரு போராட்டத்தில் உலகின் 5 ல் ஒரு பகுதியினராகவுள்ள இந்திய மக்கள் ஈடுபட்டு வந்தார்கள், தலைமுறை தலைமுறையாக இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள், உலகத்திற்கே ஓர் உவமை காட்டுவது போல் தர்மயுத்தம் புரிந்தார்கள், அதர்மத்தை அஹிம்சை வெல்லும் என்ற தர்ம வாக்கியத்தை நிறைவேற்றிக் காட்டினார்கள். அதன் மூலம் அதர்மத்தைக் கண்டு அஞ்ச வேண்டாமென்பதை உலகுக்குச் செயலில் நிரூபித்து விட்டார்கள்'' என்று தனது தலையங்கத்தில் அன்றே எழுதியிருந்தது ஆனந்த விகடன். 

சுதந்திரம்

72 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பொருளாதாரமும், உலகுக்கான மனிதவள தேவைகளும் இந்தியர்களை சார்ந்திருக்கும் என்பதை அன்று உள்ள சூழலே விளக்கியுள்ளது. 72 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ள இந்தியா உலக அரங்கில் சர்வதேச அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. உலக நாடுகளுக்கான மனித வள மையமாக இந்தியா இன்று விளங்குகிறது. இதனை அன்று இருந்த சூழலே உலகுக்கு உணர்த்தியுள்ளது என்பதைதான் அந்தத் தலையங்கம் பிரதிபலித்தது. 

இந்தச் சுதந்திரத்தை அன்று இருந்தவர்கள் எப்படிக் கொண்டாடினர் என்றும் அதில் விளக்கப்பட்டிருந்தது. தெருவெங்கும் கோஷம் எழுப்பி, ஆலய மணிகள் ஒலித்து, பறவைகள் பாடி, ஆடி மரங்கள் அசைந்து ஓசை எழுப்பி மலர்கள் நறுமணம் பரப்பின என்று சுதந்திரக் காற்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அட்டைப்படத்தில் யானை மீது இந்தியக் குடிமகன் தேசியக்கொடியோடு அமர்ந்து வருவது போன்றும், அதனை விகடனார் வரவேற்பது போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஓவியத்தை, ஓவியர் கோபுலு வரைந்திருப்பார். அந்த இதழில் வரையப்பட்டிருந்த கேலிச்சித்திரத்திலும் இந்திய அதிகாரம் ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியர்கள் கைக்கு மாறியுள்ளது என்பது விளக்கப்பட்டிருக்கும். சுதந்திரம் கிடைத்து இரண்டு நாளில் வெளியான இந்த இதழ் முழுவதும் சுதந்திர வாசம் வீசும். 1947 நாஸ்டாலஜியாவுக்குள் அழைத்துச் செல்லும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!