கேரளப் பேரிடரில் ஒன்றிணைந்த கட்சிகள்... துயர் துடைப்பதில் அரசியல் வேண்டாம்! | All the parties should work together to save Kerala from the disaster

வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (18/08/2018)

கடைசி தொடர்பு:19:28 (18/08/2018)

கேரளப் பேரிடரில் ஒன்றிணைந்த கட்சிகள்... துயர் துடைப்பதில் அரசியல் வேண்டாம்!

மத்திய அரசு இதுபோன்ற பேரிடர் சமயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.

கேரளப் பேரிடரில் ஒன்றிணைந்த கட்சிகள்... துயர் துடைப்பதில் அரசியல் வேண்டாம்!

னமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு உடனடியாக 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதற்காக, திருவனந்தபுரத்துக்கு நேற்றிரவு சென்றடைந்த பிரதமர், அங்கிருந்து இன்று காலை கொச்சி கடற்படைத் தளத்துக்கு வந்தார். அங்கு கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, மாநிலத்தின் வெள்ள நிலைமை பற்றி ஆலோசனை நடத்திய பிரதமர், உடனடியாக மாநிலத்தின் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் வழங்கும் என்று அறிவித்தார். மேலும், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் பற்றி முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்த கனமழை, அதைத் தொடர்ந்து கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம், பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவற்றால் மக்கள் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் முதல்வர் மற்றும் அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினர். இதற்கிடையே, கேரள மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 364-ஐத் தாண்டிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த 100 கோடி ரூபாய் தவிர, தற்போது மேலும் 500 கோடி ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்கப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள கேரளாவுக்கு, அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் தேவையான உணவு தானியங்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். 

மேலும் காப்பீட்டு நிறுவனங்கள், கேரள மாநிலத்தில் சிறப்பு முகாம்கள் அமைத்து, நிலைமையை மதிப்பீடு செய்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், உடைமைகளை இழந்தவர்களுக்கும் விரைந்து இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உடனடியாகத் தேவையான உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அப்போது வலியுறுத்தினார். 

கேரளா வெள்ளம் - மோடி பார்வையிட்டார்

விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறக்கூடிய காப்பீட்டுத் தொகையை விரைந்து அளிக்க ஆவன செய்யுமாறும் பிரதமர் குறிப்பிட்டார். கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

அதைத் தொடர்ந்து ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் ஆகியோருடன் ஹெலிகாப்டரில் சென்று, வெள்ளச் சேதங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். மீட்புப் பணிகள் நடைபெறுவது பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் அளிக்கவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். கேரள மாநிலத்தில் வெள்ளப் பாதிப்புகளை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் சென்று பார்வையிட்டார். அப்போது, கேரள மாநிலத்துக்கு 100 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என்று அவர் அறிவித்தார்.

மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் கேரள மக்களுக்கும் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்களின் சொத்துகளையும் உடைமைகளையும் இழந்திருப்பது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரைந்து சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளைச் சீர் செய்வதற்கு ஏதுவாக, அம்மாநில அரசுக்குத் தேவையான உதவிகளைத் தடையின்றி வழங்க, அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் என்ற மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகம், பி.ஜி.சி.ஐ.எல் நிறுவனங்களின் அதிகாரிகளுக்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

வெள்ளத்தில் குடிசை வீடுகள் அடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு, பிரதமர் மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று மோடி அறிவித்தார். பிரதமரின் பயணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "கேரள மாநிலத்தில் நிலவும் வெள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இத்தகையப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், நிலைமையைச் சமாளிக்க மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்ந்து பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லி திரும்பினார்.

கேரள மாநிலம் கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராதவகையில், தற்போது கனமழை பெய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் கேரளாவுக்கு உதவ வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு, இயற்கைப் பேரிடரைக் கருத்தில் கொண்டு, உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், அம்மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

மத்திய அரசு இதுபோன்ற பேரிடர் சமயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை, தற்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. என்றாலும், அங்கு பேரிடர் என்றவுடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள், பி.ஜே.பி மாநில நிர்வாகிகள் என அனைத்துக் கட்சியினரும் ஓரணியில் திரண்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடியும் தன் பங்குக்கு, நிதியுதவி அறிவித்ததோடு நிற்காமல், நாட்டு மக்கள் அனைவரும் கேரளாவுக்கு உதவ வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர் ஏற்படும் நேரத்தில் மக்களின் இயல்பு நிலைதான் முக்கியமே தவிர, தேர்தல் கணக்கு அல்ல, என்பதை அனைத்துக்கட்சிகளும் உணர்ந்து செயல்படுவதாகவே தெரிகிறது. இதுபோன்ற ஆரோக்கியமான அரசியல் வளரட்டும்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்