வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (22/08/2018)

கடைசி தொடர்பு:19:31 (22/08/2018)

`இரண்டாம் வகுப்புவரை நோ வீட்டுப்பாடம்..!’ என்ன சொல்கிறார்கள் பள்ளித் தரப்பும் பெற்றோர்களும்!

வீட்டுப்பாடம் பிள்ளைகளின் மாலை நேரங்களை முடக்கிப் போட்டுவிடக் கூடாது. தினமும் வீட்டுப்பாடம் கொடுத்தாலும் ஒரு பக்கம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

`இரண்டாம் வகுப்புவரை நோ வீட்டுப்பாடம்..!’ என்ன சொல்கிறார்கள் பள்ளித் தரப்பும் பெற்றோர்களும்!

ரண்டாம் வகுப்பு வரை, குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. இது தொடர்பான உத்தரவை மத்திய அரசும் பிறப்பிக்க வேண்டும்' என்று  உத்தரவிட்டது. தற்போது, இந்த உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட பள்ளிகள், பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள்? 

வீட்டுப்பாடம்

``என் பையன் யு.கே.ஜி படிக்கும் வரை ஸ்கூலில் எந்த வீட்டுப்பாடமும் கொடுத்ததில்லை. இப்போது, முதல் வகுப்பு. கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதனால்தான் ஒரு நாளில் அரை மணி நேரமாவது ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்கிறான். இதையும் கொடுக்கக் கூடாதுன்னா, அவன் மூன்றாம் வகுப்பு போகிறப்போ, படிப்பே பெரிய சுமையா மாறிடுமோன்னு பயமா இருக்கு. எல்.கே.ஜி-யில் ஆரம்பிச்சு இரண்டாம் வகுப்பு வரை நான்கு வருஷம் வீட்டுப்பாடம் வழக்கமே இல்லாமல், திடீர்னு மூன்றாம் வகுப்பில் வீட்டுப்பாடம் செய்யும்போது கஷ்டமா இருக்குமே. திணறிப்போயிட மாட்டாங்களா'' எனக் கேள்விக்குறியுடன் தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார் சென்னையைச் சேர்ந்த கவிதா.

சென்னை, பாடி பகுதியைச் சேர்ந்த வனிதா, ''வீட்டுப்பாடம் கொடுத்தால்தான், பிள்ளைகளுக்குத் தினமும் சிறிது நேரம் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஒரு பக்கத்துக்கு எழுதும் அளவுக்குத்தான் தருவார்கள். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் டிக்டேஷன் வேர்ட்ஸ் மாதிரி சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட் இருக்கும். இப்போதிலிருந்தே இதையெல்லாம் பழக்கினால்தான், மூன்றாம் வகுப்பில் சைக்கிள் டெஸ்ட், யூனிட் டெஸ்ட், மன்த்லி டெஸ்ட் எனச் சமாளிக்க முடியும். ஆனால், வீட்டுப்பாடம் பிள்ளைகளின் மாலை நேரங்களை முடக்கிப்போட்டுவிடக் கூடாது. தினமும் வீட்டுப்பாடம் ஒரு பக்கத்துக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். ஒரே நாளில் ஐந்தாறு பக்கங்களுக்குக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஓவர் லோடு இல்லை. என் பையனை எல்.கே.ஜி-யிலிருந்தே தினமும் 10 நிமிடம் படிக்கவைத்துப் பழக்கியிருக்கிறேன். இப்போது அரை மணி நேரம் படிக்கிறான். ஆனால், என் பெண் விஷயத்தில் இதை நான் ஃபாலோ செய்யவில்லை. அவளை இரண்டாவது படிக்கும் வரை ஃபிரீயாக விட்டதால், தற்போது மூன்றாம் வகுப்பு வந்ததும் உட்கார்ந்து படிக்க கஷ்டப்படுகிறாள். அதனால், தனியாக டியூஷனுக்கு அனுப்புகிறோம். என்னைக் கேட்டால், அதிக வீட்டுப்பாடம் தருவதாகப் புகார் வரும் பள்ளிக்கூடங்களின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கலாம்'' என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

வனிதா பிள்ளைகளுடன்

சென்னையின் புகழ்பெற்ற ஒரு பள்ளியின் முதல்வர், ``நீதிமன்றம் ஆர்டர் போட்டவுடனே வீட்டுப்பாடங்கள் தருவதை நிறுத்திட்டோம் மேடம்'' எனப் பதற்றப்பட்டார். ''உங்கள் கருத்தை அறிவது மட்டுமே எங்கள் நோக்கம்'' என்றதும், பெயரை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேச ஆரம்பித்தார். 

''நீதிமன்ற உத்தரவு வந்ததுமே எங்கள் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் மீட்டிங் நடத்தினோம். 'தினமும் வீட்டுப்பாடம் எழுதுவதற்காகவாவது அரை மணி நேரம் படிப்பார்கள். இப்போது அந்த நேரத்திலும் டி.வி, செல்போன் கேம்ஸ் என இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்று பெற்றோர்கள் வருத்தப்பட்டார்கள். என்னுடைய கருத்தைக் கேட்டால், வீட்டுப்பாடமே செய்து பழகாத பிள்ளைகள் அடுத்தடுத்த வகுப்புகளில் எழுதுவதில், படிப்பதில் பின்தங்கலாம். இந்த விஷயத்தில் நீதிமன்றம், பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைத்துப் பேசியிருந்தால், நடுநிலைமையாக முடிவெடுத்திருக்க முடியும்'' என்றார்.

''கின்டர் கார்டன் வரை வீட்டுப்பாடம் தராமல்தான் இருக்கிறீர்கள். அதன்பிறகு முதல் வகுப்பிலிருந்து ஹோம்வொர்க், கிளாஸ் டெஸ்ட், டீச்சர் போர்டில் எழுதிப்போடுவதைப் பார்த்து பிள்ளைகள் நோட்டில் வேகவேகமாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் என் மகள் செய்தாள். இப்படி ஒன்றாம் வகுப்பில் திடீரென செய்த விஷயங்களை, ஏன் மூன்றாம் வகுப்பிலிருந்தும் செய்ய முடியாது? அப்படிச் செய்ய முடிகிறபோது நீதிமன்றம் சொல்வதுபோல மூன்றாம் வகுப்பிலிருந்தே வீட்டுப்பாடங்கள் தரலாமே'' என்பது அனிதா என்கிற ஓர் அம்மாவின் கேள்வி. இதையும் சொல்லி அந்தப் பள்ளி முதல்வரிடம் கருத்து கேட்டோம். 

''கின்டர் கார்டன் வரைக்கும் குழந்தைகள் ஃபிரீயாக இருக்க வேண்டிய வயது. அதனால்தான் எந்த வீட்டுப்பாடமும் தருவதில்லை. உங்கள் கேள்விக்கு ஓர் உதாரணத்துடன் பதில் சொல்கிறேன். மூன்றாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இருக்கும் ஒரு பாடத்தைப் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டுமென்றால், ஒன்றாம் வகுப்பிலிருந்தே அவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களின் அறிமுகம் வேண்டும். வீட்டுப்பாடமும் அப்படித்தான். ஒன்றாம் வகுப்பிலிருந்தே பழகிவிட்டால், மூன்றாம் வகுப்புக்குப் போனதும் சுமையாக இருக்காது'' என்கிறார்.

குழந்தைகளின் நலன் கருதி முன்னெடுக்கப்படும் ஒரு விஷயமே, பின்னாளில் அவர்களின் நலனுக்குச் சுமையாகிவிடக் கூடாது. எனவே, இதுகுறித்து இன்னும் விரிவாக விவாதிப்பது சமூகத்தின் கடமை!


டிரெண்டிங் @ விகடன்