வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (28/08/2018)

கடைசி தொடர்பு:08:53 (28/08/2018)

குடிக்கிற தண்ணி மஞ்சளா வருது... அதிகாரிகள் அலட்சியம்...- சென்னை நகரின் பேரவலம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 80 சதவீதம் மக்கள் குடிநீருக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். வேளாண் பாசனத்துக்கு 3-ல் 2 பங்கு மக்கள் நிலத்தடி நீரை நம்பியுள்ளனர். தமிழகத்தின் 60 சதவீத மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுகின்றது.

குடிக்கிற தண்ணி மஞ்சளா வருது... அதிகாரிகள் அலட்சியம்...- சென்னை நகரின் பேரவலம்

நாம் குடிக்கும் நீர் மஞ்சளாகவும் கறுப்பாகவும் துர்நாற்றத்தோடு இருந்தால், அதை நம்மால் குடிக்க முடியுமா. அந்த நீரைத்தான் சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ளக் குழந்தைகள் பெண்கள் உட்பட அனைவரும் பல மாதங்களாக இந்த நீரையே பயன்படுத்தி வருகிறார்கள்.  சென்னை சிட்லப்பாக்கம் ஏரி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப்பகுதியின் நிலத்தடி நீர் முழுதும் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கின்றனர்.

மாசடைந்திருக்கும்  நிலத்தடி  நீர்

இந்தியாவில் 50 சதவிகித நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என்கிறது மத்திய அரசின் ஆய்வு முடிவு. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்களின் அளவு அதிகமாகியிருக்கின்றது.  டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமாக புளூரைடு, நைட்ரேட்கள் கலந்துள்ளன என்கின்றது ஆய்வு முடிவுகள். மேலும், இந்தியா முழுவதும் 386 மாவட்டங்களில் நைட்ரேட், 335 மாவட்டங்களில் புளூரைடு, 301 மாவட்டங்களில் இரும்பு, 212 மாவட்டங்களில் உப்பு, 153 மாவட்டங்களில் ரசாயனம், 30 மாவட்டங்களில் குரோமியம், 24 மாவட்டங்களில் காட்மியம் ஆகியவை நிலத்தடி நீரில் அளவிற்கு அதிகமாகவே உள்ளன என்றும் சில மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளதாகவும் மத்திய அரசின் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

சிட்லப்பாக்கம் ஏரிக்கு அருகே குப்பைக் கிடங்கு

குடிக்கும் நீரில் இத்தனை ரசாயனங்கள் கலந்திருந்தால், அது உயிருக்கே ஆபத்தாக முடியும். குடிநீரில் நைட்ரேட் கலந்தால் இரத்தத்தின் திறனில் குறைவு ஏற்படும், ஆர்சனிக் கலந்திருந்தால் தோல் புற்றுநோய், சிறுநீர்ப்பை, சிறுநீரக மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவின்  நிலத்தடி நீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்கள் போன்றவற்றின் அளவு கவலை தரும் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது மத்திய அரசு. 

சென்னை சிட்லப்பாக்கம் ஏரி

 ஆனால் மாசடைந்துவரும் நிலத்தடிநீரை பாதுகாக்க அரசு பெரியளவில் முயற்சிகள் எடுக்கவில்லை  என்பது தான் வேதனையான விஷயம். தமிழகத்தைப் பொறுத்தவரையில்  80 சதவீதம் மக்கள் குடிநீருக்கு நிலத்தடி நீரையேப் பயன்படுத்துகின்றனர். வேளாண் பாசனத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். தமிழகத்தின்  60 சதவீத மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுகின்றது. அதனால் தான் இந்திய அளவில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கின்றது. பொதுப்பணித்துறையின் நிலத்தடிநீர் பாதுகாப்புத் துறை இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுமா என்று தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழகத்தின் நிலத்தடி நீர் மிக மோசமான அளவில் மாசடைந்து வருகின்றது. அதற்குத் தமிழகத்தின் தலைநகரும் விதிவிலக்கல்ல.

சென்னை சிட்லபாக்கம் ஏரி

 சென்னை, தாம்பரம் அருகிலுள்ள சிட்லப்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாலும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் மாசடைந்துவருகிறது. இதனால் அந்தப்பகுதியின் நிலத்தடி நீரும் பரவலாக மாசடைந்திருக்கிறது. சிட்லப்பாக்கம் ஏரி சுற்றியுள்ளப் பகுதியில்  சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சிட்லப்பாக்கம் பெரிய ஏரி முக்கிய நீராதாரமாக  உள்ளது. ஆனால், இந்த ஏரியை முறையாகப் பராமரிக்காமல் கழிவுநீர் வடிகாலாக மாற்றப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றானர். சிட்லப்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்யவேண்டும்  பஞ்சாயத்து அதிகாரிகள் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் கொடுத்தும் எந்தப்பலனும் இல்லாததால், சின்ன குழந்தைகள் முதல் அந்தப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் இதுவரை எந்த அதிகாரிகளும் இதற்குத் தீர்வு சொல்லவில்லை.

ஏரி நீர்

''சிட்லப்பாக்கம் ஏரியில் கழிவுநீர் நேரடியாகக் கலக்கின்றது. அருகிலிருக்கும் குப்பைக்கிடங்கால் ஏரியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக  உள்ளாட்சி அமைப்புகளிடம் புகார் கொடுத்தோம். ஆய்வுகூட நடத்தவில்லை. பல மாதங்களாக நடவடிக்கை இல்லாததால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு எங்களின் நிலையைக் கொண்டு சென்றோம். ''மழை நீர் வடிகால் மூலம் மழைநீர் மட்டுமே ஏரியில் கலக்கப்படுகின்றது; கழிவுநீர் கலக்கப்படவில்லை'' என்று சி.எம் செல்லில் இருந்து பதில் வருகிறது. இந்தப் படங்களைப் பாருங்கள், உங்களுக்கேப் புரியும். குடிக்கிற தண்ணீர் மஞ்சள் கலரில் வருகிறது. நாங்கள் குடிக்கும் நீரைத்தான் பாட்டில்களில் கொண்டுவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். ஆனாலும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக் காலத்தில் ஏரியில் இருந்து கழிவு நீர் தான் வெள்ளமாக வீதிகளுக்கு வருகிறது. இதனால் இங்கு வாழும் மக்களின் அரோக்கியமும் கேள்விக்குறியாகி இருக்கிறது'' என்கிறார் சிட்லபாக்கத்த்தில் வசிக்கும் ராமநாதன்.

சிட்லப்பாக்கம் ஏரி மிக மோசமாக மாசடைந்திருக்கிறது. ஏரியில் ஆகாயத்தாமரை அதிக அளவில் வளந்திருக்கின்றது. அருகிலிருக்கும் குப்பைக் கிடங்கால் நீர் மாசடைகின்றது. நீர் நிலைகளைப் புதிதாக உருவாக்க வேண்டும் என்று பேசிவரும் காலகட்டத்தில், நீர்நிலைகள் மாசடைவதிலிருந்தும்  மீட்டுப் பாதுகாக்க வேண்டும். இதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்