வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (28/08/2018)

கடைசி தொடர்பு:16:16 (28/08/2018)

``அப்பாவை யானை பிடிச்சதை நான் பார்த்தேன்!” யானை - மனிதன் எதிர்கொள்ளலால் நிகழ்ந்த விபரீதம்

அசோக் இருக்கிற பகுதியில் நாய் ஒன்று யானையைத் துரத்தியிருக்கிறது. யானையும் நாயைத் துரத்தியிருக்கிறது. 

``அப்பாவை யானை பிடிச்சதை நான் பார்த்தேன்!” யானை - மனிதன் எதிர்கொள்ளலால் நிகழ்ந்த விபரீதம்

யானைகளுக்கும் மனிதர்களுக்குமான எதிர்கொள்ளல் அதிகமாக நடைபெறும் இடங்களுள் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியும் ஒன்று. கூடலூரைச் சுற்றியுள்ள சேரம்பாடி, கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி, பந்தலூர், அய்யன் கொல்லி ஆகிய பகுதிகளில் யானைகள் தாக்கி மனிதர்கள் இறப்பது சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல், பந்தலூரைச் சுற்றியிருக்கிற பகுதிகளில் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என நண்பர் ஒருவர் கூறியிருந்தார். காரணம், 'யானைகள்'. கடந்த 14 ம் தேதி ஐயன்கொல்லி என்கிற இடத்தில் அசோக் என்கிற 32 வயது ஆட்டோ ஓட்டுநரை யானை தாக்கிக் கொன்றிருக்கிறது என்கிற தகவல் கிடைத்தது. நேரடியாகச் சென்று என்ன நடந்திருக்கிறது என்பதை விசாரித்தேன். 

மாலை நேரம் எப்போதும் ஏதோ ஒரு யானை சாலையில் நிற்கும் என்று சொன்னதால் சேரம்பாடியிலிருந்து மாலை 5:30 மணிக்கு எச்சரிக்கையுடன் ஐயன்கொல்லி என்கிற இடத்துக்குக் கிளம்பினோம். சாலையில் நடந்து வந்த ஒருவரிடம் ``அண்ணே இங்க யானை எங்க இருக்கும்” எனக் கேட்டதற்கு ``தம்பி யானை எப்போது வரும்னே சொல்ல முடியாது, ஆனா ரோட்டுல திடீரென்று வந்து நிக்கும், இந்த ரோட்ல 6 மணிக்கு மேல் பைக்ல போறது ஆபத்து, இருட்டுறதுக்கு முன்னாடி இங்க இருந்து போய்டுங்க” என எச்சரித்தார். நாங்கள் போகும் போதே மணி 6 நெருங்கியிருந்ததால் அசோக்கின் வீடு இருக்கிற இடத்துக்கு எங்களைப் போக வேண்டாமென்று எச்சரித்தார்கள். சேரம்பாடியில் இருக்கிற ஒரு கடையில் இருந்தவர் ``ரிஸ்க் எடுக்குறீங்க தம்பி” என்றார். ஏனெனில், இந்த வருடத்தில் மட்டும் யானையால் இறந்து போனவர்கள் எண்ணிக்கை 10 க்கும் மேலாக இருக்கிறது. ``யானை சாலையில்  நின்றால் கூட தெரியாது. பார்த்து பத்திரமா போங்க” எனச் சொல்லி அனுப்பினார். ஐயன்கொல்லி பகுதியில் இருந்த மக்களிடம் விசாரித்ததில் ஒரு வாரத்துக்கு முன்பு சப்பந்தோடு என்கிற இடத்தில் யானை தாக்கி அசோக் இறந்த தகவல் கிடைத்தது. அவரது வீட்டைக் காட்டுவதற்கு எங்களோடு வர யாரும் தயாராக இல்லை. பைக்கில் இப்போது போவது ஆபத்து என்று மட்டுமே கூறினார்கள். முன்பின் தெரியாத சாலையில் மிகுந்த கவனத்துடன்தான் அசோக் வீட்டைத் தேடிச் சென்றோம். 

யானை தாக்குதலில் பலியான அசோக்கின் குடும்பம்

அசோக் அக்கா பவானியிடம் பேசினோம். ``அசோக் எப்பவும் நைட் ஆட்டோவை இங்க நிறுத்திட்டு நடந்துதான் வீட்டுக்குப் போவான். வீட்டுக்குப் போகிற வழியில் யானை இருந்தாலும் இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்ல, அன்னைக்கு அவன் வீட்டுக்குப் போனதுக்கு அப்புறமாகத்தான் இப்படி நடந்துடுச்சு” என்றவர், அசோக்கின் மனைவி கவிதாவிடம் பேசச் சொன்னார். கவிதாவிடம் எப்படிக் கேட்பது என்கிற தயக்கம் இருந்தது. ஏனெனில் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறார். இழப்பு மிகப் பெரியதாக இருக்கிறது. அறிமுகம் ஆனதும் அவரே நடந்ததை விவரித்தார். 

அசோக்குக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். மனைவி மற்றும் அம்மாவோடு வசித்து வருகிறார். கடந்த 14-ம் தேதி இரவு 7 மணிக்குத் தன்னுடைய ஆட்டோவை அவரது அக்கா வீட்டில் நிறுத்திவிட்டு எப்போதும் போலவே வீட்டுக்குச் சென்றிருக்கிறார். உணவு உண்ட பிறகு இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்திருக்கிறார்கள். 9:30 மணிக்கு அசோக் உறங்கச் செல்லுகிற வேளையில் வீட்டுக்குப் பின் ஏதோ சத்தம் கேட்க அசோக் எழுந்து சென்று பார்த்திருக்கிறார். வீட்டின் பின் பகுதியில் யானை நிற்பதைப் பார்த்ததும் பதறிப் போயிருக்கிறார். யானை சிறிது நேரத்துக்குப் பிறகு சென்று விடும் என நினைத்திருக்கிறார். ஆனால், யானை ஆக்ரோஷமாக வீட்டைத் தாக்க ஆரம்பித்துள்ளது. குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் யானையின் செயலால் பயந்து போன அசோக், குழந்தைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி மனைவி மற்றும் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். 

யானை ஆக்ரோஷமாக வீட்டின் பின் பகுதியைத் தன்னுடைய தந்தத்தால் குத்தி உடைத்திருக்கிறது. தூறல் போட்டுக் கொண்டிருந்ததால் மகனைத் தூக்கிக் கொண்டு முதலில் அசோக்கின் மனைவி கவிதா வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். இரவு நேரத்தில் அசோக்கின் வீட்டில் நடப்பது வெளியே யாருக்கும் தெரியாமல் போயிருக்கிறது. கவிதா தன்னுடைய கணவரை வந்துவிடும்படி அழுது கொண்டே அழைத்திருக்கிறார். ஆனால், மழை காரணமாக எந்தப் பதிலும் அசோக்கிடம் வரவில்லை. மாறாக வீட்டின் பின் பகுதியை யானை உடைத்துத் தள்ளுகிற சத்தம் கேட்டிருக்கிறது. அசோக்கின் அம்மா பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கவிதாவுக்குப் பின்னால் சென்றிருக்கிறார். 

வீட்டிலிருந்து வெளியேறிய கவிதாவும் அம்மாவும் பக்கத்தில் இருந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். முப்பது நிமிடங்களுக்கு மேலாக அசோக் வராததால் ஒட்டு மொத்த குடும்பமும் பதறியிருக்கிறது. அசோக்கின் வீட்டுக்கு மேலே இருக்கிற வீட்டில் இருப்பவர்கள் ``யானை போயிருச்சு, யாருக்கும் ஏதும் ஆகலேயே எனக் குரல் கொடுத்திருக்கிறார்கள். பதிலுக்கு கவிதா ``அசோக் அங்க இருக்கிறாரா?" எனக் கேட்டிருக்கிறார். எதிர் முனையில் வரவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள்.

யானையிடமிருந்து தப்பிக்க அசோக் எங்கேனும் ஒளிந்திருப்பார் என நினைத்து எல்லோரும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். யானை அசோக்கைத் தாக்கியதை அசோக்கின் அம்மாவும் அவரது 10 வயது மகளும் பார்த்திருக்கிறார்கள். ``அம்மா, அப்பாவை யானை பிடிச்சதை நான் பார்த்தேன்” எனச் சொல்லி மகள் அழுதிருக்கிறாள். யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்த அசோக்கின் அம்மா திடீரென அழ ஆரம்பித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அசோக் திரும்பி வராததால் கவிதா, வீட்டுக்குச் சென்று பார்க்க, அங்கு வீடு முற்றிலும் சேதமடைந்து உருக்குலைந்து கிடக்கிறது. கவிதாவுக்கு வீட்டைவிட அசோக்கே முக்கியம் என்பதால் பதறியடித்து தேட ஆரம்பிக்க, அதற்குள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வந்துவிடுகிறார்கள். அசோக்கை வீடு முழுவதும் தேடிக் கிடைக்கவில்லை என்றதும், யானை இடித்துத் தள்ளிய பக்கம் டார்ச் உதவியுடன் தேடிப் பார்த்ததில் அசோக்கின் உடல் வாசலில் கிடந்திருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு வீடு இடிந்த நிலையில் இன்னும் அப்படியே இருக்கிறது. 

அசோக்கின் வீடு

நாங்கள் போயிருந்த அன்று கவிதா அவர்கள் அந்த வீட்டிலிருந்து தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு எருமாடு என்னும் பகுதியிலிருக்கும் அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தார். அசோக்கின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற எல்லோருமே யானை குறித்த பயத்தில்தான் இருக்கிறார்கள். ஆறு மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வருவதில்லை என்கிறார்கள். கிராமச் சாலைகள் எல்லாம் வெறிச்சோடியே கிடக்கின்றன. 

இது குறித்து பிதர்காடு வனச் சரக அலுவலர் மனோகரனிடம் பேசினோம். ``அசோக் குடியிருந்த வீடு மூங்கில் காடுகள் இருக்கிற பகுதியில் இருக்கிறது. ஆற்றின் ஓரம் என்பதால் யானைகள் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அசோக் இருக்கிற பகுதியில் இருக்கிற நாய் ஒன்று யானையைத் துரத்தியிருக்கிறது. யானையும் நாயைத் துரத்தியிருக்கிறது. அதில் பயந்து போன நாய் அசோக்கின் வீட்டுக்குள் புகுந்திருக்கிறது. நாயைப் பின் தொடர்ந்து வந்த யானை அசோக்கின் வீட்டுக்கு வந்திருக்கிறது. அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அசோக் எதிர்பாராத விதமாக யானையிடம் சிக்கியிருக்கிறார். அவரது குடும்பத்துக்கு உடனடியாக 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம். அரசின் நிவாரண தொகை விரைவில் கிடைக்க உதவி செய்கிறோம்” என்கிறார். மேலும் ``உள்ளூர் மக்களிடம் யானைகள் குறித்த விழிப்புஉணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். யானை வருகிற தகவலை அறிந்து அதற்கு ஏற்ப மக்களைப் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியிருக்கிறோம்” என்றார். 

கூடலூரில் யானையால் தாக்கப்பட்டு இறந்து போன ஒருவரின் வீட்டைத்தான் பார்க்கப் போகிறோம் என நினைத்துச் சென்ற பயணம் அதைவிட மிகப் பெரிய வலியைக் கொடுத்து திருப்பி அனுப்பியிருக்கிறது. யானைகளின் வரவை முன்னமே தெரிந்துகொள்கிற தொழில் நுட்பத்தைக் கூடலூரில் இருக்கிற மக்களுக்கு அறிமுகப்படுத்தினால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.