``முக்கிய அதிகாரிகள் மீது விரைவில் எப்.ஐ.ஆர்..!" குட்கா வழக்கில் திருப்பம்

"மாநிலத்தில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள் வசம் இந்த வழக்கு முழுமையாக இல்லை. இந்த வழக்கின் முழுமையான ஆவணங்கள் அனைத்தும் டெல்லி அதிகாரிகளிடம் உள்ளது. அதில்  ஒரு சில பகுதிகள் மட்டுமே இங்குள்ள அதிகாரிகளிடம் உள்ளது. அதனால் இந்த வழக்கு நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது."

``முக்கிய அதிகாரிகள் மீது விரைவில் எப்.ஐ.ஆர்..!

வறுகளைத் தட்டிக் கேட்பவர்களே தவறு செய்துவிட்டு, குற்றவாளிகளாக நிற்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு. குட்கா சப்ளை செய்யப்படுவதற்குச் சுதந்திரமாக வாயிற்கதவுகளைத் திறந்துவிட்டு அப்படியான சாபக்கேட்டில் நிற்கிறார்கள் நம்மை ஆளக்கூடியவர்கள். 2016-ம் ஆண்டு திருவள்ளூரில் மாதவ ராவ் என்பவரின் குடோனில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்தான் இந்தத் தகவல் அம்பலமானது.

அங்கு கைப்பற்றப்பட்ட லெட்ஜரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை அதிகாரிகள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன்  ஆகியோருக்குப் பணம் கொடுத்ததற்கான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்லப்பட்டன. இந்த விவகாரத்தை அப்போதைய தலைமைச் செயலாளரும், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையராகவும் இருந்த ராம மோகன ராவை வருமானத் துறை அதிகாரிகள் சந்தித்து தெரிவித்தனர். ஆனால், அந்தப் புகார் தொடர்பாக அவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து வந்த தலைமைச் செயலாளரும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையருமான கிரிஜா வைத்தியநாதனுக்கு இந்த விவகாரம் போனது. அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் யாருமே நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. அங்கு கடந்த மூன்று  வருடங்களாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டிருந்த நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படியான சூழலில், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ கையில் எடுத்தது.

மாநிலத்தில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த வழக்கு இருந்தாலும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் தீவிரமாக  விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. முதல் தொடக்கமாக குட்கா குடோன் உரிமையாளரான மாதவ் ராவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அதற்கு முன்னதாக ஆரம்பத்தில் இருந்தே... இந்த வழக்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகிறது அறப்போர் இயக்கம்.

ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் இயக்கம் , குட்கா வழக்கு

அதன் காரணமாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனை அழைத்து, சி.பி.ஐ அதிகாரிகள் பேசியுள்ளனர். இந்த நிலையில், ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் பேசியபோது, ``கடந்த வாரம் குட்கா வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்துப் பேசினர். இந்த வழக்கில் தொடர்புடைய எங்களிடம் இருந்த ஆதாரங்களை வழங்கியிருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் உள்ள சில சந்தேகங்கள் குறித்தும் கேட்டனர். அது குறித்து தெரிந்த அனைத்துத் தகவல்களையும் தந்துவிட்டு வந்துள்ளோம். அதிகாரிகள்  பேசியதையும், விசாரணை கோணத்தையும் பார்க்கும்போது விரைவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கலாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார், மிகத் தெளிவாக. 

இந்த நிலையில் வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வரும் ஒருவர், ``மாநிலத்தில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள் வசம் இந்த வழக்கு முழுமையாக இல்லை. இந்த வழக்கின் முழுமையான ஆவணங்கள் அனைத்தும் டெல்லி அதிகாரிகளிடம் உள்ளது. அதில்  ஒரு சில பகுதிகள் மட்டுமே இங்குள்ள அதிகாரிகளிடம் உள்ளது. அதனால் இந்த வழக்கு நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் மாதவ் ராவிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்களையே தற்போதும் சி.பி.ஐ அதிகாரிகள் உறுதி செய்திருப்பார்கள். அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட பண விவரத்தின் மீதான விசாரணையாக அது இருக்கும் என்றே கருதத் தோன்றுகிறது. குறிப்பாக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது; அது எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டது; அந்தப் பணம் தற்போது எங்கே உள்ளது; மாதவ் ராவிடம் இருந்து பணத்தை வாங்கியவர்கள் அதை எங்கே முதலீடு செய்திருக்கிறார்கள்; மேலும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில்தான் இந்த விசாரணை இருந்திருக்கும். அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது இன்னும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு சி.பி.ஐ  தரப்பில் சொல்லப்படுவதோ.. உடனடியாக முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்துவிட்டால், விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்களையோ.. அல்லது பெயர்களையோ சேர்க்க முடியாமல் போகும் என்பதால், விசாரணையை  முழுமையாக முடித்துச் சேர்க்கலாம் என இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் இந்த மூன்று பேர் மீதும் எப்.ஐ.ஆர் (FIR) பதிவாக வாய்ப்பு உள்ளது" என்றார்.

குட்கா வழக்கு, சி.பி.ஐ-யிடம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!