இன்னமும் காவல்துறை சார்ஜ் ஷீட் கூட ஃபைல் செய்யவில்லை... அயனாவரம் சிறுமி இப்போது எப்படியிருக்கிறாள்?

``இந்தச் சிறுமியும் என்ஜாய் செய்தாள் என்று சொல்லித்தான் இந்தக் குடும்பத்தை இப்படி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் அந்த அப்பார்ட்மென்ட்வாசிகள்.'' 

யனாவரம் சிறுமி இப்போது எப்படி இருக்கிறார். அந்த அப்பார்ட்மென்ட்டில் வேலை செய்த 17 நபர்கள் 7 மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான அந்தச் சிறுமி, நிகழ்ந்த கொடுமையிலிருந்து மனதளவிலும், உடலளவிலும் எந்த அளவுக்கு மீண்டு வந்துள்ளார். அவருடைய குடும்பம் தற்போது எப்படி இருக்கிறது. அயனாவரம் சிறுமி மற்றும் அவளுடைய குடும்பத்தினருக்கு உதவிகள் செய்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியிடம் பேசினேன்.

அயனாவரம்

``தினமும் இரவுகளில் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது. காரணமே சொல்லாமல் அழுகிறாள். அவளுடைய அடி மனதில் தேங்கியிருக்கும் பயம் இன்னமும் நீங்கவில்லை. கிட்டத்தட்ட தினமுமே உளவியல் நிபுணரிடம் அழைத்துப்போகும் நிலை. அவள் பள்ளிக்குப் போக மறுக்கிறாள். அப்பார்ட்மென்ட் குழந்தைகளை எதிர்கொள்ளத் தயங்குகிறாள். வேறு வழியில்லாமல் அவளுடைய பெற்றோர் அவளை வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வைத்திருக்கிறார்கள். நான்தான், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பூங்கா என வெளியிடங்களுக்கு அழைத்துப்போகுமாறு சொல்லியிருக்கிறேன். அந்தப் பெற்றோருக்குத் தொடர்ந்து நம்பிக்கையளித்து வருகிறேன். தவறு செய்யாத நாம் ஏன் இந்தச் சமூகத்தைக் கண்டு கூனிக் குறுக வேண்டும், நாம் தலை நிமிர்ந்து நடப்போம். உங்கள் குழந்தைக்கு நடந்தது ஒரு ஆக்ஸிடென்ட். அந்தத் தழும்பு தானாக மறைந்து விடும். அதைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்.

பாலியல் துன்புறுத்தலில் இந்த உலகம் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகப் பார்த்து வருகிறது. அதற்கு இந்தக் குடும்பத்தைச் சுற்றியிருப்பவர்களும் விதிவிலக்கல்ல'' என்று வருந்துகிறார் அப்சரா.

``நான் முழுக்க முழுக்க அந்தச் சிறுமியின் குடும்பத்துடன்தான் இருக்கிறேன். அவளை கவுன்சலிங் அழைத்துச்செல்கிறேன். சமீபத்தில்தான் அவர்களுக்கு வேறு ஏரியாவில் வாடகைக்கு வீடு கிடைத்திருக்கிறது. நடந்த பிரச்னைகளால் சிறுமியின் அப்பாவும் பிசினஸைச் சரியாகக் கவனிக்கவில்லை. அதனால், பொருளாதாரரீதியிலும் குடும்பம் கஷ்டப்படுகிறது. இந்தச் சிறுமியையும் வேறு பள்ளியில் சேர்த்தாக வேண்டும். இந்தச் சிறுமியின் முன்னிலையிலே அவளைப் பற்றி, அவளுக்கு நிகழ்ந்தது பற்றி, அது தொடர்பான வழக்கு பற்றி வழக்கறிஞரும் காவல்துறையினரும் பெற்றோரிடம் பேசுவதால், நடந்த சம்பவங்கள் மறுபடி மறுபடி அவளுக்கு நினைவூட்டப்படுகிறது. அந்த வகையிலும் மன உளைச்சலில் இருக்கிறாள் சிறுமி. எல்லாவற்றையும்விட கொடுமை, இந்த வழக்கில் இன்னமும் காவல்துறை சார்ஜ் ஷீட் கூட ஃபைல் செய்யவில்லை'' என்று தன் மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்த்தார் அப்சரா.

சிறுமிக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் செய்தபோது

இதைப்பற்றி, இந்த வழக்கை விசாரித்து வரும் டெபுடி கமிஷனர் ராஜேந்திரன், ``இன்னும் ஒரு வாரத்தில் சார்ஜ் ஷீட் போட்டுவிடுவோம். அதன்பிறகு வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிடும்'' என்றார். 

தாமதமாகும் நீதி தடுக்கப்படும் நீதி என்பதைக் காவல்துறை புரிந்துகொண்டால் சரி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!