வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (05/09/2018)

கடைசி தொடர்பு:12:20 (05/09/2018)

நினைவுச் சின்னங்கள் அழிகின்றன... தமிழகத்தைப் புறக்கணிக்கிறதா மத்தியத் தொல்லியல் துறை?!

"ஒரு வருடத்தில் நானூறுக்கும் மேற்பட்ட பாரம்பர்யச் சின்னங்களைப் பராமரிக்க சென்னை மண்டலத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அதேஅளவுதான் கர்நாடகாவின் குறைந்த பாரம்பர்யச் சின்னங்கள் கொண்ட மண்டலத்துக்கும் ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தை விட மூன்றுமடங்கு அதிக நிதியைப் பெறுகிறது கர்நாடகத் தொல்லியல் துறை."

நினைவுச் சின்னங்கள் அழிகின்றன... தமிழகத்தைப் புறக்கணிக்கிறதா மத்தியத் தொல்லியல் துறை?!

புதுக்கோட்டையில் இருக்கிறது நெரிஞ்சிக்குடி கிராமம். இங்கு, வயல்வெளிகளுக்கு நடுவே ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமையான சிவன் கோயில் பாழடைந்து கிடக்கிறது. முற்காலச் சோழர்கள் கட்டியெழுப்பிய அழகிய கற்கோயிலான விரலூர் சிவன் கோயில் பொலிவிழந்து விட்டது. மத்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் இது. பராமரிப்போ, பூஜைகளோ இல்லாமல் கோயில் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. சிலைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. இதேபோன்று தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பழைமையான கோயில்களும் தொன்மைச் சின்னங்களும் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன. 

தொல்லியல் துறை

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தொல்லியல் சின்னங்கள் மத்தியத் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், அந்தப் பணிகள் மிகவும் அக்கறையின்றி நடப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் வரலாற்று ஆர்வலர்கள். மத்தியத் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல கோயில்கள் சிதைவடைந்து அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

இதுகுறித்து மிகவும் ஆதங்கமாகப் பேசினார், கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுத் தலைவர் கோமகன்.

"தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் உள்ள சில மாவட்டங்களுக்குச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரேயொரு மத்தியத் தொல்லியல் மண்டலம் ( ASI circle) மட்டும்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கோயில்கள், கோட்டைகள், புராதனச் சின்னங்கள், கல்வெட்டுகள் என்று 411 தொல்லியல் நினைவுச் சின்னங்கள் சென்னைத் தொல்லியல் துறை மண்டலத்துக்குக் கீழ் பராமரிக்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி, உரிய தகுதிகள் இருந்தும் நூற்றுக்கணக்கானப் பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படாமல் இருக்கின்றன. ஆனால், மிகக் குறைவான பாரம்பர்ய சின்னங்களைக் கொண்ட கர்நாடகாவில் பெங்களூர், தார்வார்ட், ஹம்பி என்று மூன்று தொல்லியல் மண்டலங்களை அமைத்திருக்கிறார்கள். தெலங்கானாவில் ஹைதராபாத்திலும், ஆந்திராவில் அமராவதியிலும் தனித்தனி மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தொல்லியல் மண்டலங்களுக்குக் கீழேவரும் பாதுகாப்பற்ற பாரம்பர்யச் சின்னங்களின் எண்ணிக்கை சென்னை மண்டலத்தை ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு. நீண்ட நாள்களாகவே திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மற்றொரு மத்தியத் தொல்லியல் மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம். பராமரிக்கப்படும் பாரம்பர்யச் சின்னங்களை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஒரு வருடத்தில் நானூறுக்கும் மேற்பட்ட பாரம்பர்யச் சின்னங்களைப் பராமரிக்க சென்னை மண்டலத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அதேஅளவுதான் கர்நாடகாவின் குறைந்த பாரம்பர்யச் சின்னங்கள் கொண்ட மண்டலத்துக்கும் ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தை விட மூன்றுமடங்கு அதிக நிதியைப் பெறுகிறது கர்நாடகத் தொல்லியல் துறை.

சிதைவடைந்த கோயில்

இதனால், அவர்கள் பாரம்பர்யச் சின்னங்களைச் சிறப்பாகப் பராமரிக்கிறார்கள். தமிழகத்துக்குக் குறைவாக நிதி  ஒதுக்கப்படுவதால் பல பாரம்பர்யச் சின்னங்களுக்குக் காவலர்களைக்கூட நியமிக்க முடியவில்லை. அதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தலங்கள் சமூக விரோதிகளின் புகழிடமாக மாறிவிட்டன.  நினைவுச் சின்னங்களில் காவலர்களாகப் பணியாற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்குப் பல மாதச் சம்பள பாக்கி இருக்கிறது. ஒரே மண்டலமாகச் செயல்படுவதால் பல தொல்லியல் பராமரிப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. திருமயம், தஞ்சை, திருச்சி என்று மூன்று துணை மண்டலத்துக்கும் ஒருவர்தான் பராமரிப்பு அதிகாரியாக இருக்கிறார். இதே நிலைதான் அனைத்து இடங்களிலும் நீடிக்கிறது. 

தமிழகத் தொல்லியல் மண்டலத்தை இரண்டாகப் பிரித்துவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது. இரண்டுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்படும்போது சிறப்பாகப் பாதுகாக்க முடியும். இந்தியாவிலேயே இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் 60 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.  இன்னும் படியெடுக்கப்படாத கல்வெட்டுகள், பராமரிக்க வேண்டிய நினைவுச் சின்னங்கள், கோயில்கள் என்று ஏராளம் உண்டு. பாஜக, காங்கிரஸ் என்று யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தைப் புறக்கணிக்கிறார்கள். சென்னைத்  தொல்லியல் மண்டலத்தை இரண்டாகப் பிரித்து திருச்சியில் மற்றொரு மண்டலத்தை அமைப்பதே சரியான தீர்வாக இருக்கும். இது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

சிற்பம்

இதுகுறித்து மத்தியத் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத, முக்கியப் பொறுப்பிலிருக்கும் அதிகாரி ஒருவர் நம்மிடம் ஆதங்கமாகப் பேசினார்.  

"ஆங்கிலேயர் காலத்தில்  தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி `Mid southern circle' என்ற பெயரில்  தொல்லியல் மண்டலம் உருவாக்கப்பட்டது. அதற்கு சென்னைதான் தலைமையகம். ஆங்காங்கே துணை மண்டலங்கள் செயல்பட்டன. காலப்போக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி மத்தியத் தொல்லியல் மண்டலங்கள் அமைக்கப்பட்டன. 

கர்நாடகாவில் மூன்று மண்டலங்கள் உண்டு. ஒரு மண்டலத்துக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள். தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் உள்ள சில பகுதிகளை உள்ளடக்கிய பிரமாண்டமான சென்னை மண்டலத்துக்கும் வெறும் 10 கோடிதான் ஒதுக்குகிறார்கள்.  ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஹைதராபாத் தொல்லியல் மண்டலம் மட்டுமே இருந்தது. இப்போது ஹைதராபாத், அமராவதி என்று இரண்டு மண்டலங்களாகப் பிரித்துவிட்டார்கள். இதனால் அங்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாகத் தொல்லியல் கண்காணிப்பாளர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதிக நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரேயொரு மண்டலம் இருப்பதால் இங்கு அதிகாரிகள் குறைவாகவே இருக்கிறார்கள். ஒதுக்கப்படும் நிதியின் அளவும் மிகக்குறைவு. 

மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் பெரும்பகுதி தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற உலகப் பாரம்பர்யச் சின்னங்களைப் பராமரிக்கவே செலவாகிவிடுகிறது. எஞ்சிய நிதியில்தான் மற்ற நினைவுச் சின்னங்கள் பராமரிக்கப்பட வேண்டும். புதிதாக எந்தக் கோயில்களையும் பாரம்பர்யச் சின்னமாக அறிவித்துப் பாதுகாக்க முடியவில்லை. விழுப்புரம், திருநெல்வேலி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மிகவும் குறைவு. ஆனால், அங்கு நிறைய கோயில்கள் சிதிலமடைந்து வருகின்றன.  திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தொல்லியல் மண்டலம் பிரிக்கப்படவேண்டும் என்று நாங்களும் நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..." என்றார் வருத்தத்துடன். 

மற்ற மாநிலங்களைப் போன்றே தமிழகத் தொல்லியல் மண்டலமும் இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்கப்பட்டு அனைத்துப் பாரம்பர்ய சின்னங்களும் காக்கப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் விருப்பம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்