மெளனம் போதும்...`மேயா குல்பா' சொல்லிவிடுங்கள் மோடி! | Time to say Mea Culpa for Modi regarding Demonetisation

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (05/09/2018)

கடைசி தொடர்பு:15:26 (05/09/2018)

மெளனம் போதும்...`மேயா குல்பா' சொல்லிவிடுங்கள் மோடி!

முடிவு தவறாகப் போய் விட்டதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றன. அதற்காக உங்களை யாரும் தூக்கிலிடப் போவதும் இல்லை. ``இது என் தவறு. இதற்கு நான் பொறுப்பு" என்பதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்.

மெளனம் போதும்...`மேயா குல்பா' சொல்லிவிடுங்கள் மோடி!

ந்த மரணங்களை நாம் மறந்திருக்கலாம். ஆனால், அந்த நாள்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. தெலங்கானாவின் குக்கிராமம் செனகாபுரம். கண்டுகுரி வினோதாவுக்கு அப்போது 55 வயது. கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாகக் கிடக்க, அவரின் மருத்தவச் செலவுக்காக தங்களின் குடும்பச் சொத்தான 12 ஏக்கர் விவசாய நிலத்தை 56.4 லட்சம் ரூபாய்க்கு விற்று ரொக்கம் வைத்திருந்தார். நவம்பர் 9-ம் தேதி கணவருக்கு மருத்துவமனையில் பணம் கட்டவேண்டும். 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி `பண மதிப்பிழப்பு' அறிவிப்பை வெளியிட்டார். தன் கணவரைக் காப்பாற்ற முடியாது என உணர்ந்த நொடியில் வீட்டிலேயே தூக்கிட்டுக்கொண்டு இறந்துபோனார் வினோதா.

பணமதிப்பிழப்பு - மோடி

தஞ்சாவூரின் `வாழ்க்கை' கிராமத்தைச் சேர்ந்த 70 வயது ஏழை விவசாயி சுப்ரமணியன், டிசம்பர் 4-ம் தேதி வங்கியின் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்துபோனார். அவர் மனைவி, அவரை மடியில் கிடத்தி நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தார். அந்தக் கிழவன், கிழவியைப் பரிதாபமாகப் பார்த்தபடியே நீண்டவரிசையில் தங்களுக்கான இடத்தை உறுதிசெய்ய நின்றுகொண்டிருந்தது ஒரு பெருங்கூட்டம். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வேலைப்பளு தாங்காமல் வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். 

இப்படியாக நூற்றுக்கும் அதிகமானோரின் மரணங்கள். கோடிக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வேலையற்றுப் போயினர். சிறு, குறு தொழில்கள் நசிந்தன. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளிலிருந்து தங்கள் பணத்தை எடுக்க,  கால்கடுக்க வரிசையில் நின்றனர். மருத்துவத்துக்குப் பணம் கட்ட முடியாமல் சின்னஞ்சிறு பிஞ்சுகள் இறந்துபோயின. இன்னும், இன்னும் எத்தனையோ கொடூரங்கள் நடந்தேறின. 

அதேசமயத்தில் 500 கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க எம்.பி ஜனார்த்தன ரெட்டியின் மகள் கல்யாணம் நடைபெற்றது. மோடியின் `பண மதிப்பிழப்பு' நடவடிக்கையை ஆதரித்த எல்லோருமே ஏடிஎம் வரிசையில் நின்றவர்கள் கிடையாது. ஆனால், ஏடிஎம் வாசலில் நின்ற மக்கள், பிரதமர் மோடி சொன்ன தேசநலனுக்காகப் பொறுத்துக்கொண்டு நின்றனர். ஆனால், அத்தனை வலிகளும் இழப்புகளும் இன்று அர்த்தமற்றுப்போயிருப்பதை நிரூபித்துள்ளது சமீபத்தில் வெளிவந்திருக்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை. 

பணமதிப்பிழப்பு - Demonetisation

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னர் வரை இந்தியாவில் 15.41 லட்சம் கோடி ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் புழக்கத்தில் இருந்தன. அதில் மூன்றிலிருந்து  5 லட்சம் கோடி ரூபாய் வரை கறுப்புப் பணம் என உறுதியாகச் சொன்னது மத்திய அரசு. அதை பொதுமேடையில் பிரகடனப்படுத்தினார் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் அந்த 5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான கறுப்புப் பணம் முடங்கிப்போகும். அதைக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்குச் செலவு செய்யலாம் என்றது மத்திய அரசு. 

`பணமதிப்பு நீக்க' நடவடிக்கைக்கு மத்திய அரசு முக்கியமான மூன்று காரணங்களைச் சொன்னது. கறுப்புப் பண ஒழிப்பு, தீவிரவாதக் குழுக்களின் பணப்பரிமாற்றத்தைத் தடுப்பது, கள்ளநோட்டு ஒழிப்பு. ஆனால், இது மூன்றுமே நிஜத்தில் நடக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். 

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் `பணமதிப்பு நீக்கம்' நடவடிக்கையின் மூலம் புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவிகிதம் வங்கிக்குத் திரும்பிவிட்டன என்று கூறியுள்ளது. அதாவது புழக்கத்திலிருந்த 15.41 லட்சம் கோடி ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில், 15.31 லட்சம் கோடி ரூபாய் திரும்ப வங்கிகளுக்கே வந்துவிட்டது. வராத பணமாக முடங்கியிருப்பது வெறும் 10,000 கோடி ரூபாய் மட்டுமே. இந்த ரூபாயையும் முழுமையாக `கறுப்புப் பணம்' என்று சொல்லிவிட முடியாது. நேபாளம் மற்றும் பூட்டானில் புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களைக் கணக்கில்கொண்டால் இது இன்னும்கூட  குறைவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Demonetisation - பணமதிப்பிழப்பு

இந்த அறிக்கை குறித்து பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜோதிசிவஞானத்திடம் பேசினோம்...

"பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 15 நாள்களிலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டது, அது மிகப்பெரிய தோல்வி என்று. ஏனென்றால், மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வார அறிக்கையின்படி அப்போதே 86 சதவிகிதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துவிட்டன. 

பேராசிரியர் ஜோதி சிவஞானம்1970-களில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அப்போதைய மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஐ.ஜி.பட்டேல், `இது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யாரும் அதை கையில் பணமாக வைத்திருப்பதில்லை. அவை முழுக்க சொத்துக்களாகவும், இன்னும் பிற விஷயங்களாகவும்தாம் இருக்கின்றன. இதன் மூலம் கறுப்புப் பணம் பிடிபடும் என நம்பியது முட்டாள்தனம்' என்று அன்றே சொன்னார்.

அப்போதே அப்படி என்றால், இன்றைய நிலையை யோசித்துப்பாருங்கள். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்துக்கு கறுப்புப் பணத்தை என்ன மூட்டைக் கட்டி வீட்டிலா வைத்திருப்பார்கள். நிச்சயமாகக் கிடையாது. இந்த நடவடிக்கையில் எந்தக் கறுப்புப் பண முதலைகளும் சிக்கவில்லை. மாறாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தாம் பாதிக்கப்பட்டனர். 

கள்ளநோட்டு விஷயத்துக்கு வருவோம். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 400 கோடி ரூபாய் அளவுக்கான கறுப்புப் பணம் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. அதில் பிடிபடக்கூடியது 50 சதவிகிதம்தான் என்று அரசே சொல்கிறது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், மொத்தம் புழக்கத்தில் இருக்கும் 17 லட்சம் கோடி ரூபாய் பணத்தில், 200 கோடி ரூபாய்தான் கள்ள நோட்டு. அதைப் பிடிக்க இப்படி ஒரு நடவடிக்கை, இத்தனை உயிரிழப்புகளுடன் நடத்தியிருக்க வேண்டுமா. இதைவிட பெரிய நகைச்சுவை, இந்த 200 கோடி ரூபாயைப் பிடிக்க... புது ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க அவர்கள் செய்த செலவே 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். 

தீவிரவாதக் குழுக்களின் பணப்பரிமாற்றத்தைத் தடுத்துவிட்டோம் என்று சொல்வதும் பொய்தான். அவர்கள் எல்லாம் இன்று தொழில்நுட்பத்தில் எங்கோ முன்னேறிவிட்டார்கள். ஒரு நொடியில் வயர் டிரான்ஸ்ஃபர் செய்துவிடுகிறார்கள். அதுவும் இதனால் தடுக்கப்படவில்லை. 

ஆக, மோடி சொன்ன மூன்று முக்கிய நோக்கங்களும் நிறைவேறவே இல்லை என்பது மிக வெளிப்படையாக, ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளன. புதிதாக, பணப்பரிமாற்றத்தை `டிஜிட்டலைஸ்' (Digitalise) செய்கிறேன் என்று சொன்னார்கள். அதுவும், முழுதாக நடக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் இது ஒரு படுதோல்வியான நடவடிக்கை என்பது, மொத்த உலகுக்கே தெரியும். ஆனால், அதை மோடியும் பா.ஜ.க-வும் மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்" என்றார். 

"நல்ல அரசியல் என்பது தவறுகளை ஒப்புக்கொள்வதிலிருந்து தொடங்குகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டது என்பதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். அதை மறுத்தால் நேரடியாகவோ, மறைமுகவோ அது அவரைக் காயப்படுத்தும், பாதிக்கும். அதேசமயம், மோடிக்கு இது மிகப்பெரிய பாடம். இதன் பாடங்களை அவர் சரியாகப் புரிந்துகொண்டால், அவரின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்" - வலதுசாரி மற்றும் இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் `சுவராஜ்யா' பத்திரிகையின் செய்திப் பிரிவு இயக்குநர் ஜகந்நாதன் 2017-ம் ஆண்டு, ஜூன் 14 தேதி சொன்னது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து இரண்டு வருடத்தை எட்டும் சமயத்தில்தான் இந்த முழுமையான அதிகாரபூர்வக் கணக்கு வெளியாகியிருக்கிறது. ஆனால், மத்திய ரிசர்வ் வங்கியின் கடந்தாண்டு நிதி அறிக்கையிலேயே இந்தக் கணக்கு ஓரளவுக்கு வெளியிடப்பட்டுவிட்டது. அப்போதே, 99 சதவிகித 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் வங்கிக்குத் திரும்பிவிட்டன என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.

மோடி - பணமதிப்பிழப்பு

``எல்லாம் தோற்றுவிட்டது. மோடி தற்போது சொல்லவேண்டியது `மேயா குல்பா' (Mea Culpa) என்பது மட்டுமே'' என்று இந்த அறிக்கை வெளிவந்த அன்று சொன்னார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

`மேயா குல்பா' என்பது லத்தீன் மொழிச் சொல்லாடல். `இது, என் தவறால் நிகழ்ந்தது' என்பதே இதன் அர்த்தம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இப்படிச் சொல்லியிருந்தார் பிரதமர் மோடி, `எனக்கு 50 நாள்கள் மட்டும் கொடுங்கள். இந்த முடிவு தவறாகப்போனால், என்னைப் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடுங்கள்.”

வெங்கடேஷ், வழக்குரைஞர்:

ஆடிட்டர் வெங்கடேஷ்"பணமதிப்பு நீக்கம் சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த நடவடிக்கை. ஆனால், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள் செய்த துரோகத்தால் அது நினைத்த வெற்றியை அடைய முடியவில்லை. பிரதமர் மோடி ஒருவரால் மட்டுமே தனியாக இதைச் சாதிக்க முடியாது. அவர், அதிகாரிகள் நேர்மையாக இருப்பார்கள் என நம்பினார். ஆனால், அவர்கள் மோடியைத் தோற்கடிக்கச் செய்துவிட்டார்கள். இதற்குப் பிறகும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் நாட்டுக்குச் சாதகமான விஷயங்களும் நடக்கத்தான் செய்திருக்கின்றன. வருமானவரி கட்டுவோரின் எண்ணிக்கை பலமடங்கு கூடியுள்ளது. 1.5 லட்சம் பேர் மட்டுமே 5 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், கள்ள நோட்டுகளையும் சரியாகக் கண்டறிய முடியாமல்போனது உண்மைதான். அவ்வளவு பெரிய கூட்டத்தை வங்கி ஊழியர்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால் கள்ள நோட்டுகளைப் பரிசீலிப்பதில் சில பிரச்னைகள் இருந்தன. பணமதிப்பு நீக்கம் தோல்வியைத் தழுவியிருப்பது உண்மைதான். ஆனால், அதற்காகப் பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்துவது சரியல்ல."

முடிவு தவறாகப் போய்விட்டதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றன.  ``இது என் தவறு. இதற்கு நான் பொறுப்பு" என்பதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் அன்று உறவினர்களை இழந்த, வேலைகளை இழந்த, சாப்பாடு இல்லாமல் நாள்கணக்கில் நீண்ட வரிசைகளில் நின்று, நின்று கால்கள் கடுத்துப்போன ஒரு சாமானிய இந்தியனின் கோரிக்கை.

`மேயா குல்பா' சொல்லிவிடுங்கள் மோடி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்