செயற்குழுவில் தமிழக பி.ஜே.பி-க்கு பாராட்டு! செயற்குழு தீர்மானம் தேர்தலில் எடுபடுமா?

செயற்குழுவில் தமிழக பி.ஜே.பி-க்கு பாராட்டு! செயற்குழு தீர்மானம் தேர்தலில் எடுபடுமா?

டுத்தாண்டு (2019) நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி பி.ஜே.பி. தீவிரமாக அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

டெல்லியில் செப்டம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்ற பி.ஜே.பி. செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் அடுத்தாண்டு தேர்தலில் பி.ஜே.பி. மகத்தான வெற்றிபெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். தவிர, தற்போது பி.ஜே.பி-க்கு மக்களவையில் உள்ள எம்.பி-க்களின் எண்ணிக்கையை விடவும் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மிக முக்கியமான அரசியல் தீர்மானம் ஒன்றும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டுவந்த இத்தீர்மானத்தில், மத்திய அரசின் `புதிய இந்தியா' கனவை நிறைவேற்றவும், வறுமை இல்லாத இந்தியாவை உருவாக்கவும் உறுதியேற்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 2022-ம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தைப் புகழ்ந்துரைத்தும் தீர்மானத்தில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

`வரும் 2022-ம் ஆண்டுக்குள் வறுமை, சாதி, மத அடிப்படையிலான அம்சங்கள், ஊழல் மற்றும் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என்று பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எதிர்கால இந்தியா பற்றிய பிரதமரின் கனவை நனவாக்க வேண்டும் என்று பி.ஜே.பி-யின் செயற்குழுக் கூட்டத் தீர்மானம் தெரிவிக்கிறது.

அமித் ஷா -  பி ஜே பி தலைவர்

Images Courtesy: twitter.com/amitshah

தேசியச் செயற்குழுவின் தீர்மானம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான பார்வையுடனும், பாரம்பர்யத்துடனும் செயல்படுவதாகக் கூறினார். மேலும், நாட்டின் எதிர்கால முன்னேற்றம் பற்றிய கற்பனையை நடைமுறைப்படுத்துவது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியுள்ள பி.ஜே.பி, எந்தவித கொள்கையோ, திட்டமோ எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்று கூறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கொள்கை பிரதமர் நரேந்திரமோடியை எதிர்ப்பது மட்டுமே என்றும், இதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பல்வேறு சாதனைகளும் அந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அரசின் இந்தச் சாதனைகளை, நாடு முழுவதும் உள்ள பி.ஜே.பி. நிர்வாகிகளும், தொண்டர்களும், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது. 

செயற்குழுவில் பேசிய பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி-யின் கொள்கைகளைப் பின்பற்றி பி.ஜே.பி. செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், எதிர்காலத்திலும் அதேபோன்று செயல்படும் என்றும் குறிப்பிட்டார். `வாஜ்பாய் ஒரு சூரியன் போன்றவர், தற்போதுள்ள பி.ஜே.பி. நிர்வாகிகள் அனைவரும் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போன்று, அவரின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பவர்கள்' என்றார் அவர்.

தமிழிசை சௌந்தரராஜன் - பி.ஜே.பிஇதேபோல், தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யின் தேர்தலை நோக்கிய முன்முயற்சிகள் சிறப்பான வகையில் இருப்பதாகவும், அண்மையில் அமித் ஷா சென்னை வந்திருந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள `சக்தி கேந்திர' நிர்வாகிகள் கூட்டம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டதாகவும், அதற்கு செயற்குழுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யின் வளர்ச்சி சிறப்பான முறையில் இருப்பதை, செயற்குழுக் கூட்டத்தில் தாம் சுட்டிக்காட்டியதாக தமிழிசை கூறினார். எதிர்காலத்தில் பி.ஜே.பி-யின் உதவி இல்லாமல் தமிழக அரசியல் களம் இருக்கப்போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழிசையின் கருத்தை, அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். ``என்னுடைய பணத்தை வங்கியில் என் மனைவியின் கணக்குக்கு அனுப்பி வைத்து, அந்தப் பணத்தை முழுவதுமாக எடுத்துக்கொள்ள முடியாத சூழலை உருவாக்கியது பிரதமர் மோடியின் ஆட்சி. எனவே, ஏழை மக்கள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகளால் அவர்களின் சொந்தப் பணத்தையே கட்டுப்பாட்டுடன் வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைதான் எழுந்தது. இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறந்துவிடவில்லை. எனவே, தமிழ்நாட்டில் பி.ஜே.பி. இல்லாமல் அரசியல் களம் இல்லை என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுவதெல்லாம் வெற்றுப்பேச்சு. பகல் கனவு" என்றார் அவர்.

தமிழகத்தில் பி.ஜே.பி-யின் தேர்தல் யுக்தி எடுபடுமா என்பது போகப்போகத்தான் தெரியும்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!