``6 மாதம்கூட தொடர்ந்து இயங்காத ஆலை... அடிக்கடி பழுது!" - கூடங்குளம் அணுஉலையில் என்ன பிரச்னை?

``6 மாதம்கூட தொடர்ந்து இயங்காத ஆலை... அடிக்கடி பழுது!

கூடங்குளம் 2-வது அணுஉலையில் நேற்றுமுதல் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியிருப்பதாக அணுசக்திக் கழகத்தின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி 2-வது அணுஉலையில் பராமரிப்புப் பணி காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஜூலை மாதம் 21-ந் தேதி மின்னுற்பத்தி தொடங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி 2-வது அணுஉலை வால்வில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணுஉலையிலும் பராமரிப்புப் பணிக்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கூடங்குளத்தில் உள்ள 2 அணுஉலைகளிலும் மின்னுற்பத்தி நடைபெறவில்லை. நேற்று (செப்டம்பர் - 13) முதல் 2-வது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இன்னும் முதலாவது அணுஉலை உற்பத்தி தொடங்கவில்லை. கடந்த ஆண்டும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக முதலாம் அணு உலை மூடி வைக்கப்பட்டிருந்தது. எரிபொருள் நிரப்பும் பணிக்கு 60 நாள்கள் வரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது உலக விதி.

கூடங்குளத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்னைகளுக்குக் காரணங்களைத் தெளிவான விளக்கத்துடன் பகிர்ந்து கொள்கிறார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்.

கூடங்குளம்

``2012 - ம் ஆண்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூடங்குளம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் போராடும் மக்கள் சார்பாக வைக்கப்பட்ட முக்கியமான கேள்வி, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை எங்கே பாதுகாப்பீர்கள் என்பதுதான். ஒரு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அந்த வாதத்தில், தேசிய அணு மின் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாய்மொழியாக `கூடங்குளம் அணுக் கழிவுகளை கோலாரில் வைக்கத் திட்டமிருப்பதாக’ தெரிவித்தார். உடனே ஊடகங்கள் அந்தச் செய்தியை கர்நாடக மக்களிடம் கொண்டு சேர்த்தன, அடுத்த இரண்டு நாள்கள் கர்நாடக மாநிலம் போராட்டக்களமானது. தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்த கட்சிகள் அனைத்தும் கர்நாடகாவில் அணுக் கழிவுகளை வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்து போராடிய மக்களுடன் கைகோத்தன. அன்று அம்மாநில முதல்வராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், ``கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகாவின் எந்தப் பகுதியிலும் அணுக் கழிவுகளை அனுமதிக்கமாட்டோம்" என்று அறிவித்தார். இரண்டு நாள்கள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அதே மூத்த வழக்கறிஞர் ``கூடங்குளம் கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும்" என்று வாக்குமூலம் தாக்கல் செய்தார்.

2013-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி கூடங்குளம் குறித்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், சில கட்டளைகளை கொடுத்திருந்தது. அவற்றுள் மிக முக்கியமானவை.

1. ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட உதிரிப்பாகங்களின் தரத்தையும் அமைப்புகளையும் உறுதிப்படுத்தவேண்டும்.       

2. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அணுக் கழிவுகளை மேலாண்மை செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை/ மையத்தை அமைத்திருக்கவேண்டும்.

3. மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறவேண்டும்.

தரம் குறைந்த உதிரிபாகங்கள்!

ரஷ்யாவிலிருந்து வந்த தரம் குறைந்த உதிரிப்பாகங்கள் என்பதை பல்வேறு தரவுகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டது அதனால்தான் இன்னொருமுறை அனைத்து உதிரிப்பாகங்களையும் அமைப்புகளையும் சோதித்து தரத்தை உறுதிப்படுத்தவேண்டுமென்று உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம். இதுவரை உலகத்திலேயே இல்லாத அளவுக்கு 42 முறைக்கு மேல் பழுதாகி நின்றுள்ளது முதல் உலை. இரண்டாவது உலை இன்னமும் முழுமையாகத் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இரு உலைகளும் ஒரே நேரத்தில் மூன்று மாதங்கள் கூட தொடர்ந்து உற்பத்தி செய்ததாக தகவல்கள் இல்லை. பராமரிப்புப் பணிகளுக்கு நிறுத்தப்படும் உலைகள் பெரும்பாலும் 45 நாள்களுக்குள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிவிடும். ஆனால், கூடங்குளத்திலுள்ள அணு உலைகள் மட்டும் குறைந்தது 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். பல மாதங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதம் உற்பத்தியைத் தொடங்கிய இரண்டாவது உலை சில தினங்களில் பழுதடைந்து நின்றது. அதே நேரத்தில் பராமரிப்புப் பணிகள் என்று அறிவித்து முதலாவது உலையும் உற்பத்தியை நிறுத்தியது. பழுதடைந்து நின்ற இரண்டாவது உலை, சில நாள்களில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிவிடும் என்று திட்ட இயக்குநர் அறிவித்தார். சில நாள்கள் ஆரம்பித்து சில மாதங்களாகி நேற்றுதான் உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது. இது ஒன்றும் கூடங்குளத்துக்குப் புதிதல்ல, ஆரம்பம் முதலே இதுதான் வரலாறு, இதுதான் இயல்பு. போராடிய மக்களை ஒருங்கிணைத்த சு.ப.உதயகுமார் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் கூடங்குளம் அணு உலைகள் `இறந்து பிறந்த குழந்தைகள், அவற்றைப் புதைப்பதே சரியான செயல்'. பொதுவெளியில் கூடங்குளம் அணு உலைகளைப் பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் மீண்டும் அணு உலைகள் செயல்பட ஆரம்பித்துவிட்டதாக அறிவிக்கப்படும், மீண்டும் சில வாரங்களில் அவை பழுதடைந்து நின்றுவிட்டதாக அறிவிப்பு வரும். இது ஒரு தொடர்கதை. 

கூடங்குளம்

அணுக்கழிவு மேலாண்மை மையம்!

புகுஷிமாவில் ஏற்பட்ட விபத்து மிகப்பெரிய அளவில் கதிர்வீச்சைப் பரப்பியதற்கு முக்கியக் காரணம், அணு உலைகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அணுக் கழிவுகள்தாம். இன்றும் அந்த உலைகளிலுள்ள அணுக் கழிவுகளை எவ்வாறு எடுப்பது, அதைக் கையாள்வது எப்படி என்பது குறித்தும் ஜப்பான் அரசாங்கத்தால் அல்லது அதை இயக்கக்கூடிய நிறுவனத்தால் உறுதியாகக் கூற முடியவில்லை. விபத்துக்குள்ளான அணு உலைகளிலிருந்து வெளியான கதிர்வீச்சு கொண்ட நீரால் பசிபிக் பெருங்கடல் செத்துக்கொண்டிருப்பதாக மாலுமிகளின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அணுசக்தியைக் கையாளும் எந்த நாட்டிலும் அணுக் கழிவுகளை மேலாண்மை செய்யக்கூடிய தொழில்நுட்பம் கிடையாது. அதிகபட்சமாக அணுக் கழிவுகளை அடுத்த 1 லட்சம் வருடங்களுக்குப் பாதுகாப்பது மாதிரியான ``ஆழ்நிலைக் கருவூலம்" ஒன்றைப் பின்லாந்து நாடு கட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், மனிதர்கள் இதுவரை கட்டிய எந்தக் கட்டடமும் 1,000 வருடங்களுக்கு மேல் தாங்கி நின்றது கிடையாது என்பதுதான் உண்மை.

ஏன் கூடங்குளம் அணுக் கழிவு மேலாண்மை தேவை?

கூடங்குளம் அணு உலைகளிலிருந்து வெளிவரும் அணுக் கழிவுகளை அந்த உலைகளுக்கு உள்ளேயே உள்ள `அணுக் கழிவு தொட்டிகளில்' (spent fuel pool) ஏழு ஆண்டுகளுக்குப் பத்திரப்படுத்தி பிறகு வேறு ஓர் இடத்துக்கு மாற்றவேண்டும். அந்தத் தொட்டிகள் அதிகபட்சமாக கூடங்குளம்7ஆண்டுகளுக்கு உற்பத்தியாகும் கழிவுகளை மட்டுமே சேமிக்கும் கொள்ளளவு கொண்டவை. இந்தக் காரணத்தால்தான் உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் 5 ஆண்டுகளுக்குள் மேலாண்மை மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

இந்தியாவில் அணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய மையங்கள் கல்பாக்கத்திலும், தாராப்பூரிலும் உள்ளன. இந்த இரண்டு மையங்களிலும் `கன நீர் உலைகளிலிருந்து' வரக்கூடிய அணுக் கழிவுகளைத்தான் மறுசுழற்சி செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் அந்த இரண்டு மையங்களும் முழுக் கொள்ளளவில் செயல்படுவதால் கல்பாக்கத்தில் இரண்டாவது மையம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதைவிட முக்கியமான காரணம், இந்தியாவின் அணுசக்தி திட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. அவை பொதுப்பயன்பாட்டுக்கு (மின்னுற்பத்தி) தேவையான கட்டமைப்பு, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள். ஒரு வகையான பயன்பாட்டிலிருக்கும் இடத்திலிருந்து, இன்னொரு வகையான இடத்துக்கு எந்த எரிபொருளையும், கழிவுகளையும் கொண்டு போகமுடியாது, கொண்டு போகக் கூடாது. கல்பாக்கமும், தாராப்பூரும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள், கூடங்குளம் பொதுப்பயன்பாட்டிற்கான கட்டமைப்பு. அதனால் கல்பாக்கத்துக்குக் கொண்டு செல்ல முடியாது.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து ஐந்தாண்டுகள் ஆன நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடிய தேசிய அணு மின் கழகம், மென் நீர் (கூடங்குளம் வகை) உலைகளிலிருந்து வரக்கூடிய கழிவுகளை கையாளுவதற்குரிய தொழில்நுட்பம் இந்தியாவில் இதுவரை கிடையாது என்றுதெரிவித்து மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் கேட்டது. வழக்கு தொடுத்த பூவுலகின் நண்பர்கள் சார்பில் கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டபோதும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம் கடைசி முறையாக ஐந்தாண்டுகள் கால அவகாசம் கொடுத்து இனி ஒரு முறை கால நீட்டிப்பு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. அணுக் கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் வரை உற்பத்தி நடைபெறக் கூடாது என்று வாதிட்டபோது அதற்குத் தனியாக மனு போடும்படி தெரிவித்தது.  

இதிலுள்ள மிகப்பெரிய சவால், இதுவரை இந்திய அணுசக்தி துறை விஞ்ஞானிகளுக்கு மென் நீர் உலைகளைக் கையாண்ட அனுபவமில்லை. இந்தப் பின்னணியில்தான் அணுக் கழிவு மேலாண்மை மையத்தை அமைப்பதற்குரிய தொழில்நுட்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் தெரிவித்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவசியம். `கூடங்குளம் அணு உலைகள் தென்னிந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்புகள் இருக்கிறது' என்றார் அவர். சோவியத் ரஷ்யாவின் அதிபராக இருந்த கோர்பச்சேவ், `ரஷ்யா உடைவதற்கு முக்கியக் காரணம் செர்னோபில் அணு உலை விபத்துதான்' என்கிறார். இந்தியாவின் துயரமாக கூடங்குளம் மாறாமல் இருப்பதற்குத் தமிழகம் தன்னுடைய குரலை உரத்து ஒலித்துத்தான் ஆக வேண்டும்" என்கிறார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!