வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:58 (15/09/2018)

வாதங்களைக் கிளப்பும் வரதட்சணை தடுப்புச் சட்டம்.. சாதகமா... பாதகமா?

வாதங்களைக் கிளப்பும் வரதட்சணை தடுப்புச் சட்டம்.. சாதகமா... பாதகமா?

ரதட்சணை கொடுப்பதையும், வாங்குவதையும் தடுக்கும் வகையில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் கணவன் வீட்டால் பெண்களுக்கு ஏற்படுகிற இன்னல்கள் ஒருவகையில் தடுக்கப்பட்டாலும், இந்தச் சட்டத்தை சில பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவ்வப்போது புகார் எழுந்தவண்ணம் இருந்தது.

குறிப்பாக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி குற்றம் செய்யாதவர்கள் மீதும், பெண்கள் புகார் தருவதால் அவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் நடந்து முடிந்த வழக்குகளைவைத்து போலியான புகார்களையும் அடையாளம் கண்டு இந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. 

அந்த அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 ஏ-ன்கீழ் பெண்கள் வரதட்சணைப் புகார் அளித்தால், போலீஸார் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், புகாரின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பின்னர், கைது செய்யவேண்டிய அவசியம் உள்ளதா என்று முழுமையாகத் தெரிந்தபின்னரே காவல் துறையினர் கைதுசெய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது... காவல் துறையினர் அளிக்கும் ஆவணங்களைத் தெளிவாக ஆய்வுசெய்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது என்றால் மட்டுமே, அந்த நபர்களைக் காவலில்வைக்க உத்தரவிட வேண்டும் என்பதுபோன்ற சில வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், ``மீண்டும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498-ஏ பிரிவின்கீழ், புகார் கொடுத்தால் கைதுசெய்யலாம்" என்ற அதிரடி தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. 

ஆரம்பத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 ஏ-ன்கீழ் பெண்கள் வரதட்சணைப் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கலாம் என்ற நடைமுறை இருந்தபோது... குற்றம் செய்யாத அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. பின்னர், அது மாற்றி அமைக்கப்பட்டவுடன் பெண்கள் தரப்பிலிருந்து, ``இந்தச் சட்டம் நீர்த்துப் போய்விட்டது" என்ற விமர்சனமும் எழுந்தது. இப்படியான சூழலில், ``உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கும் இந்தப் புதிய தீர்ப்பால் எந்த மாதிரியான விவாதங்கள் எழும்? அதேநேரத்தில், பழைய நடைமுறையில் கூடுதல் சட்ட வழிகாட்டுதல்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா" என வழக்கறிஞர் சாந்தகுமாரியிடம் பேசினோம்.

``இந்தத் தீர்ப்பை நான் மிகவும் நடுநிலையாகப் பார்க்கிறேன். ஆரம்பத்தில், இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதைக் கையாண்ட பெண்கள் பொய்யான புகார்களை அளித்து, குறிப்பாக வரதட்சணை குற்றச்சாட்டுக்குத் தொடர்பு இல்லாதவர்களையும் இதில் சேர்த்து புகார்கொடுத்து வந்தனர். அப்படி, குவிந்த புகார்கள் போலியானவை என்று தெரிந்தபின்னரே நீதிபதி சந்திர மௌலி இந்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் அடங்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். 

வரதட்சணை கைது, வழக்கு

அதில் சிலவற்றை மகளிர் அமைப்புகள் எதிர்த்துவந்தன. குறிப்பாக நீதிபதி வழிகாட்டுதல்களில் ஒன்றான, மாவட்ட அளவில் குழு அமைப்பதை அந்த அமைப்புகள் கடும் விமர்சனம் செய்தன. `மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டால், அதில் தலையீடுகள் இருக்க வாய்ப்புள்ளது. அப்படியான தலையீடுகளால் புகார்தாரர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, இதனை நடைமுறைபடுத்தக்கூடாது' என்று கூறிவந்தன. இந்த நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இப்படியான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார். இந்தத் தீர்ப்பு இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 ஏ-ன்கீழ் பெண்கள் வரதட்சணை புகார் அளித்தால், `நடவடிக்கை எடுக்கலாம்' என்று கூறியிருப்பது சரியானதே ஆகும். அதேநேரத்தில், தவறுசெய்யாதவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கலாம் என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்துள்ளார். 

ஆரம்பத்தில் இந்தச் சட்டத்தில் அப்படியான ஜாமீன் வழங்கும் நடைமுறை இல்லை. ஆனால், தற்போது அதைக் கூடுதலாகச் சேர்த்திருப்பது  இருபாலருக்கும் பொதுவான சட்டம் என்பதை வலியுறுத்தியுள்ளது. இந்தச் சட்ட நடைமுறையில், தவறு செய்யாதவர்கள் ஒருவேளை வரதட்சணை புகாருக்கு உள்ளானால், இதிலிருந்து அவர்கள் வெளியே செல்வதற்கு வழிவகுக்கும் என்ற அணுகுமுறை இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறை ஆகும்போதுதான் இதனுடைய முழுமையான உண்மையான நன்மை தீமைகளை அறிய முடியும்" என்றார், மிகத் தெளிவாக. 

இருபாலரும் பாதிக்கப்படாதவண்ணம் சட்டம் இயற்றப்பட்டால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். 


டிரெண்டிங் @ விகடன்