வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (17/09/2018)

கடைசி தொடர்பு:21:12 (17/09/2018)

``இது இன்னொரு ராஜா - ரஹ்மான் சண்டை!” - #HBOvsNetflix யார் கெத்து?

பாரம்பர்ய டிவி-க்கும், நவீன ஸ்ட்ரீமிங் வெப் டிவிக்குமான இந்த எம்மி யுத்தத்தில் வெல்லப்போவது யார்?

``இது இன்னொரு ராஜா - ரஹ்மான் சண்டை!” - #HBOvsNetflix யார் கெத்து?

ஹெச்.பி.ஓ-வுக்கும் நெட்ஃப்ளிக்ஸுக்குமான போட்டியென்பது தனிப்பட்ட போட்டி கிடையாது. அதற்கு அதைத் தாண்டியும் பல உள்ளடக்கங்கள் உள்ளன. இது பாரம்பர்ய டிவி சேனல் முறைக்கும், ஸ்ட்ரீமிங்குக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி. நாளை டிவி-க்கான ஆஸ்காராகப் பார்க்கப்படும் எம்மி விருதுகள் விழா நடக்கவுள்ள நிலையில் 17 வருடங்களில் முதல்முறையாக மொத்த நாமினேஷன்களில் பின்தங்கியுள்ளது ஹெச்.பி.ஓ. இம்முறை 112 நாமினேஷன்களுடன் 108 நாமினேஷன்கள் பெற்ற ஹெச்.பி.ஓ-வை ஓரங்கட்டியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். மக்களுக்கு நிகழ்ச்சி தயாரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இயங்கும் இரு துருவங்களான இவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இரண்டுமே புதுமை விரும்பிகள்

அன்றாடம் ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து சலிப்படைந்து சோர்ந்திருந்த அமெரிக்க மக்களைப் புத்துணர்வுடன் மீண்டும் டிவி பார்க்கச் செய்த பெருமை ஹெச்.பி.ஓ-வையே சேரும். இன்று படங்களுக்கு நிகராக டிவி சீரிஸ்கள் வருகிறதென்றால், அதற்கு விதை இவர்கள் போட்டதுதான். இந்த மாற்றத்தை 1999-ம் ஆண்டு 'தி சொப்ரனோஸ்' (The Sopranos) என்ற தொடரின் மூலம் ஆரம்பித்ததாக அமெரிக்க மக்கள் கூறுவர். அப்போது வந்துகொண்டிருந்த டிவி தொடர்களுக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் வந்த கிரைம் தொடரான இது இன்றும் மிகச் சிறந்த டிவி தொடர்களில் ஒன்றாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஹெச்.பி.ஓ-வின் பெயரை அமெரிக்க மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தது இந்த சீரிஸ்தான். அதன் பின் எடுக்கும் தொடர்கள் அனைத்திலும் ஏதேனும் புதுமைகளைப் புகுத்தி என்றும் ஃபிரெஷ் ஸ்டேட்டஸ் பெற்றுள்ளது. ஹெச்.பி.ஓ-வை பொறுத்தவரை ஒரு பிரபலமான சீரிஸ் முடியும் நேரத்தில் கண்டிப்பாக இன்னொரு சீரிஸ் பிரபலமாகத் தொடங்கியிருக்கும். இவர்களின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் இன்று உலகளவில் அதிகமாகப் பார்க்கப்படும் டிவி சீரிஸ்.

HBOvsNetflix

இது ஒருபுறம் இருக்க, தொடர்கள் பார்க்கும் முறையையே மாற்றியமைத்த பெருமை நெட்ஃப்ளிக்ஸுடையது. நெட்ஃப்ளிக்ஸ் வருவதற்கு முன்பு, சீரிஸ் பார்க்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட நேரத்தில் டிவி சேனலில்தான் பார்க்க முடியும். மேலும் சில சீரிஸ்களின் எபிசொடுகள் வர ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். இந்த முறையை அப்படியே உடைத்தெறிந்ததது நெட்ஃப்ளிக்ஸ். இவர்கள் தளத்தில் எப்போது வேண்டுமோ அப்போது நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும், தனித்தனி எபிசோடுகளாக எடுக்கப்பட்டாலும் அவை மொத்த சீஸன்களாகவே சீரிஸ்களாகவே வெளியாகின. தொடர்ந்து ஒரே இரவில் மொத்த சீரிஸையும் பார்ப்பதை ஆங்கிலத்தில் 'பிஞ்ச் வாட்சிங்' (Binge Watching) என்றழைப்பர். நெட்ஃப்ளிக்ஸ் இல்லையென்றால் இந்த வார்த்தையே பிரபலமாகி இருக்காது. டிவி என்றில்லை சினிமா பார்க்கும் முறையையும் இது மாற்றிவருகிறது.

தரமான நிகழ்ச்சிகள் 

மிகப் பிரபலமான பல நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் தயாரித்துள்ளது ஹெச்.பி.ஓ நிறுவனம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் இல்லையென்றாலும் அத்தனை சீரிஸ்கள் இருக்கின்றன இதன் வசம். பிரபல நடிகர்கள், பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் எனத் தரத்தில் என்றுமே கவனம் செலுத்துவது இவர்கள் ஸ்டைல். சமீபத்தில்தான் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரனான ஜோனத்தன் நோலனின் 'வெஸ்ட்வேர்ல்ட்' (Westworld) என்னும் சீரிஸின் இரண்டாவது சீஸன் வெளியானது. இதைத் தாண்டியும் நேர்காணல் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சிகள் என எப்போது ஹெச்.பி.ஓ பக்கம் போனாலும் நல்ல தரமான பொழுதுபோக்கு இருக்கும்.

HBOvsNetflix

நெட்ஃப்ளிக்ஸ் அமெரிக்காவை மட்டும் குறிவைக்காமல் மொத்த உலகத்துக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க விரும்பும். இவர்களின் சொந்த தயாரிப்புகளான நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல்ஸில் 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்', 'ஆரஞ்சு இஸ் தி நியூ பிளாக்', 'நார்க்கோஸ்', 'தி கிரௌன்' போன்ற சீரிஸ்களுக்கு உலகளாவிய வரவேற்பு இருக்கிறது. மேலும், அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் அவரவருக்கேற்ப நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் இவர்கள்தான் கிங் மேக்கர். சமீபத்தில் இந்தியாவில் கால்பதித்து, நம்ம ஊரில் தயாரிக்கப்பட்ட 'சேக்ரட் கேம்ஸ்' (Sacred Games) சீரிஸை உலகம் முழுக்க பார்க்க வைத்தது நெட்ஃப்ளிக்ஸ். இப்படி பலதரப்பட்ட கலாசாரங்களில் நிகழ்ச்சிகள் தயாரிக்கவே விரும்புகிறது நெட்ஃப்ளிக்ஸ். இந்த உந்துதல் ஹெச்.பி.ஓ-விடம் பெரிதாக இருக்காது.

சொல்லப்போனால் எக்கச்சக்க நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதால் இந்த வருடம் எம்மியில் வந்திருக்கும் ஒரு நாமினேஷனுக்கு ரூபாய் 360 கோடிகளென வருடத்துக்கு மொத்தம் 45,000 கோடி ரூபாயை அதன் நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் செலவழிக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். அதே நேரத்தில் ஹெச்.பி.ஓ வெறும் 166 கோடி ரூபாயே ஒரு நாமினேஷனுக்கு செலவழித்திருக்கிறது. 

HBOvsNetflix

மேலும் மக்களைச் சென்றடையும் திறனில் பார்த்தால் ஹெச்.பி.ஓ பின்தங்கியே இருக்கிறது. இதன் ஸ்ட்ரீமிங் தளமான 'ஹெச்.பி.ஓ நவ்'வை அமெரிக்காவில் மட்டுமே பார்க்க முடியும். அதுவும் மற்ற தளங்களின் தரத்தோடு ஒப்பிடும்போது கொஞ்சம் சுமாரானதுதானாம். வேறு நிறுவனங்கள் எதுவும் விருப்பம் காட்டவில்லை என்றால் மற்ற நாட்டு மக்கள் இவர்களது நிகழ்ச்சிகளைப் பார்க்க டோரண்ட்களை தவிர வேறு வழியில்லை. இந்தியாவில் ஹாட்ஸ்டார், ஹெச்.பி.ஓ இடையே ஓர் ஒளிபரப்பு ஒப்பந்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயலாமை காரணத்தால்தான் திருட்டுத்தனமாக மிக அதிக தரவிறக்கங்கள் கண்ட உலகப் புகழ் கேம் ஆஃப் த்ரோன்ஸிடம் உள்ளது என எண்ணத் தோன்றுகிறது. அந்த எண்ணிக்கையை வணிகமாக்கும் திறன் ஹெச்.பி.ஓ-விடம் இல்லை.

மறுபக்கம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமோ உலகமெங்கும் தங்கள் சேவைகளை விரிவுபடுத்திக்கொண்டே வருகின்றனர். விரிவுபடுத்துவதுடன் ஒவ்வோர் இடத்திலும் அதற்கேற்ப நிகழ்ச்சிகளையும் தயாரிக்கின்றன. அமெரிக்காவில் இருப்பவற்றை மட்டும் உலகத்துக்கு எடுத்துப் போவது உலக மயமாக்குதல் அல்ல எல்லா நாடுகளுக்குமிடையே நல்ல விதத்தில் பரிமாற்றங்கள் ஏற்படுவதே உலக மயமாக்குதல் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்கள்தாம். அதற்கு சிறந்த உதாரணமாக நெட்ஃப்ளிக்ஸின் முதல் ஜெர்மன் சீரிஸான 'டார்க்' (Dark) தொடரை சொல்லலாம். முழுக்க முழுக்க ஜெர்மன் மொழியில் எடுக்கப்பட்ட இது, ஆங்கிலத்தில் டப் மட்டுமே செய்யப்பட்டது. ஆனால், காலப்பயணம், மர்மம் என்று சிறப்பான கன்டென்ட் பிடித்ததால், சீரிஸ் பயங்கர ஹிட்!

HBOvsNetflix

பாரம்பர்ய டிவிக்கும் நவீன ஸ்ட்ரீமிங் வெப் டிவி-க்குமான இந்த யுத்தத்தில் புதிய நிறுவனங்கள் பலவும் கால்பதிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த வருடம்கூட ஹுலு (Hulu) என்ற நிறுவனத்தின் முதல் ஒரிஜினல் தயாரிப்பான 'தி ஹேண்ட் மெய்ட்ஸ் டேல்' (The Handmaid's Tale) தான் சிறந்த ட்ராமா சீரிஸுக்கான முக்கிய விருதைத் தட்டிச்சென்றது. மாறிவரும் இந்த ட்ரெண்டில் நாளை நடக்கவிருக்கும் எம்மி விருதுகள் உண்மையிலேயே தராசு அதே நிலையில்தான் (பாரம்பர்ய டிவி) இருக்கிறதா இல்லை இன்னொரு பக்கம் (நவீன ஸ்ட்ரீமிங் வெப் டிவி) சாயத் தொடங்கியிருக்கிறதா என்பதை உணர்த்தும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்