வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (19/09/2018)

கடைசி தொடர்பு:16:18 (19/09/2018)

``எஸ்.பி செந்தில்குமார் விசாரணை வளையத்தில் வரவேயில்லை!" விஷ்ணுபிரியா தந்தை

``எஸ்.பி செந்தில்குமார் விசாரணை வளையத்தில் வரவேயில்லை!

``சரியானவற்றைச் செய்வதற்கு எதற்குப் பயப்படவேண்டும்" - இவை மறைந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். மிக வலிமையான பெண்மணியாக இருந்த அந்த இளம் டி.எஸ்.பி., உயிரிழந்து இன்றோடு மூன்று வருடங்கள் ஆகின்றன. அவருடைய மரணத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய விஷ்ணுபிரியா, தான் பயிற்சி முடித்த நாளில், ``மக்களைக் காக்கும் உன்னதப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். எந்த நேரத்திலும் நேர்மை தவறாமல், எவ்வளவு தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு உழைக்க வேண்டும்" என்று பேசியவர்தான் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி, திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். தன்னம்பிக்கை மனுஷியாக அடையாளம் காணப்பட்ட விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்த காரணங்கள்தாம், இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத மர்மமாகவே நீடித்துவருகிறது.

ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கினை விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவ்வழக்கை விசாரித்துவந்தார். இந்த நிலையில்தான், விஷ்ணுபிரியா மர்மமான முறையில் மரணமடைந்தார். வழக்கில் முக்கியக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்று சொல்லப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் அளித்த நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் நாமக்கல் மாவட்ட  காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் அளித்த நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், மற்றொரு வழக்கில் விஷ்ணுபிரியா எடுத்தநேர்மையான, வேகமான நடவடிக்கையே அவர் சாவுக்குக் காரணமானது என்றும் அடுத்தடுத்து செய்திகள் பரவின. 

இந்த நிலையில்தான், ``உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார்'' என அவரது தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி-யாக இருந்தவருமான மகேஸ்வரி மற்றும் வழக்குரைஞர் மாளவியா ஆகியோர் குற்றம்சாட்டினர். இறுதியாக கோகுல்ராஜ் வழக்கும், எஸ்.பி செந்தில்குமார் கொடுத்த நெருக்கடி விவகாரமும்தான் நங்கூரமாக நின்றது. இதனையடுத்து, டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கோடு, கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்தது. இந்த நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, `விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு, ரவி மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், `விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என உத்தரவிட்டது .

விஷ்ணுபிரியாவின்  குடும்பம்

இந்த நிலையில்  விஷ்ணுபிரியாவின் வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள், ``இது தற்கொலை வழக்கு என்றும் இதைக் கைவிடப் போகிறோம்" என அவர்கள் நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளனர். அதோடு, சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையை, சி.பி.ஐ அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கை  சி.பி.ஐ விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்று நம்பிய விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு, சி.பி.ஐ அதிகாரிகள் சொல்லியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ``என் மகள் இறந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் அவளுடைய மரணத்துக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இதைப் பார்க்கும்போது உயர் பொறுப்பில் பணியாற்றிய என் மகளுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன என யோசிக்க வைக்கிறது. சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணை நியாயமாக இருக்கும் என நம்பினேன். ஆனால், அந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று தெரியவருகிறது.   

 என் மகளுடைய தற்கொலை கடிதத்தை இணைத்து நீதிமன்றத்தில் வழங்க சி.பி.ஐ விசாரணை எதற்கு. தன்னிச்சையான சுதந்திரமான  விசாரணை நடைபெற வேண்டும் என எண்ணினேன். நான் நினைத்தவாறு இந்த வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்கவில்லை. அதற்குக் காரணம், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் குறிப்பாக, விசாரணை அதிகாரிகளில் ஒருவரான டி.ஐ.ஜி சேலத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அனைவரும் தமிழக அரசுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த வழக்கின் விசாரணை எப்படி நேர்மையாக நடைபெறும்? 

மேலும், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொடுத்த அறிக்கையை சி.பி.ஐ அதிகாரிகள் சேர்த்து நீதிமன்றத்தில் கொடுத்துள்ளனர். அதில் என் மகளின் நடத்தையைத் தவறாகப் பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் 20-ம் தேதி அந்த அறிக்கையை வாங்கியவுடன், இதுகுறித்து பேசுவதற்காக ஊடகங்களைத் தொடர்புகொள்ளவிருக்கிறேன். என் மகள் குறித்து தவறான தகவல்களைப் பதிவுசெய்துள்ள சி.பி.சி.ஐ.டி மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வேன். சட்டம் அனைவருக்கும் சமம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டாலும், இங்கு அதிகாரிகளின் மகளுக்கு ஒரு சட்டமும், அன்றாடங்காய்ச்சிகளின் மகள்களுக்கு ஒரு சட்டமுமாக வளைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டு வலிமையாக இருந்தும், அவரை ஏன்  விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரவே இல்லை. இப்படியான அதிகாரவர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றாலும், இயற்கை நீதியிலிருந்து இவர்கள் தப்ப முடியாது" என்றவர், தன் மகளின் மரணம் குறித்து சில நியாயமான கேள்விகளைத் தமிழக அரசுக்குக் கோரிக்கையாக வைத்திருக்கிறார். அவர் வைத்த சில கேள்விகளை இங்கு பார்ப்போம்....

1. விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, 15 பக்கம்  கடிதம் எழுதியிருந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. பின்னர் 9 பக்கம்தான் என்று மாற்றிக்கூறினார்கள். ஏன் இந்தக் குழப்பம் ?

2. அவருடைய  இரண்டு செல்போன்கள், லேப்டாப் என்ன ஆனது? 

3. கடிதம் தொடர்பான தடயவியல் அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை? 

4. ``அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யச் சொல்கிறார்கள்" என்று விஷ்ணுபிரியா பேசியிருக்கிறார். ஆனால், புகாருக்கு உள்ளான அதிகாரிமீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

5. புகாருக்கு உள்ளான அதிகாரிகள் ஏன் இதுவரை வெளிப்படையாக ஊடகங்களை எதிர்கொள்ள மறுக்கிறார்கள்? 

6. சி.பி.ஐ அதிகாரிகள் தன்னிச்சையாக  விசாரிக்காமல், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் அறிக்கையை ஏன் இணைக்க வேண்டும்?

7. கோகுல்ராஜ் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்ட ஸ்வாதியே, சம்பவ இடத்துக்கு வரவில்லை என நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

8. அப்படி என்றால், இந்த வழக்கில் யுவராஜ் எந்த இடத்தில் இருக்கிறார்? 

9. இந்த வழக்கை விசாரித்த என் மகள், யுவராஜுடன் பேசியது பொய்யா? 

10. ஸ்வாதியின் பதிலைப் பார்க்கும்போது இது சோடிக்கப்பட்ட வழக்கா? 


டிரெண்டிங் @ விகடன்