வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (21/09/2018)

கடைசி தொடர்பு:13:12 (21/09/2018)

அமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா?! அலர்ட்

ஆன்லைன் தளங்களில் நமக்கு முன்பின் அறிமுகமில்லாத பொருள்கள், சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தும் பொதுவான அளவுகோல் அதன் ரிவ்யூக்கள். ஆனால், அதுவே பாதி பொய் என்றால் என்ன செய்ய?

அமேசான் ரிவ்யூக்கள் எல்லாமே உண்மைதானா?! அலர்ட்

முன்பின் அறிமுகமில்லாத ஒரு நிறுவனத்தின் பொருளை எப்படி நம்மால் அமேசானிலோ, ஃப்ளிப்கார்ட்டிலோ தைரியமாக வாங்கமுடிகிறது. 100 ரூபாய் டேட்டா கேபிள் தொடங்கி 20,000 ரூபாய் தங்கச்சங்கிலி வரை எப்படி அவற்றை நேரில் பார்க்காமலேயே நம்பிக்கையுடன் ஆர்டர் செய்யமுடிகிறது. ஒன்று, ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஷாப்பிங் தளங்கள் மீது இருக்கும் நம்பிக்கை. இரண்டாவது, அந்தப் பொருளுக்கு அதன் முந்தைய வாடிக்கையாளர்கள் கொடுத்திருக்கும் ரிவ்யூ. முதல் விஷயத்தில் பெரிய பிரச்னை எதுவுமில்லை. ஆனால், இரண்டாவதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. இன்று நாம் பயன்படுத்தும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள், சுற்றுலா இணையதளங்கள், உணவு சார்ந்த தளங்கள் என அனைத்திலும் உண்மையான ரிவ்யூக்கள் மட்டுமே இல்லை; போலியான ரிவ்யூக்களின் பாதிப்பும் இருக்கிறது.  சமீபத்தில்கூட இத்தாலியில், ட்ரிப் அட்வைசர் இணையதளத்தில் போலியான ரிவ்யூக்களை போஸ்ட் செய்ததற்காக ஒருவருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னைக்காக முதன்முதலில் சிறைக்கு அனுப்பப்பட்டவர் இவராகத்தான் இருப்பார். ஆனால், இதற்கு முன்னரே அமேசான் பலமுறை நிறுவனங்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது; போலி ரிவ்யூக்களைத் தடுப்பதற்காக AI-யைப் பயன்படுத்திவருகிறது; அப்படியிருந்தும் ஏன் தடுக்க முடியவில்லை எனக் கண்டறிய விசாரணைக் குழுவையும் அமைத்திருக்கிறது. அந்தக் குழு செய்த விசாரணையில் பல்வேறு விஷயங்கள் புதிதாக வெளிவந்திருக்கின்றன. 

போலி ரிவ்யூக்களின் தேவை 

அமேசானில் விற்கப்படும் பொருள்களில் பாதிக்கும் மேற்பட்டவை தேர்ட்பார்ட்டி நிறுவனங்களிடமிருந்து டெலிவரி செய்யப்படுபவைதாம். இதிலும் பிரபல நிறுவனங்களின் பொருள்கள் என எடுத்துக்கொண்டால் மிகவும் குறைவாகவே இருக்கும். மீதி இருக்கும் அனைத்துப் பொருள்களுமே சாதாரண தேர்ட்பார்ட்டி நிறுவனங்கள் வாங்கி விற்பவைதாம். இப்படி ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் அமேசானில் வர்த்தகம் செய்வதால் அவற்றுள் கடும்போட்டி நிலவும். உதாரணமாக போன் சார்ஜர் ஒன்று வாங்குவதற்காக அமேசானில் தேடுகிறோம் என வைத்துக்கொள்வோம். நாம் முதலில் சர்ச் பாக்ஸில், `Mobile Charger' என டைப் செய்தால் நூற்றுக்கணக்கான சார்ஜர்கள் வந்துவிழும். இவற்றில் பெரும்பாலும் நாம் எதை வாங்குவோம். முதல் பக்கத்தில் இருப்பதைத்தானே உடனே தேர்வு செய்வோம். அப்படியெனில் மீதி சார்ஜர்கள், நம் கண்ணிலேயே படாது. இப்படி முதல் பக்கத்திலேயே தங்கள் சார்ஜர்கள் வருவதற்கு நிறுவனங்கள் இரண்டுவிதமான உத்திகளைக் கையாள்கின்றன. முதலாவது அமேசானில் விளம்பரம் செய்வது; இரண்டாவது வாடிக்கையாளர்களிடம் நல்ல ரிவ்யூக்களைப் பெறுவது. முதலாவது செலவு குறைவுதான் என்றாலும், இப்படிப் பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் பொருள்களை அமேசான் `sponsored' எனக் காட்டிவிடும். எனவே, அதிகளவில் வாடிக்கையாளர்களைப் பெறமுடியும். அதுவும் இப்படி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் பிரபல நிறுவனங்கள் என்றால் ஓகே. சின்னச் சின்ன நிறுவனங்கள் என்றால் இது பலனே அளிக்காது.

ரிவ்யூ

எனவே ஒரே வழி, நல்ல ரிவ்யூக்களை வாங்குவதுதான். இதன்மூலம்தான் பிற நிறுவனங்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முடியும். அமேசான், பொருள்கள் வரிசைப்படுத்திக் காட்ட இரண்டு விஷயங்களை முக்கியமாகக் கருத்தில்கொள்ளும். முதலாவது, அந்தப் பொருள்களுக்கு இருக்கும் ரிவ்யூ ரேட்டிங்; இரண்டாவது, எத்தனை பேர் அந்தப் பொருளையும், நிறுவனத்தையும் தேடுகின்றனர் என்பது. இதில் நல்ல ரிவ்யூக்கள் பெறுவது என்பது பொருள் விற்கும் நிறுவனத்தின் மதிப்பையும் உணர்த்துவதோடு, புதிய வாடிக்கையாளர்களையும் அதிகளவில் ஈர்க்கும். ஆனால், இவற்றைப் பெறுவது என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை; காரணம், முதலில் நம்முடைய பொருள் தரமாக இருக்கவேண்டும்; அடுத்து அதிகளவில் வாடிக்கையாளர்கள் நம் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தியிருக்க வேண்டும்; அவர்களும் நல்ல ரிவ்யூக்களைத் தந்திருக்க வேண்டும்; அந்த ரிவ்யூக்கள் நம் போட்டியாளரை விடவும் அதிகமாக இருக்கவேண்டும். நேர்மையாக இவை அனைத்தும் ஒரு நிறுவனத்துக்கு நடப்பது அரிது. பிரபல நிறுவனங்களுக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். ஆனால், சின்னச் சின்ன நிறுவனங்களுக்கு இதெல்லாம் நடக்காது. எனவேதான் போலி ரிவ்யூக்களை கையில் எடுக்கின்றனர்.

எப்படி உருவாகின்றன?

செயற்கையாக இடப்படும் போலி ரிவ்யூக்களை தடுப்பதற்காக அமேசான் எத்தனையோ முயற்சிகளை எடுத்திருக்கிறது. ஆனாலும், இவற்றைத் தடுக்கமுடியவில்லை. காரணம், இதைச் செய்பவர்களின் புத்திசாலித்தனம்தான். அதில் இரண்டை மட்டும் இங்கே பார்க்கலாம். 

போலியாக ரிவ்யூக்களை இடுவதற்காகத் தனியாக ஃபேஸ்புக் சீக்ரட் க்ரூப்களே இருக்கின்றன. இதில் இருப்பவர்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தொடர்புகொண்டு தங்கள் பொருள்களை வாங்க அறிவுறுத்தும். வாங்கிய பின்பு அமேசானில் நல்லபடியாக ரிவ்யூவும் கொடுக்கச் சொல்லும். இதற்காகப் பணமும் வழங்கும். சில சமயம் அந்தப் பொருளுக்கான விலை அல்லது அமேசான் கூப்பன் ஆகியவற்றையும் கொடுக்கும். இதன்மூலம் மிகக்குறைவான செலவிலேயே நிறைய 5 ஸ்டார் ரிவ்யூக்களை வாங்கிவிட முடியும். மேலும் அமேசானும், பொருளை நிஜமாகவே வாங்கிய வாடிக்கையாளர் என்பதால் கண்டுபிடிக்கவும் முடியாது.

ஃபேஸ்புக்

இதேபோல, ஏற்கெனவே தங்கள் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்குப் பணம் கொடுத்தும் நல்ல ரிவ்யூக்களை வாங்கிவிடும் நிறுவனங்களும் இருக்கின்றன. அல்லது வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட்களை பணம் கொடுத்து வாங்கிவிட்டு பின்னர் Bot-கள் மூலமாக ரிவ்யூக்களை குவித்துவிடும். இந்த இரண்டு முறைகளுமே அமேசானின் பாலிசிகளுக்கு எதிரானது. இப்படிச் செய்யக் கூடாது என்று ஏற்கெனவே பலமுறை நிறுவனங்களை அமேசான் எச்சரித்திருக்கிறது. சில நிறுவனங்களை நீதிமன்றத்துக்கும் இழுத்திருக்கிறது. ஃபேஸ்புக்குடன் இணைந்து போலி ரிவ்யூ குழுக்களை களையெடுக்கவும் முயன்றது. ஆனால், எதுவுமே இவர்களை முழுமையாகத் தடுக்கமுடியவில்லை. இதற்கு இன்னோர் உதாரணமும் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப் போலியான ரிவ்யூக்களை எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் ஊக்குவிக்கின்றனவோ, அவற்றையெல்லாம் AI மூலம் தடுக்க அமேசான் வழிசெய்தது. இவற்றைச் சாதகமாக எடுத்துக்கொண்ட விற்பனை நிறுவனங்கள் Bot-கள் மூலம், போட்டி நிறுவனங்களின் பொருள்களுக்கு நல்ல ரிவ்யூ விழச்செய்தனர். இதனை மோப்பம் பிடிக்கும் அமேசானின் AI உடனே அந்த நிறுவனங்களைத் தடைசெய்துவிடும். அவ்வளவுதான். Mission Accomplished! இதைத் தெரிந்துகொண்ட அமேசான் பின்னர், நிறுவனங்களைத் தடைசெய்வதை நிறுத்திவிட்டு ரிவ்யூக்களை மட்டுமே பிளாக் செய்தது. உறுதியாக தில்லுமுல்லு செய்கின்ற நிறுவனங்கள் எனக் கண்டறியப்படும் நிறுவனங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது. இப்படி அமேசானின் எல்லா ஓட்டைகளையும் தெளிவாகப் பயன்படுத்துவதால், போலி ரிவ்யூவர்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்.

அமேசான் நடத்திய விசாரணை

உலகம் முழுவதுமே இப்படி போலி ரிவ்யூக்கள் பதிவிடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இதற்காகத் தனி நிறுவனங்களும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதிகளவில் நடப்பது என்னவோ சீனாவில்தான். எனவே இதுகுறித்து ஆராய்வதற்காக அமேசான் பல்வேறு முயற்சிகளைச் செய்தது. இறுதியில் ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்தது. தற்போது அந்தக் குழு சில முக்கியமான விஷயங்களைக் கண்டறிந்துள்ளது. இந்தத் தகவல்களை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி அமேசானில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மோசடிகளில் ஈடுபடுவதற்கு அமேசான் ஊழியர்களே உடந்தையாக இருந்துள்ளனர்.

Warehouse

இவர்களில் பெரும்பாலானோர் மிகக்குறைவான ஊதியங்களில் பணிபுரிவதால் இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அவர்கள் வலையில் விழுந்துவிடுகின்றனர். இந்த ஊழியர்கள் மூலம் பொருள்களின் விற்பனை விவரம், அதற்கு ரிவ்யூ செய்தவர்கள், போட்டியாளர்களின் விவரம்  போன்றவற்றை தரகர்கள் பெற்றுவிடுகின்றனர். பின்னர் நெகட்டிவ் ரிவ்யூ செய்தவர்களை தொடர்புகொண்டு அவர்களுக்குப் பணம்கொடுத்து பாசிட்டிவ் ரிவ்யூக்களை போஸ்ட் செய்யச்சொல்கின்றனர். இப்படி ஒரு விசாரணை நடத்துவதை அமேசான் நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து அமேசான் இந்தியாவிடம் விளக்கம் கேட்டோம்.

``எங்கள் ஊழியர்கள் பணியிடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகக் கடுமையான விதிமுறைகளை வைத்திருக்கிறோம். இதனை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதேபோல எங்களுடைய இணையதளத்தின் பாதுகாப்பிலும் உறுதியாக இருக்கிறோம். யாரேனும் விற்பனையாளர்கள் அதில் தவறு செய்வதால் கண்டறியப்பட்டால், உடனே அவர்களின் விற்பனை கணக்குகள் நீக்கப்படும். போலியான ரிவ்யூக்கள் ஏதேனும் பதிவிட்டிருந்தால் அதுவும் நீக்கப்படும். அவர்களின் வர்த்தகம் தொடர்பான பரிவர்த்தனைகள் ஏதேனும் அமேசானுடன் இருந்தால், அவையனைத்தும் உடனடியாக நிறுத்திவைக்கப்படும். சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுப்போம்." என அந்நிறுவனத்தின் பிரதிநிதி நம்மிடத்தில் தெரிவித்தார்.

ஆனால், இப்படி நடக்கும் முறைகேடுகள் அனைத்தும் சாமர்த்தியமாக நடைபெறுவதால், எத்தனை பேரை அமேசானால் கண்டறியமுடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

எப்படிக் கண்டுபிடிப்பது?

அமேசான் முதலில் புத்தகம் விற்கும் இணையதளமாக மட்டும் இருந்தபோது, ஜெஃப் பசாஸ்தான் வாடிக்கையாளர்களின் ரிவ்யூக்கள் வெளிப்படையாக இணையதளத்தில் தெரியும்படி மாற்றினார். அப்படி 1995-ல்தான் இந்த ரிவ்யூ சிஸ்டம் அமேசானில் அறிமுகமானது. அன்றிலிருந்து அப்படியே தொடர்கிறது. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த ரிவ்யூக்கள் இன்று தொழில்நுட்ப தில்லுமுல்லுகள் மூலம் அவர்களை ஏமாற்றும் ஒன்றாக மாறிவிட்டது. இவற்றைத் தடுக்க இணையதளங்கள் ஒருபக்கம் முயற்சி செய்துவந்தாலும், பிற தேர்ட்பார்ட்டி நிறுவனங்களும் இதற்காக உதவிவருகின்றன.

அமேசான் ரிவ்யூ ரிப்போர்ட்

உதாரணமாக www.reviewmeta.com தளத்தைக் குறிப்பிடலாம். இந்த தளத்தில் நாம் வாங்கவிருக்கும் பொருளின் லிங்க்கை பேஸ்ட் செய்தால், அதன் ரிவ்யூக்களை ஆராய்ந்து எத்தனை சதவிகித ரிவ்யூக்கள் நம்பத்தகுந்தவை எனச் சொல்லும். இதேபோல இன்னும் சில தளங்களும் இருக்கின்றன. இதுதவிர நாமும் ரிவ்யூ, அதன் யூசர் நேம், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் போன்றவற்றைக் கொஞ்சம் உற்றுக்கவனிப்பதன்மூலம் போலி ரிவ்யூக்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அமேசான் தளத்துக்கு மட்டுமல்ல; ரிவ்யூ சிஸ்டம் கொண்டிருக்கும் அனைத்து தளங்களுக்குமே பொருந்தும். இதற்கான தீர்வுகளை அவர்கள்தாம் வழங்கவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்