வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (22/09/2018)

கடைசி தொடர்பு:15:55 (22/09/2018)

``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி!" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்

``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான ஸ்வாதி கடந்த 10-ம் தேதி நீதிமன்றத்தில், ``கோகுல்ராஜ் என்னோடு கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனால், அவர் யார் என்று தெரியாது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோயிலை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுநாள் வரை அங்கு சென்றதில்லை" என்று கூறியநிலையில், கடந்த 18-ம் தேதி இவ்வழக்கில் 6-வது அரசு தரப்பு சாட்சியும், ஸ்வாதி, கோகுல்ராஜின் நண்பருமான கார்த்திக்ராஜா வாக்குமூலம் அளித்தார். `` `நானும், கோகுல்ராஜும் 23.6.2015 
அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்குப் போனோம். அங்கு பிரச்னை ஆகிவிட்டது
' என ஸ்வாதி என்னிடம் போனில் தெரிவித்தார்'' என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் மாவட்டம் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜ் அம்மா சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன், யுவராஜ் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோர் வாதாடினர். அரசுத் தரப்பு சாட்சியங்களும், யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கறிஞர்கள், கோகுல்ராஜ் கொலை வழக்கு
 
ஸ்வாதியின் அம்மா செல்வி கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து...

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: நீங்கள் எங்கு குடியிருக்கிறீர்கள்?

செல்வி: நான் நாமக்கல் மாவட்டம் இராமநாதபுரம் கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: ஸ்வாதிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

செல்வி: ஸ்வாதி என் மகள். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கில் இறந்த கோகுல்ராஜ் உங்களுக்குத் தெரியுமா?

செல்வி: தெரியாது. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கை பற்றியாவது உங்களுக்குத் தெரியுமா?

செல்வி: இந்த வழக்கைப் பற்றியும் எனக்குத் தெரியாது. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: நீங்களும், ஸ்வாதியும் திருச்செங்கோடு காவல் நிலையத்திற்குச் 
சென்றிருக்கிறீர்களா?

செல்வி: நானும், ஸ்வாதியும் 2,3 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறோம். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: எந்த வழக்கு விசாரணைக்காக திருச்செங்கோடு காவல் நிலையத்துக்குச் சென்றீர்கள் என்று தெரியுமா?

செல்வி: தெரியாது. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: காவல் நிலையத்துக்குள் சென்றீர்களா?

செல்வி: நான் காவல்நிலையத்தின் வெளியே இருந்தேன். என் மகள் ஸ்வாதி காவல் நிலையத்துக்கு உள்ளே இருந்தார். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: காவல் துறையினர் உங்களை விசாரித்தார்களா?

செல்வி: விசாரிக்கவில்லை. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: உங்கள் மகள் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது காவல்துறையினர் என்ன விசாரித்தார்கள் என உங்கள் மகளிடம் கேட்டீர்களா?

செல்வி: என் மகளிடம் கேட்கவில்லை. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: காவல்துறையினர் உங்களை எத்தனை முறை வரச் சொன்னார்கள்?

செல்வி: இரண்டு, மூன்று முறை வரச் சொன்னார்கள்.

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: உங்கள் மகளை வேறு எந்த காவல் நிலையத்திலாவது விசாரித்தார்களா?

செல்வி: வேறு எங்கும் விசாரிக்கவில்லை. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: உங்கள் வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்தார்களா?

செல்வி: பாதுகாப்பு கொடுத்திருந்தார்கள்.

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: எதற்காக பாதுகாப்பு கொடுத்திருந்தார்கள் என்று தெரியுமா?

செல்வி: எனக்குத் தெரியாது. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வசதியானவரா?

செல்வி: நான் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: எத்தனை ஏக்கர் வைத்திருக்கிறீர்கள்?

செல்வி: ஐந்தாறு ஏக்கர் உள்ளது. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: அதில் விவசாயம் ஏதாவது செய்கிறீர்களா?

செல்வி: விவசாயம் எதுவும் செய்யவில்லை. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு உங்கள் குடும்பம் பெரிய குடும்பம்?

செல்வி: இல்லை.

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: காவல்துறையினர் உங்கள் வீட்டுக்கு எத்தனை நாள்கள் பாதுகாப்பு கொடுத்தார்கள்?

செல்வி: ஒரு மாதம் பாதுகாப்பு கொடுத்தார்கள். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி:  உங்கள் மகள் ஸ்வாதிக்கு சாமி கும்பிடும் வழக்கம் உண்டா?

செல்வி: உண்டு.

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: அவர் எப்போதாவது தனியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் 
கோயிலுக்குச் சென்றிருக்கிறாரா?

செல்வி: தெரியாது. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: நீங்கள் இருவரும் சேர்ந்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலுக்குப் போயிருக்கிறீர்களா?

செல்வி: இல்லை. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: உங்கள் மகள் கல்லூரிக்கு எதில் செல்வார்?

செல்வி: கல்லூரிப் பேருந்தில் செல்வார். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: 23.6.2015-ம் தேதி உங்கள் மகள் ஸ்வாதியும்  கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யுவராஜும் அவருடைய ஆட்களும் உங்கள் மகளையும், கோகுல்ராஜையும் மிரட்டியதாக உங்கள் மகள் உங்களிடம் சொன்னதாக ஏற்கெனவே போலீஸில் சொல்லி இருக்கிறீர்கள்?

செல்வி: நான் அப்படிச் சொல்லவில்லை. சொல்லாததையெல்லாம் போலீஸார் எழுதிக் கொண்டார்கள். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: உங்க மகளை வீடியோவில் காட்டினால் அடையாளம் காட்ட முடியுமா?

செல்வி: முடியும். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: (செல்வியை பார்த்து...) திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவைப் போட்டுக் காட்டுகிறோம். அதில் உங்கள் மகளை பார்த்துச் சொல்லுங்கள். 

(இதனையடுத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் இருந்த கேமரா 1, கேமரா 5 மூலம் பதிவாகி இருந்த வீடியோவை ப்ரொஜெக்டர் மூலம் நீதிமன்ற சுவரில் திரையிட்டுக் காட்டப்பட்டது.) 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: (வீடியோவை இடையில் நிறுத்தி...) கோயிலுக்குள் போகும் நபர்கள் யார்?

செல்வி: பசங்களும், பொண்ணுங்களும் போகிறார்கள். 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: அதுதான் அவர்கள் யார்?

செல்வி: அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. 

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: (வீடியோவை இடையில் நிறுத்தி...) கோகுல்ராஜை அழைத்துச் செல்பவர்கள் யார்?

செல்வி: அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது.

அரசு வழக்கறிஞர் கருணாநிதி: நீங்கள் என்ன வகுப்பைச் சேர்ந்தவர்?

செல்வி: நான் கொங்கு வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். 

இனி கோகுல்ராஜ் அம்மா சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன், ஸ்வாதி தாயார் செல்வியிடம் நடத்திய குறுக்கு விசாரணை...

வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015-ம் தேதி உங்கள் மகள் ஸ்வாதியும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்கள். அங்கு யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை கடத்திச் சென்றார்கள் என்ற விவரத்தை உங்கள் மகள் ஸ்வாதி உங்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார்?

செல்வி: தவறு. 

வழக்கறிஞர் நாராயணன்: திரையிட்டு காட்டப்பட்ட சிசிடிவி வீடியோவில் ஸ்வாதி, கோகுல்ராஜ் மற்றும் 
யுவராஜ், அருண்குமார், ரகு (எ) ஶ்ரீதர், ரஞ்சித்,செல்வராஜ், சந்திரசேகரன் இறந்து போன ஜோதிமணி, சதீஷ் ஆகியோர் இருந்தார்கள். அவர்களை அடையாளம் காட்டுவீர்களா?

செல்வி: யாரையும் எனக்கு அடையாளம் தெரியாது. 

வழக்கறிஞர் நாராயணன்: அடையாளம் தெரிந்திருந்தும், யுவராஜையும் அவருடைய ஆட்களையும் காப்பாற்றுவதற்காக 'அடையாளம் தெரியாது' என்று பொய்யா கூறுகிறீர்கள்?

செல்வி: இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: உங்களுக்கு எத்தனை மகள்கள். அவர்கள் பெயர்கள் என்ன?

செல்வி: எனக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் ஸ்வாதி, மற்றொருவர் பெயர் ப்ரீத்தி. 

வழக்கறிஞர் நாராயணன்: உங்கள் கணவர் என்ன தொழில் செய்கிறார்?

செல்வி: லாரி டிரைவர். 

வழக்கறிஞர் நாராயணன்: ஸ்வாதி எப்போது படிப்பை முடித்தார்? 

செல்வி: 2015-ம் ஆண்டு மே மாதம்.

வழக்கறிஞர் நாராயணன்: எந்தக் கல்லூரியில் படித்தார்?

செல்வி: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லூரியில் படித்தார். 

வழக்கறிஞர் நாராயணன்: என்ன படித்தார்?

செல்வி: பி.இ., 

வழக்கறிஞர் நாராயணன்: காவல்துறை உங்களை விசாரித்தபோது, 23.6.2015-ம் தேதி ஸ்வாதி திருச்செங்கோட்டில் தன் நண்பரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றாள் என்றும் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார் என்றும், அப்போது உங்களிடம் ஸ்வாதி தான் வைத்திருந்த செல்போன் பேருந்தில் தொலைந்து விட்டது என்று கூறியதாகச் சொல்லி இருக்கிறீர்கள். 

செல்வி: நான் அப்படிச் சொல்லவில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: காவல்துறையினர் உங்களை விசாரித்தபோது... 24.6.2015-ம் தேதியன்று காலை சுமார் 8:30 மணிக்கு கார்த்திக்ராஜா உங்கள் போனுக்கு அழைத்து, உங்கள் மகள் ஸ்வாதியிடம் பேச வேண்டும் என்று கூறினார் என்றும், அதனால் உங்கள் போனை ஸ்வாதியிடம் கொடுத்தீர்கள் என்றும், தொடர்ந்து ஸ்வாதியும், கார்த்திக்ராஜாவும் போனில் பேசிக்கொண்டார்கள் என்றும் கூறி இருக்கிறீர்கள்?

செல்வி: நான் கூறவில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: அதன் பிறகு சிறிது நேரம் கழித்து கோகுல்ராஜின் சகோதரன் கலைச்செல்வன் உங்கள் போனுக்கு அழைத்து, ஸ்வாதியிடம் பேச வேண்டும் என உங்களிடம் கூறியதன் பேரில் நீங்கள் உங்கள் போனை ஸ்வாதியிடம் கொடுத்து போனில் ஸ்வாதியும், கலைச்செல்வனும் பேசிக் கொண்டார்கள் என்று கூறி இருக்கிறீர்கள்?

செல்வி: அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: உங்கள் மகள் ஸ்வாதி 23.6.2015 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது உங்க மகளின் போனை யாரோ பிடுங்கிக் கொண்டார்கள் என்று ஸ்வாதியும், கலைச்செல்வனும் போனில் பேசிக்கொண்டிருந்தார்கள் எனக் காவல் துறையினர் விசாரணையில் நீங்கள் கூறி இருக்கிறீர்கள்? 

செல்வி: நான் அவ்வாறு எதுவும் கூறவில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015 அன்று, ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் சொன்னபடி திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் காலை 9.45 மணிக்கு சந்தித்தார் என்றும், அப்போது உங்கள் மகள் ஸ்வாதியிடம் புதிய செல்போன் வாங்குவதற்காக பணம் தேவைப்படுகிறது என்று கேட்டதாகவும், அதற்கு உங்கள் மகள் ஸ்வாதி 1000 ரூபாய் கோகுல்ராஜிடம் கொடுத்ததாகவும், அதை கோகுல்ராஜ் பெற்றுக் கொண்டதாகவும், அதன் பின் அங்கேயே ஸ்வாதியும், கோகுல்ராஜும் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது கோகுல்ராஜ் உங்கள் மகள் ஸ்வாதியிடம், தான் இதுவரை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றதில்லை என்றும், 'இருவரும் சென்று வரலாம்' என்று கூறியதாகவும், இவையனைத்தையும் ஸ்வாதி உங்களிடம் கூறியதாக காவல் துறையினர் விசாரணையில் நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள்?

செல்வி: நான் அவ்வாறு கூறவில்லை.  

வழக்கறிஞர் நாராயணன்: 24.6.2015-ம் தேதி ஸ்வாதி உங்களுக்குப் போன் செய்து உங்களை திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு வரச் சொன்னார். அதன் பேரில் நீங்கள் திருச்செங்கோடு காவல் நிலையத்துக்குச் சென்றீர்கள்?

செல்வி: செல்லவில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: 20.11.2015-ம் தேதியன்று காவல்துறையினர் உங்களை விசாரித்தார்களா?

செல்வி: தெரியவில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: 19.11.2015-ம் தேதியன்று உங்கள் மகள், யுவராஜை அடையாளம் காட்டக் கூடாது என்று சென்னையில் வைத்து யாரோ மிரட்டினார்கள் என்று காவல்துறையில் 20.11.2015-ம் தேதி நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். 

செல்வி: நான் சொல்லவில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: வழக்கின் முழு விவரமும் உங்களுக்குத் தெரியும்?

செல்வி: தெரியாது. 

வழக்கறிஞர் நாராயணன்: தற்போது, உண்மையை மறைத்து பொய்யாக சாட்சியம் அளிக்கிறீர்கள்?

செல்வி: இல்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: நீங்களும், யுவராஜும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் யுவராஜைக் காப்பாற்ற வேண்டி நீங்கள் உண்மைகளை மறைத்து பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள்?

செல்வி: இல்லை. 

மதிய இடைவேளைக்குப் பிறகு....

(அரசு சாட்சி: 6) ஸ்வாதி, கோகுல்ராஜின் கல்லூரி தோழன் கார்த்திக்ராஜா வாக்குமூலத்தில் இருந்து...

`` நான் கே.எஸ்.ஆர் கல்லூரியில் 2011 முதல் 2015 வரை இளங்கலை பொறியியல் படித்துள்ளேன். இறந்துபோன கோகுல்ராஜை எனக்கு தெரியும். அவரும், நானும் நான்கு வருடங்கள் கே.எஸ்.ஆர் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். கல்லூரியில் என் வகுப்பில் படித்த அனைவரும் கோகுல்ராஜுக்கு நண்பர்கள். 
24.6.2015-ம் தேதியன்று காலை 7:30 மணிக்கு கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் எனக்கு போன் செய்து, 'கோகுல்ராஜ் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறி விட்டு வந்தான். கோகுல்ராஜ் கல்லூரிக்கு வந்தானா? இல்லை, நண்பர்களை பார்க்கச் சென்று விட்டானா?' என என்னிடம் கேட்டார். அதற்கு நான், 'எனக்குத் தெரியவில்லை. நண்பர்களிடம் விசாரித்துச் சொல்கிறேன்' என்று கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனிடம் கூறினேன்.
 
அதற்குப் பிறகு நான் ஸ்வாதிக்கு போன் செய்து பார்த்தபோது அவருடைய செல்போன் நம்பர் 'ஸ்விட்ச் ஆஃப்' என்று வந்தது. ஸ்வாதியின் செல்போன் எண் தற்போது எனக்கு ஞாபகம் இல்லை. நான் நண்பர்களிடம் கோகுல்ராஜைப் பற்றி விசாரிப்பதை அறிந்துகொண்டு ஸ்வாதி தன் தாயார் செல்போனில் இருந்து எனக்கு போன் செய்தார். ஸ்வாதி என்னிடம் போனில் பேசியபோது, 23.6.2015-ம் தேதியன்று கோகுல்ராஜ் செல்போன் வாங்குவதற்காக தன்னிடம் 1,000 ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்டதாகவும், பணத்தை திருச்செங்கோட்டில் வந்து பெற்றுக்கொள்வதாக கோகுல்ராஜ் கூறியதாகவும், தான் திருச்செங்கோட்டுக்குச் சென்று கோகுல்ராஜுக்கு பணத்தைக் கொடுத்ததாகவும், அதன் பிறகு தானும், கோகுல்ராஜூம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றதாகவும், இருவரும் கோயில் திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது அங்கு வந்த ஒருவர், யுவராஜ் உங்களை அழைப்பதாகக் கூறியதாகவும், அப்போது கோகுல்ராஜ் அவர்களுடன் சென்று பேசியதாகவும், அதன் பிறகு தானும் அந்த நபர்களிடம் சென்று பேசியதாக, ஸ்வாதி என்னிடம் போனில் கூறினார். 

மேற்கொண்டு என்னிடம் பேசிய ஸ்வாதி, அதன் பிறகு 4 பேர் தன்னை மட்டும் கோயிலுக்குக் கீழே அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகு தான் பேருந்தில் செல்ல முற்பட்டபோது, காரில் ஒருவர் வந்ததாகவும், அவரிடம் 'கோகுல்ராஜ் எங்கே?' என்று தான் கேட்டதற்கு கோகுல்ராஜை மலையிலேயே விட்டு விட்டு வந்துவிட்டதாக தன்னிடம் கூறியதாக, ஸ்வாதி என்னிடம் கூறினார்.

ஸ்வாதி சொன்ன விவரத்தை கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வனிடம் போன் செய்து கூறினேன். அதற்கு கலைச்செல்வன் ஸ்வாதியின் போன் நம்பரை என்னிடம் கேட்டார். நான் ஸ்வாதியின் நம்பரை எஸ்.எம்.எஸ் மூலம் கலைச்செல்வனுக்கு அனுப்பி வைத்தேன். அதற்குக் கலைச்செல்வன் என்னையும், ஸ்வாதியையும் ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வரச் சொன்னார். பின்னர், 'வேண்டாம்.. திருச்செங்கோடு பேருந்து நிலையத்துக்கு வந்து விடுங்கள்.' என்று கலைச்செல்வன் என்னிடம் போனில் கூறினார். 

24.6.2015-ம் தேதியன்று காலை சுமார் 9:30 மணிக்கு திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் கலைச்செல்வன் ஸ்வாதியிடம் பேசிக்கொண்டிருந்தார். கலைச்செல்வனுடன் அவர் உறவினர்களும் வந்தார்கள். அதன் பிறகு நாங்கள் மினி பேருந்து மூலம் திருச்செங்கோடு டவுன் காவல் நிலையத்துக்குச் சென்றோம். சுமார் 1:30 மணிக்கு மேல் கோகுல்ராஜின் தாயார் புகார் எழுதி திருச்செங்கோடு காவல் நிலையத்தில் கொடுத்தார். அதன் பிறகு காவல் ஆய்வாளர் விசாரித்தார். அன்று 4.30 மணி இருக்கும்போது ரயில்வே டிராக்கில் ஒரு பிரேதம் கிடப்பதாகக் கோகுல்ராஜின் தாயார் செல்போனுக்குத் தகவல் வந்தது. அன்று இரவு நேரத்தில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் என்னை விசாரித்தார்.
 
ஸ்வாதி கூறிய தகவலை செப்டம்பர் 2-ம் தேதியன்று நாமக்கல் குற்றவியல் நடுவர் எண்.2 நீதிமன்றத்தில் நான் சாட்சியம் அளித்தேன். அதன் பிறகு செப்டம்பர் 25-ம் தேதியன்று சி.பி.சி.ஐ.டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்னை விசாரித்தார். நான்  நாமக்கல் குற்றவியல் நடுவர் எண்.2 நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் குறியீடு செய்யப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் நான்தான் கையொப்பம் இட்டேன்."

(யுவராஜின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ எழுந்து குறுக்கீடு செய்தார்...)

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: திருச்செங்கோட்டில் உள்ள  மலைக்கோயிலுக்குச் செல்லும்போது ஸ்வாதி மற்றும் கோகுல்ராஜ் ஆகியோரின் செல்போனை யாரிடம் கொடுத்தார்கள். 

கார்த்திக்ராஜா: தெரியாது. ஸ்வாதியின் செல்போனை மட்டும் அங்கு வந்து விசாரித்தவர் பெற்றுக்கொண்டு மறுநாள் தருவதாகக் கூறியதாக ஸ்வாதி என்னிடம் சொன்னார்.
 
அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி: ஸ்வாதியும், கோகுல்ராஜையும் உங்களுக்கு எத்தனை வருடமாகத் தெரியும்.

கார்த்திக்ராஜா: ஸ்வாதியும், கோகுல்ராஜும் எனக்கு 4,5 வருடமாக தெரியும்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி: திருச்செங்கோடு மலைக்கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஃபுட்டேஜில் பதிவான வீடியோவைப் பார்த்தால் அடையாளம் காட்ட முடியுமா?

கார்த்திக்ராஜா: என்னால் அடையாளம் காட்ட முடியும். 

(அதையடுத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் இருந்த கேமரா 1, கேமரா 5 மூலம் பதிவாகி இருந்த வீடியோவை ப்ரொஜெக்டர் மூலம் நீதிமன்ற சுவரில் முழுமையாகத் திரையிட்டு காட்டப்பட்டது.)
 
அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வீடியோவில் கோகுல்ராஜ், ஸ்வாதி யார்?

கார்த்திக்ராஜா: கோயிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் உள்ள கடை பக்கமாகத் திரும்பிச் சென்ற நபர்களில் முதல் இருந்த ஆண் கோகுல்ராஜ். அவருடன் வந்த பெண் ஸ்வாதி. பிறகு முதலில் கோயிலில் நுழைவு வாயிலின் வழியாக வெளியே செல்லும் பெண் ஸ்வாதி போல தெரிகிறது. அதற்குப் பின்னால் கோகுல்ராஜ் சில நபர்களுடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் கோயிலுக்கு உள்ளே வருகிறார். அவர்களுடன் உள்ள நபர்களை யார் என்று எனக்குத் தெரியாது.
 
(இனி கார்த்திக்ராஜாவிடம் யுவராஜ் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ நடத்திய குறுக்கு விசாரணை...)

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உண்டா... இல்லையா?

கார்த்திக்ராஜா: உண்டு. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: நீ நல்லா படிப்பியா?

கார்த்திக்ராஜா: நன்றாக படிப்பேன். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்க அண்ணன் என்ன படித்திருக்கிறார்?

கார்த்திக்ராஜா: எங்க அண்ணன் வெளிநாட்டில் எம்.பி.ஏ., படித்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்க அண்ணனுக்கு பாஸ்போர்ட், விசா உள்ளதா?

கார்த்திக்ராஜா: உள்ளது. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உனக்கு?

கார்த்திக்ராஜா: பாஸ்போர்ட் மட்டும் உள்ளது. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கா?

கார்த்திக்ராஜா: வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசை இருக்கு. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: விசாரணை காலகட்டத்தில் என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?

கார்த்திக்ராஜா: படிப்பை முடித்து விட்டேன். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: இந்த வழக்கு சம்பந்தமாக முதன்முதலில் யார் உங்களை விசாரித்தார்?

கார்த்திக்ராஜா: 24.6.2015ம் தேதியன்று சுமார் மதியம் 1 மணிக்கு மேல் என்னை முதல் முறையாக சந்திரகலா என்ற உதவி ஆய்வாளர் விசாரித்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: புகார் கொடுத்த உடனே உதவி ஆய்வாளர் சந்திரகலா விசாரித்தாரா?

கார்த்திக்ராஜா: உடனே விசாரித்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: நீங்கள் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்தாரா?

கார்த்திக்ராஜா: பதிவு செய்யவில்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: அந்த சமயத்தில் ஸ்வாதி அங்குதான் இருந்தாரா?

கார்த்திக்ராஜா: அங்குதான் இருந்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ஸ்வாதியிடம் விசாரித்தாரா?

கார்த்திக்ராஜா: விசாரித்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  உதவி ஆய்வாளர் சந்திரகலா ஸ்வாதியின் வாக்குமூலத்தை பதிவு செய்தாரா?

கார்த்திக்ராஜா: இல்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  யாரிடம் புகார் கொடுக்கப்பட்டது?

கார்த்திக்ராஜா: உதவி ஆய்வாளர் சந்திரகலாவிடம் கொடுக்கப்பட்டது. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: அவர் புகாரை உங்களிடமோ, ஸ்வாதியிடமோ படித்துக் காட்டினாரா?

கார்த்திக்ராஜா: என்னிடமும், ஸ்வாதியிடமும் படித்து காட்டவில்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  அந்தப் புகாரில் உங்களிடமோ, ஸ்வாதியிடமோ கையொப்பம் பெற்றார்களா?

கார்த்திக்ராஜா: இல்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  காவல் நிலையத்திற்கு நீங்கள் சென்றபோது என்ன நேரம் இருக்கும்?

கார்த்திக்ராஜா: சுமார் 11:30 மணி இருக்கும். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  எவ்வளவு நேரம் காவல் நிலையத்தில் இருந்தீர்கள்?

கார்த்திக்ராஜா: மறுநாள் இரவு வரை காவல்நிலையத்தில் இருந்தோம். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ஸ்வாதி  காவல் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தார்?

கார்த்திக்ராஜா: தெரியவில்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: அதற்குப் பிறகு ஸ்வாதியை எப்போது பார்த்தீர்கள்?

கார்த்திக்ராஜா: 164 வாக்குமூலம் கொடுக்கும் போது பார்த்தேன். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  164 வாக்குமூலம் கொடுக்கச் செல்லும் போது ஒன்றாகத் தான் சென்றீர்களா?

கார்த்திக்ராஜா: ஒன்றாகத் தான் சென்றோம். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  அதற்கான அழைப்பாணை நீதிமன்றத்தில் இருந்து வந்ததா? யார் கொடுத்தார்கள்?

கார்த்திக்ராஜா: வந்தது. ஒரு காவலர் என்னிடம் கொடுத்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  அந்த காவலர்தான் உங்களை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றாரா?

கார்த்திக்ராஜா: ஆமாம்.

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்தான் ஸ்வாதியை சந்தித்தீர்களா?

கார்த்திக்ராஜா: குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குச் செல்லும் போது ஸ்வாதியை காவல் துறையினர் அழைத்து வந்தார்கள். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  அங்கு உங்களை யார் யார் விசாரித்தார்கள்?

கார்த்திக்ராஜா: காவல் உதவி ஆய்வாளர் சந்திரகலா என்னை விசாரித்த பிறகு, காவல் ஆய்வாளர் சக்ரபாணி என்னை விசாரித்தார். அதன் பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் என்னை விசாரித்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: 164 வாக்குமூலம் பதிவு செய்யும் போது காவல்துறையினர் உங்களிடம் விசாரணை செய்ததை கேட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்தார்களா?

கார்த்திக்ராஜா: பதிவு செய்தார்கள். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  'காவல் துறையினரிடம் மீண்டும் உங்களை ஒப்படைக்கமாட்டேன்.' என்று நீதிமன்ற நடுவர் உங்களிடம் உறுதி கூறினார்களா?

கார்த்திக்ராஜா: ஞாபகம் இல்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்களுக்கு இந்த வழக்கைப் பற்றி எதுவும் தெரியாது. பகுஜன் சமாஜ் கட்சிக்காரர்களும், விடுதலைச் சிறுத்தை கட்சிக்காரர்களும், காவல்துறையினரும் உங்களை மிரட்டியும் உங்களுடைய மற்றும் உங்க சகோதரருடைய பாஸ்போர்ட்டை முடக்கிவிடுவோம் என்று பயமுறுத்தியும், உங்களுக்குச் சொல்லிக் கொடுத்து அதன் பேரில் நீங்கள் சாட்சியம் அளித்திருக்கிறீர்கள்?

கார்த்திக்ராஜா: இல்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ஸ்வாதி உங்களிடம் எதுவும் பேசவில்லை. 

கார்த்திக்ராஜா: பேசியுள்ளார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: 'கோகுல்ராஜ் காணவில்லை' என்று முதன் முதலில் விசாரித்தது குமரன் என்ற நபரா?

கார்த்திக்ராஜா: ஞாபகம் இல்லை. (யோசித்தவாறு...) கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வன் தான்  
கோகுல்ராஜ் காணாமல் போனது பற்றி என்னிடம் விசாரித்தார். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: நீதிமன்ற நடுவர் எங்களை விசாரித்த போது கோகுல்ராஜ் காணவில்லை என்று உங்களிடம் முதல் முறை விசாரித்தது குமரன் என்று நீங்கள் கூறி இருக்கிறீர்கள்?

கார்த்திக்ராஜா: ஞாபகம் இல்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ஏற்கெனவே கலைச்செல்வனை பார்த்திருக்கிறீர்கள்? அவரோடு உங்களுக்கு பழக்கத்தில் இருந்திருக்கிறீர்கள்?

கார்த்திக்ராஜா: பார்த்திருக்கிறேன். பழக்கம் கிடையாது. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: குமரன் மற்றும் குமரனின் நண்பர்கள்தான் உங்களை இந்த வழக்கில் சேர்த்துள்ளார்கள்?

கார்த்திக்ராஜா: அவர்கள் யார் என்றே தெரியாது. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்களுடன் கல்லூரியில் லதா என்ற நபர் படித்தாரா?

கார்த்திக்ராஜா: தெரியவில்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: லதா உங்களுக்கு நன்றாகத் தெரியும்?

கார்த்திக்ராஜா: இல்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: கலைச்செல்வன் உங்களை எப்போது அழைத்தார்?

கார்த்திக்ராஜா: 24ம் தேதி. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: அதற்கு முன்பே உங்களுக்கும் கலைச்செல்வனுக்கும் தொடர்பு இருந்தது?

கார்த்திக்ராஜா: கிடையாது. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: 164 சாட்சியத்தில் நீங்கள் ''24.6.2015ம் தேதியன்று காலை 7:30 மணிக்கு கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் எனக்கு போன் செய்து கோகுல்ராஜ் கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு வந்தான். கோகுல்ராஜ் கல்லூரிக்கு வந்தானா? இல்லை.. நண்பர்களைப் பார்க்கச் சென்று விட்டானா என்று என்னிடம் கேட்டார் என்றும், 'அதற்கு நான், எனக்குத் தெரியவில்லை, நண்பர்களிடம் விசாரித்துச் சொல்கிறேன்' என்று கலைச்செல்வனிடம் கூறினேன் என்றும் அதன் பிறகு தான் ஸ்வாதிக்கு போன் செய்து பார்த்தபோது அவர் செல்போன் ஸ்விச்ட் ஆஃப் என்று வந்தது என்றும், ஸ்வாதியின் செல்போன் எண் எனக்கு தற்போது ஞாபகம் இல்லை என்றும், நான் நண்பர்களிடம் கோகுல்ராஜைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்ததை அறிந்து கொண்டு ஸ்வாதி தன் தாயார் செல்போனில் இருந்து எனக்கு போன் செய்தார்'' என்று கூறினீர்களா?

கார்த்திக்ராஜா: ஆமாம். கூறினேன்.
 
வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்களை காவல்துறையினர் விசாரித்தபோது, 'இருவரும் மேற்படி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் உள்ள திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது' என்று கூறியுள்ளீர்களா?

கார்த்திக்ராஜா: கூறினேன். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்களுக்கு வெளியில் உள்ள திண்ணைக்கும், பிரகாரத்திற்கும் வித்தியாசம் தெரியுமா?

கார்த்திக்ராஜா: தெரியும்.
 
வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்களை காவல்துறையினர் விசாரித்த போதும், 164 சாட்சியத்திலும், 'நான் மேற்சொன்ன விவரத்தைக் கலைச்செல்வனிடம் போன் செய்து கூறினேன். அதற்கு கலைச்செல்வன் ஸ்வாதியின் போன் நம்பரை என்னிடம் கேட்டார். நான் ஸ்வாதியின் நம்பரை எஸ்.எம்.எஸ் மூலம் கலைச்செல்வனுக்கு அனுப்பி வைத்தேன்.' என்று கூறினீர்களா?

கார்த்திக்ராஜா: போன் நம்பர் கொடுத்தேன். எஸ்.எம்.எஸ் அனுப்பியதாகக் கூறவில்லை.

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்கள் செல்போனை காவல்துறை அதிகாரிகள் பார்த்தார்களா?

கார்த்திக்ராஜா: பார்க்கவில்லை. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்க செல்போன் நம்பரை காவல்துறையினர் வாங்கிக் கொண்டார்களா?

கார்த்திக்ராஜா: வாங்கிக் கொண்டார்கள். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்கள் படிப்பு எத்தனை வருடங்கள்?

கார்த்திக்ராஜா: 4 வருடங்கள்.

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: கோகுல்ராஜை உங்களுக்கு எப்படித் தெரியும். 

கார்த்திக்ராஜா: கோகுல்ராஜ் கல்லூரியில் என்னுடன் படித்த நபர் என்ற முறையில் எனக்குத் தெரியும். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: உங்களுக்கும், கோகுல்ராஜுக்கும் கொடுத்தல், வாங்கல் பழக்கம் உண்டா?

கார்த்திக்ராஜா: உண்டு. 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: நீங்களும், கோகுல்ராஜூம் வெளியில் ஒன்றாக சென்றிருக்கிறீர்களா?

கார்த்திக்ராஜா: இன்டர்வியூக்கு சென்றிருக்கிறோம். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: கோகுல்ராஜ் வீட்டிற்கு சென்றிருக்கிறீர்களா?

கார்த்திக்ராஜா: சென்றிருக்கிறேன். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: தினேஷ், வைத்தியலிங்கம், விக்கி ஆகியோரை பார்த்திருக்கிறீர்களா?

கார்த்திக்ராஜா: பார்த்திருக்கிறேன். 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: அவர்களெல்லாம் யார்?

கார்த்திக்ராஜா: அவர்களும் கோகுல்ராஜின் நண்பர்கள்தான். 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  உங்களையும், தினேஷ், வைத்தியலிங்கம், விக்கி ஆகியோரையும், கொடுத்தல் வாங்கலில் பிரச்னை என்று கூறி காவல்நிலையத்தில் வைத்திருந்தார்கள்?

 

கார்த்திக்ராஜா: இல்லை. 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ:  புதிய பேருந்து நிலையத்தில் கோகுல்ராஜின் உறவினர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கும் கோகுல்ராஜின் உறவினர்கள் இருந்தார்கள். போராட்டம் நடந்தது. அதில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?

 

கார்த்திக்ராஜா: நான் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: கோகுல்ராஜின் உறவினர்கள் நண்பர்கள்  உங்களை மிரட்டியதால் சாட்சியம் அளித்துள்ளீர்கள்?

 

கார்த்திக்ராஜா: என்னை யாரும் மிரட்டவில்லை. 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ஸ்வாதியின் தாயாருக்கு நீங்கள் போன் செய்தீர்களா?

 

கார்த்திக்ராஜா: நான் போன் செய்யவில்லை. 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: காவல்துறை விசாரித்தபோது ஸ்வாதியின் தாயாருக்கு நீங்கள் போன் செய்ததாகக் கூறினீர்களா?

 

கார்த்திக்ராஜா: நான் போன் செய்ததாகக் கூறவில்லை.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: சி.சி.டி.வி ஃபுட்டேஜை முதல்முறையாக எங்கு பார்த்தீர்கள்?

 

கார்த்திக்ராஜா: தற்போது நீதிமன்றத்தில்தான் பார்த்தேன். 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: புகைப்படங்களை காட்டினார்களா?

 

கார்த்திக்ராஜா: காட்டினார்கள். 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: புகைப்படங்களை காவல் உதவி ஆய்வாளர் காட்டினாரா? காவல் ஆய்வாளர் காட்டினாரா?

 

கார்த்திக்ராஜா: தெரியவில்லை. 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: சி.சி.டி.வி ஃபுட்டேஜில் வரும் நபர்களை அடையாளம் காண்பிக்கும் அளவுக்குத் தெளிவாக இல்லை என்றாலும், காவல் துறையினர் புகைப்படங்களை உங்களிடம் காண்பித்து சொல்லிக்கொடுத்ததன் பேரில் நீங்கள் சி.சி.டி.வி ஃபுட்டேஜில் வரும் நபர்களை அடையாளம் காண்பித்து இருக்கிறீர்கள்?

 

கார்த்திக்ராஜா: எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: சி.சி.டி.வி ஃபுட்டேஜில் நீங்கள் அடையாளம் காண்பித்த நபர்கள் கோகுல்ராஜிம், ஸ்வாதியும் இல்லை?

 

கார்த்திக்ராஜா: கோகுல்ராஜூம், ஸ்வாதியும் இருக்கிறார்கள்.

 

இந்த விசாரணை மாலை 4:45 மணிக்கு நிறைவு பெற்றது. 

 

(அரசு சாட்சி: 7) கரூர் ரயில் நிலையத்தில் போக்குவரத்து ஆய்வாளர் கதிரேசன் வாக்குமூலத்தில் அளித்தபோது, ''நான் தென்னக ரயில்வேயில் கரூர் ரயில் நிலையத்தில் போக்குவரத்து ஆய்வாளராகப் பணிபுரிகிறேன். இதற்கு முன்பாக ஆனங்கூர் ரயில் நிலையத்தில் பணிபுரிந்தேன். அதற்கு முன்பு ஈரோடு ரயில் நிலையத்தில் துணை நிலைய மேலாளராக 2014 முதல் 2016 வரை பணிபுரிந்தேன். 24.6.2016ம் தேதியன்று  மதியம் 12:20 மணிக்கு காவிரி நிலைய அதிகாரி கைலாஷ் சந்மீனா தொலைபேசி மூலமாக காவேரி ரயில் நிலையத்திற்கும், ஆனங்கூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் ஒரு பிணம் கடப்பதாக எனக்கு தகவல் கொடுத்தார். நான் அந்தத் தகவலை பதிவு செய்து கொண்டு, ரயில்வே துணை ஆய்வாளர் அவர்களுக்கு என் உதவியாளர் மூலம் புகார் கொடுத்தேன். நான் கொடுத்த புகார் குறியீடு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்புசாமி எனக்கு போன் மூலம் தகவல் சொன்னார். அதன் பிறகே சி.பி.சி.ஐ.டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்னை விசாரணை செய்தார்." என்றார்.

  

போக்குவரத்து ஆய்வாளர் கதிரேசனிடம், யுவராஜ் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை செய்தார்...

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ஈரோடு ரயில் நிலையத்திற்கும், காவேரி ரயில் நிலையத்திற்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்கும்?

 

கதிரேசன்: 5 கீலோமீட்டர் இருக்கும். 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: காவேரி ரயில் நிலையத்திற்கும், ஆனங்கூர் ரயில் நிலையத்திற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?

 

கதிரேசன்: சுமார் 7.5 கீலோமீட்டர் இருக்கும்.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ஆனங்கூர் ரயில் நிலையத்தில் அடுத்து எத்தனை கி.மீ தூரத்தில் அடுத்த ரயில் நிலையம் உள்ளது?

 

கதிரேசன்: ஆனங்கூர் ரயில் நிலையத்திற்கு கிழக்கே 8 கீ.மீட்டர் தூரத்தில் சங்ககிரி ரயில் நிலையம் இருக்கிறது.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: அங்கு அனைத்து ரயில்களும் நிற்குமா?

 

கதிரேசன்: சங்ககிரி ரயில் நிலையத்தில் வெஸ்ட் கோஸ்ட் ரயில் இரண்டு நிமிடம் நிற்கும்.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ரயில்வே இன்ஜின் டிரைவர், கார்டு, ரயில் நிலைய மாஸ்டர் ஆகியோரிடம் வாக்கி டாக்கி உள்ளதா?

 

கதிரேசன்: உள்ளது. 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ரயில்வே தண்டவாளத்தில் ஏதாவது தடை இருந்தாலோ, பிணம் கிடந்தாலோ ரயில் நிலைய மாஸ்டருக்கு ரயில்வே இன்ஜின் டிரைவர் தகவல் கொடுப்பாரா?

 

கதிரேசன்: தகவல் கொடுப்பார்.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ரயில்வே பாதுகாப்பு படையும், ரயில்வே காவல்துறையும் வெவ்வேறான துறைகளா?

 

கதிரேசன்: ஆமாம். ரயில்வே பாதுகாப்புப் படை தண்டவாளங்கள் உட்பட ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கும் பணிகளை செய்வார்கள்.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ரயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடந்தால் யாருக்கு தகவல் கொடுப்பீர்கள்?

 

கதிரேசன்: இரண்டு பேருக்கும் தகவல் கொடுப்போம். 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: பிணம் கிடந்த ரயில்வே தண்டவாளத்தில் அடிக்கடி ரயில் வந்து செல்லும் தண்டவாளமா?

 

கதிரேசன்: ஆமாம். 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: பிணம் எங்கு கிடந்தது?

 

கதிரேசன்: காவேரி ரயில் நிலையத்திற்கும், ஆனங்கூர் நிலையத்திற்கும் மத்தியில் இருந்தது.

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: பிணம் கிடந்த இடத்திற்கு நீங்கள் சென்றீர்களா?

 

கதிரேசன்: இல்லை. 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: சி.பி.சி.ஐ.டி போலீஸார் உங்களை எப்போது விசாரித்தார்கள்?

 

கதிரேசன்: 11.11.2015ம் தேதி விசாரித்தார்கள். 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: ராஜன் கொடுத்த புகாரை பார்த்தீர்களா?

 

கதிரேசன்: பார்க்கவில்லை. 

 

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ: சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் புகார் கொடுக்கப்படவில்லை. முதல் முதலில் கிடைத்த தகவல் மறைக்கப்பட்டு பின்னிட்டு வழக்கிற்காக உங்களிடம் புகார் தயாரித்து பெறப்பட்டது?

 

கதிரேசன்: இல்லை. 

 

இதையடுத்து நீதிமன்றம் மாலை 5:07 மணியோடு நிறைவு பெற்றது. நீதிபதி இளவழகன், 'மீண்டும் அக்டோபர் 1ம் தேதி இந்த வழக்கு மேற்கொண்டு விசாரிக்கப்படும்' என்றார்.  


டிரெண்டிங் @ விகடன்