காலையில் விவசாயம், பிறகு பள்ளிப் படிப்பு - அசத்தும் வெங்களத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள்! #CelebrateGovtSchools | This government school students cultivate raddish at their school premise

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (24/09/2018)

கடைசி தொடர்பு:13:20 (24/09/2018)

காலையில் விவசாயம், பிறகு பள்ளிப் படிப்பு - அசத்தும் வெங்களத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள்! #CelebrateGovtSchools

காலையில் வகுப்புக்குள் நுழைந்ததும் போர்டில் சாக்பீஸால் பாடத்தை எழுதுவது, கேள்விகள், பரீட்சை வைப்பது, விடைத்தாள் திருத்துவது என்கிற ஆசிரியராக இல்லாமல் மாணவர்களோடு செடி நடுவது, அவர்களின் மனதை அறிவது என்கிற பயணத்தில் தற்போது தன் வகுப்பு மாணவர்களை முள்ளங்கி அறுவடை செய்ய வைத்திருக்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆசிரியை உதயலட்சுமி. அம்மாவட்டத்தில் உள்ள வெங்களத்தூர் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவர்கள்தாம் முள்ளங்கியை அறுவடை செய்தவர்கள். உதயலட்சுமி பேசினார்.

மாணவர்களுடன் ஆசிரியை உதய லெட்சுமி

``வளரிளம் பருவத்தில்தான் மாணவர்களுக்குப் பெற்றோர், ஆசிரியர் கவனம் அதிகம் தேவை. அந்தப் பருவத்தில் அவங்ககிட்ட உற்சாகமா செயல்படுற ஆர்வத்தையும், வேகத்தையும் முறையாக வளர்க்கணும். வெறும் பாடப்புத்தகங்களோட நிறுத்திடாம அனுபவ அறிவு கிடைக்கிற மாதிரியான செயல்கள்ல மாணவர்களை ஈடுபடுத்தணும்னு நினைச்சேன். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான மனநிலை, குடும்பச் சூழ்நிலையோட இருப்பாங்க. அவங்களை எல்லாம் ஒண்ணா இணைச்சு ஒரு விஷயம் செய்யணும்னு மட்டும் மனசுல தோணுச்சு. என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப தோட்டம் போடலாம்னு நினைச்சேன். என் பசங்க கிட்டேயும் அதையே கேட்டேன். உற்சாகமாகிட்டாங்க'' என்றவர் எப்படி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார் என்பதையும் சேர்த்தே சொன்னார்.

மாணவர்கள்

``தோட்டம்னு முடிவானதும் ஒவ்வொருத்தரோட வீட்ல இருந்து காய்கறிகள் விதைகளைக் கொண்டு வந்தாங்க. பள்ளிக்கூட மைதானத்துல இதுக்குனு ஒரு இடத்தை தலைமையாசிரியையிடம் கேட்டு வாங்கினோம். அதுல அவங்க கையால விதைகளை நட்டாங்க. அவங்க நட்டதுக்கு அவங்கதான் தண்ணீர் ஊத்தணும், பராமரிக்கணும்னு சொல்லிட்டேன். அதனாலேயே தினமும் உற்சாகமா பள்ளிக்கூடம் வர ஆரம்பிச்சாங்க. தினமும் வந்ததும் செடிகளுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டுத்தான் கிளாஸுக்கே வருவாங்க. எல்லா மாணவர்களும், மாணவிகளும் கலந்து வேலை செய்யுறதுனால அதன் ஒற்றுமை படிப்புலேயும் எதிரொலிக்குது. இப்ப முள்ளங்கி நல்லா விளைஞ்சு வந்திருக்கு. அவரைப் பந்தல் கட்டி விட்டிருக்கோம். எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு. தோட்டம் நல்லா செழிச்சு வளர்ந்திருக்கு'' என்று குழந்தையாக குதூகலித்த டீச்சர் மாணவர்களுக்கு டைரி எழுதும் பழக்கத்தை கற்றுக்கொடுத்திருக்கிறார்.

நாட்குறிப்பு

``ஆமாம். அது நல்ல விஷயமே. தினமும் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை அவர்கள் நோட்டில் எழுதி வரச் சொன்னேன். ஒரு மாணவி, எனக்குப் பள்ளிக்கு வர பிடிக்கலை. ஆனா தோட்டத்துக்குத் தண்ணீர் ஊத்த ரொம்பப் பிடிச்சிருக்குனு எழுதியிருக்கா. இது என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி'' என்று வெடித்துச் சிரிக்கிறார் ஆசிரியை உதயலட்சுமி.

உங்கள் முயற்சிகள் விதைகளாகட்டும் டீச்சர்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close