நீலாங்கரை வழக்கு முதல் கருணாஸ் பஞ்சாயத்து வரை - யார் இந்த 'டிபெண்டர்' தாமோதரன்? #VikatanExclusive | Neelankarai issue to Karunas arrest - Who is 'Defender' Damodaran?

வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (25/09/2018)

கடைசி தொடர்பு:20:24 (25/09/2018)

நீலாங்கரை வழக்கு முதல் கருணாஸ் பஞ்சாயத்து வரை - யார் இந்த 'டிபெண்டர்' தாமோதரன்? #VikatanExclusive

நீலாங்கரை வழக்கு முதல் கருணாஸ் பஞ்சாயத்து வரை - யார் இந்த 'டிபெண்டர்' தாமோதரன்? #VikatanExclusive

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி 'முக்குலத்தோர் புலிப்படை' சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில்தான் எம்.எல்.ஏ கருணாஸ் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. எனவே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இடம் கோரியவர்கள் என்ற வகையில், கருணாஸ் கட்சியைச் சேர்ந்த செல்வநாயகம், வழக்கறிஞர் 'டிபெண்டர்' தாமோதரன் மற்றும் அடையாளம் தெரியாத சில நபர்கள் மீதும் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், போலீஸ் அதிகாரிகள் குறித்துப் பேசும்போது, ``காக்கிச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் பார்க்கலாம்'' என்று பேசியிருந்தார். மேலும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருணாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரின் ஆதரவாளர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சிறையில் இருக்கும் கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கின்றனர் போலீஸார். இந்நிலையில், கருணாஸின் இந்தப் பேச்சுக்குப் பின்னால் அவரை இயக்கியவர்கள் யார் யார், அவருக்குப் பக்கபலமாக யாரெல்லாம் இருந்துவருகிறார்கள் என்பதையெல்லாம் போலீஸ் வட்டாரங்கள் கணக்கெடுத்து வருகின்றன.

கருணாஸ்

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சாலிகிராமம் மற்றும் வளசரவாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்று சொல்லப்படும் சிலர், தொடர்ந்து கட்டப் பஞ்சாயத்து செய்துவந்தனர். வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வரும் அனைத்து வழக்குகளையும் தடுத்து நிறுத்தி, இருதரப்புக்கும் இடையே கட்டப் பஞ்சாயத்து செய்துவந்தனர். இதைத் தடுத்த போலீஸ் அதிகாரிகளை சாதி ரீதியாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, காவல் துணை ஆணையர் அரவிந்தன், வளசரவாக்கத்தில் நடந்து வந்த கட்டப் பஞ்சாயத்துகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தினார். இதனால் அந்தப் பகுதியில் கட்டப் பஞ்சாயத்து செய்துவந்தவர்களுக்குப் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு கட்டப் பஞ்சாயத்து செய்தவர்களில் முக்கியமானவர் தாமோதரன். வழக்கறிஞரான இவர் புலிப்படை அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டு கருணாஸோடு நெருக்கமாகியிருக்கிறார். மேலும் 'டிபெண்டர் தாமோதரன்' அடைமொழியோடு தொடர்ந்து கட்டப் பஞ்சாயத்துகளில் இயங்கிவந்தார். இந்நிலையில், டி.சி அரவிந்தனின் நடவடிக்கையால், தங்களது கட்டுப்பாட்டில் இருந்த காவல்நிலையப் பகுதிகளில் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியவில்லை என்ற தகவலை கருணாஸ் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார் தாமோதரன். இதையடுத்து, கருணாஸும் அவரின் முக்கிய நண்பர்களும் ஆலோசனை நடத்தி, ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முக்குலத்தோர் புலிப்படையின் ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் மற்றும் டிபெண்டர் தாமோதரன் ஆகியோர்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றனர். அன்றையக் கூட்டத்தில், அவதூறாகப் பேசிய கருணாஸ் மீது போலீஸ் வழக்கு போட்டதுபோலவே, இடத்தை ஏற்பாடு செய்த இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது. தற்போது, தாமோதரன் தலைமறைவாக இருக்கிறார். தாமோதரன் மீது இன்னும் பல வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டிபெண்டர் தாமோதரன்

சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம்.சி. பகுதியில் இடத்தகராறு காரணமாக தி.மு.க-வைச் சேர்ந்த ரவீந்திரனுக்கும் புலிப்படையைச் சேர்ந்த மணிபாரதிக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ரவீந்திரன் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில், மணிபாரதி மீது புகார் கொடுத்தார். இந்நிலையில், ரவீந்திரனைக் கொலை செய்ய ஸ்ரீகாந்த் ராஜா மற்றும் 'நாய்கடி' குமாரை நியமித்திருக்கிறார் மணிபாரதி. இவருக்கு ஆதரவாக 'டிபெண்டர்' தாமோதரன் செயல்பட்டார். இதில் மணிபாரதி மீது சட்டப்பிரிவு 387-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் புலிப்படையைச் சேர்ந்த சிலர் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தனர். இதன் நீட்சியாகத்தான் வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் ஏற்பாட்டை தாமோதரன் மற்றும் புலிப்படை நிர்வாகிகள் சிலர் முன்னின்று செய்தனர். துணை ஆணையர் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்துவருவதால், தனிப்பட்ட முறையில் அவர் மீது அவதூறு பரப்பியும் வருகின்றனர்.

2012-ம் ஆண்டிலேயே டிபெண்டர் தாமோதரன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீலாங்கரையில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில், தாமோதரன் மீது சட்டப்பிரிவு 307-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐ.பி.எல் போட்டியைக் காண வந்த ரசிகர்களைத் தாக்கியதற்காக 307-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, கே.கே.நகரில் உள்ள மதுபானக்கடையையும் சூறையாடியிருக்கிறார். தற்போது நடந்த ஆர்ப்பாட்டத்திலும் தாமோதரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. தலைமறைவாக இருக்கும் தாமோதரனைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close