வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (26/09/2018)

கடைசி தொடர்பு:19:32 (26/09/2018)

நடிகர் ராஜ்குமார் கடத்தல் முதல் கோபி நீதிமன்ற தீர்ப்பு வரை..! வீரப்பன் வழக்கின் டைம்லைன் #VikatanInfographics

நீதிபதி மணி, நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பை வாசித்தார். ``குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லாததாலும், வீரப்பனுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையிலான தொடர்பை போதிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்காததாலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்" என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நடிகர் ராஜ்குமார் கடத்தல் முதல் கோபி நீதிமன்ற தீர்ப்பு வரை..! வீரப்பன் வழக்கின் டைம்லைன் #VikatanInfographics

18 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பு. கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார், கடத்தல் வழக்கின் முதன்மைக் குற்றவாளி வீரப்பன், கடத்தல் சம்பவத்தின் முக்கியச் சாட்சியான நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் ஆகியோர் இறந்து, ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒன்பது பேரைக் காப்பாற்றியிருக்கிறது இந்தத் தீர்ப்பு. 

ஜூலை 31, 2000. அந்த நாள் தமிழக - கர்நாடக மாநில எல்லை பெரும் பதற்றமான சூழலோடு விடிந்தது. ஈரோடு வந்திருந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அதற்கு முந்தைய நாளான, ஜூலை 30 அன்றின் இரவில், தொட்டகாஜனூரில் இருந்த அவரது பண்ணை வீட்டிலிருந்து கடத்தப்பட்டிருந்தார். 

வீரப்பன், ராஜ்குமார்

அன்றைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகம் விரைந்து அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்தார். இரு மாநிலங்களும் எதிர்வரும் சூழலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கின; இரு மாநில அரசுகள் சார்பாக, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளைச் சந்திக்க `நக்கீரன்' கோபால் அனுப்பப்பட்டார். 

 

வீரப்பன் காவிரி நதி நீர்ப் பிரச்னைக்கான தீர்வு, மைசூர் சிறையில் `தடா' சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அவரது கூட்டாளிகளின் விடுதலை, தமிழக சிறையில் இருந்த அவரது கூட்டாளிகள் ஐவர் விடுதலை, பழங்குடியினர் மீது சிறப்பு ஆயுதப் படையினர் நிகழ்த்திய தாக்குதலை விசாரித்து வந்த சதாசிவம் ஆணையம் மீதான நீதிமன்றத் தடையை நீக்கக் கோரிக்கை, இரு மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் ஊதிய உயர்வு முதலானவற்றைத் தனது கோரிக்கைகளாக வெளியிட்டார். 

`தடா' வழக்கின் கீழ் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்த போதும், உச்ச நீதிமன்றம் விடுதலை மீது தடை விதித்தது. கடத்தப்பட்ட இரண்டு மாதங்களில், நடிகர் ராஜ்குமாரின் உறவினர் நாகப்பா, வீரப்பன் குழுவினரின் பிடியிலிருந்து தப்பி ஈரோடு வந்தடைந்தார். 

வீரப்பன்

இரு மாநில அரசுகளின் சார்பில், வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த பழ. நெடுமாறன், மனித உரிமைப் போராளிகள் பேராசிரியர் கல்விமணி, புதுவை சுகுமாரன் ஆகியோர் அனுப்பப்பட்டனர். முதலில் நடிகர் ராஜ்குமாரின் உறவினர் கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார்.  கடத்தப்பட்டு, 108 நாள்கள் கழித்து, 2000ம் ஆண்டு நவம்பர் 30 அன்று நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். 

தனகோட்டிராம்நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதற்கு 30 கோடி ரூபாய் பணம் கைமாறியதாக, 2002 ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை பிடிப்பதற்கான சிறப்புப்படை முடுக்கி விடப்பட்டது. 2004 ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று வீரப்பன் சிறப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த அவரது கூட்டாளிகள் இருவரும் கொல்லப்பட்டனர். 

கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் 2006 ம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று மரணமடைந்தார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, வழக்கின் முக்கியச் சாட்சியாக இருந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உடல்நலம் குன்றியுள்ளதால், விசாரணையில் பங்கேற்க முடியாது என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. உயர்நீதிமன்றம் அரசு வழக்கறிஞர் ஒருவரைத் தேர்வுசெய்து, பர்வதம்மாளின் உடல்நலம் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி கோரியது. அதன்படி பர்வதம்மாளின் உடல்நலம் குறித்த தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 2017 ம் ஆண்டு மே 31 அன்று, நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் இறந்தார்.     

செப்டம்பர் 25 அன்று கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் நீதிபதி மணி, நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பை வாசித்தார்.கல்விமணி ``குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லாததாலும், வீரப்பனுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையிலான தொடர்பை போதிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்காததாலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்" என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனகோட்டிராம் அவர்களிடம் பேசினோம். ``வழக்கு தொடர்பான ஆவணங்களையும், சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு  எதிராக அமைந்துவிட்டது. தீர்ப்பு நகலுக்காக விண்ணப்பித்துள்ளோம். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு, இரு மாநில அரசுகளிடமும் பேசி, வழக்கு மேல் முறையீடு செய்யப்படும்" என்றார்.   

இந்தத் தீர்ப்பைப் பற்றி, வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் (கல்யாணி) பேசினோம். ``ராஜ்குமார் கடத்தல் சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. காலம் கடந்து வந்திருந்தாலும், அப்பாவிகள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றனர். `பழங்குடி மக்கள் மீது சிறப்புப்படை கட்டவிழ்த்த வன்முறையை விசாரிக்க வேண்டும்' என வீரப்பன் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைகள் எதுவும் தனிப்பட்ட முறையில் இல்லாமல், மனித உரிமை சார்ந்தவையாகவே இருந்தன. இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்