வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (28/09/2018)

கடைசி தொடர்பு:15:38 (01/10/2018)

``ஸ்வச் பாரத்துக்கு ரூ.40,000 கோடி, மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு வெறும் 5 கோடி" - பெஸ்வாடா வில்சன்

``ஸ்வச் பாரத்துக்கு ரூ.40,000 கோடி, மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு வெறும் 5 கோடி

ம்முடைய இயற்கைக் கழிவுகளை சுத்தம் செய்யவே நாமெல்லாம் அருவருப்பு கொள்வோம், சாக்கடைகளைக் கடக்கும்போது மூக்கை மூடிக்கொள்வோம். ஆனால், ஒரு நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் இயற்கைக் கழிவுகள் வந்து சேரும் இடத்தில், `குப்'பென்று மூச்சு விடமுடியாத அளவுக்கு அடிக்கும் நாற்றத்தில், அடி பாதம் முதல் உச்சி வரை கழிவுநீரில் மிதந்துகொண்டு மலங்களை அகற்றும் வேலையில் ஈடுபடும் மக்களைப் பற்றி நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா. அந்த நச்சு நாற்றம் தாங்க முடியாமல் மயங்கி இறந்தவர்களைப் பற்றி என்றாவது நாம் நினைத்திருப்போமா.. செய்திகளில் பார்ப்பதும், கடப்பதும் இயல்பாகிப் போயிருக்கிறது. அரசாங்கமே இதுவரை அனைத்து மாநிலங்களிலும் மலம் அள்ளும் தொழிலாளர்களின் இறப்பு குறித்து புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.

நாடு முழுவதும் உள்ள துப்புரவுப் பணியாளர்களின் நலன்களை உறுதிசெய்ய அவர்களுக்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பு `என்.சி.எஸ்.கே' எனப்படும் `சஃபாய் கரம்சாரிஸ்'களுக்கான தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis). (`சஃபாய் கரம்சாரிஸ்' என்றால் இந்தியில் `துப்பரவுப் பணியாளர்கள்'). என்.சி.எஸ்.கே.வின் சமீபத்திய அறிக்கையின்படி 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரை நச்சு நிறைந்த சாக்கடைகளில் இறங்கி வேலை செய்யும், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் 123 பேர் இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கிறது. அதாவது, கடந்த 600 நாள்களில் மட்டும் 123 கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர் (5 நாள்களுக்கு ஒருவர் வீதம்).

இந்தப் புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 13 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களிலிருந்து கிடைத்த தகவல்களை மட்டுமே தருகிறது. தகவல்கள் கிடைத்த மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து `இது அரைகுறை தகவல்களைத்தான் தந்திருக்கிறது' என என்.சி.எஸ்.கே அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். பெருவாரியான ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே இந்தப் புள்ளிவிவரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாநிலங்களின் வட்டார மொழிகளில் வரும் செய்தித்தாள்களிலிருந்து இதுகுறித்தான செய்திகளைச் சேகரித்தால், இறந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு இருக்கும் என்று கணிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மத்திய அரசு, மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க 18 மாநிலங்களிலிருந்து 170 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்தது. அவற்றில் மத்திய அரசின் குழுக்கள் மூலம் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கெடுப்பு செய்துள்ளது. இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஜூன் மாத முடிவில் முடிந்திருக்கவேண்டிய இந்தக் கணக்கெடுப்பு தாமதமாகிவிட்டதாக மத்திய அரசின் குழுக்கள் தெரிவித்துள்ளன. 

பெஸ்வாடா வில்சன்

இதுவரை இந்த மாதம் மட்டும் கழிவுநீர் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய இறங்கிய 11 கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள், போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததினால் இறந்திருக்கிறார்கள். கடந்த வாரம் மேற்கு டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற 5 பேர் ஒரே நேரத்தில் இறந்துள்ளனர். இதுபற்றி மலம் அள்ளும் தொழிலாளியான கபில் குமார் டெல்லி ஊடகங்களிடம் கூறுகையில், ``சுத்திகரிப்பு தொட்டிக்குள் இறங்கிய உடனேயே உமேஷ் மயங்கி விழுந்துவிட்டான். அவனைத் தொடர்ந்து வேறொருவர் இறங்கினார். அவரும் மயங்கி விழுந்தார், பின்பு மீண்டும் ஒருவர் பின் ஒருவராக 3 பேர் இறங்கினார்கள். அனைவரும் உள்ளேயே மயங்கி விழுந்தனர்" என்றார்.

சட்டப்படி, இவ்வாறு மலம் அள்ளும் தொழிலாளர்கள் இறந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், என்.சி.எஸ்.கே.வின் புள்ளிவிவரத்தின் படி மொத்தம் இறந்த 123 பேரில் 70 பேருக்கு மட்டுமே இழப்பீடு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறது. துப்புரவுத் தொழிலாளர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட `சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்' என்கிற தனியார் அமைப்பின் நிறுவனரான பெஸ்வாடா வில்சன் என்பவர் 170 மாவட்டங்களில் நடந்த கணக்கெடுப்பில் அரசுக்கு உதவியாக இருந்தார். கணக்கெடுப்பை 300 மாவட்டங்களில் நடத்துமாறு பலமுறை அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தும், அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை என்று கூறியுள்ளார். 

இது குறித்து பெஸ்வாடா வில்சன் நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில்... "எங்களிடம் உள்ள ஆதாரத்தின்படி கடந்த ஜனவரி 2017 முதல் தற்போது வரை 221 மலம் அள்ளும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். மலம் அள்ளும் தொழிலாளிகளின் மறுவாழ்வுக்கு நிதி கொடுக்க அரசிடம் பணம் இருக்கிறது. ஆனாலும், பிஜேபி அரசு வந்த பின்னர் அதிகபட்சமாகக் 5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2012-2013 மற்றும் 2013-2014 ஆகிய பட்ஜெட்டின் போது 570 கோடி வரை மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மறுவாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். 

ஆனால், பிஜேபி அரசாங்கம் அந்த நிதியையெல்லாம் `ஸ்வச் பாரத்' என்ற பெயரில் கழிப்பறைகள் கட்ட ஒதுக்கிவிட்டது. கடந்த 4 வருடங்களில் `ஸ்வச் பாரத்' திட்டத்துக்காக கிராமங்களில் 33,638 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். நகர்ப்புறத்தில் கிட்டதட்ட ரூ.7000 கோடி செலவு செய்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு ரூ.5 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்தனர். அதையும் இன்னும் அவர்கள் கொடுக்கவில்லை. செலவழிக்கப்படாத தொகையாகக் கணக்குக் காண்பிக்கிறார்கள். மறுவாழ்வுக்குப் பணம் கொடுத்தால், அவர்கள் வேறு தொழிலுக்குச் செல்வதற்கு உதவியாக இருக்கும். ஆட்டோ வாங்கியோ, சின்னச் சின்ன கடைகள் ஆரம்பித்தோ பிழைத்துக்கொள்வார்கள். அதற்கும் வழி இல்லாமல் செய்துவிடுகிறது இந்த அரசு. அதனால், வேறு தொழிலுக்குச் செல்ல முடியாமல் அவர்கள் அதிலேயே ஈடுபட்டுச் சாக நேரிடுகிறது. மத்திய அரசு, மாநில அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசும் கடந்த 5 வருடங்களாக மலம் அள்ளும் தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இதுவரை கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1760 பேர் இறந்துள்ளனர், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 226 பேர் இறந்ததற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது" என்றார்.

படங்கள்: செந்தில்


டிரெண்டிங் @ விகடன்