வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (30/09/2018)

கடைசி தொடர்பு:16:26 (30/09/2018)

"7 பேரை விடுவிப்பதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது?" வழக்கறிஞர்

மிழக அமைச்சரவைக் கூட்டம், செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்று, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டு நான்கு வாரங்கள் ஆன நிலையிலும் அதன்மீது முடிவு எதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த மௌனம் அரசியல் களத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஏழுபேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு புகழேந்தி வழக்கறிஞர் , ராஜீவ் காந்தி கொலை வழக்குஎதிரானது என்றும், பாதிக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்துப் பேசிய நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, "அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகளை நன்னடத்தையின் காரணமாக ஆளுநரின் கையெழுத்தோடு தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேரும் 28 ஆண்டுகளாக  சிறையில் இருந்து வருகிறார்கள். இதுவரை சிறைவிதிகளில் சொல்லப்படாத வகையில் இவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க, தமிழக அரசு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், அதற்கு முன்னுரிமை அளித்து உடனடியாக அவர்களை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், ஆளுநர் ஏனோ காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்தநிலையில் ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களின் உறவினர்கள், ஆளுநரைச் சந்தித்து, ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாது என மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை ஆளுநர் வாங்கியிருக்கக் கூடாது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மேலும், ஒரு வழக்கு விசாரணை முடிந்து, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்த பின்னர், எதிர்த்தரப்பினர் அவர்களை விடுவிக்கக் கூடாது என்று சொல்வதற்குச் சட்டத்தில் இடமில்லை. குறிப்பாக சிறைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் மட்டுமே முக்கிய ரோலாக இருக்கும்போது எதிர்த்தரப்பினர் தலையிடுவதற்கு வழிவகையில்லை. அதற்கான முகாந்திரமும் கிடையாது.

'ஒரு குற்றத்திற்காக குற்றவாளியை ஒருமுறைதான் தண்டிக்க வேண்டும்' எனச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவைப் பெரிதாக எடுக்காமல் அவற்றை ரத்துசெய்து விட்டு, ஏழுபேரையும் விடுவிக்கவேண்டும். தமிழக அரசு இயற்றியுள்ள தீர்மானத்தில் காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஆளுநர் மேலும் காலதாமதம் செய்யக் கூடாது. இது பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்புடையது. குறிப்பாக ஒரு தூக்குத் தண்டனைக் கைதியின் மனுவை நிறுத்தி வைப்பது என்பது வேறு. ஆனால், விடுதலை பெற வேண்டியவரின் மனு மீதான முடிவு என்பது வேறு. எனவே, உடனடியாக ஆளுநர் இதில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.

சிவக்குமார் வழக்கறிஞர் பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார், "பேரறிவாளன் சிறையில் இருப்பதற்கு முக்கியக் காரணம், அவர் கொடுத்த வாக்குமூலம்தான். அந்த வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் தவறாகப் பதிவுசெய்ததன் விளைவாகவே அவர் சிறையில் இருக்கிறார். இதனை, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தியாகராஜனே பதிவுசெய்துள்ளார். அந்தப் பிரமாணப் பத்திரத்தில், 'ராஜீவ் காந்தி கொல்லப்படுவது பேரறிவாளனுக்குத் தெரியாது' என்பதை நீதிமன்றத்திலேயே தெரிவித்துள்ளார்.  அதேபோன்று, பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், ஓய்வுபெற்றபின் அந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளார். 'இந்தத் தீர்ப்பு வழங்கும்போது எங்களுக்குக் கடுமையான அழுத்தம் இருந்தது' என்று கூறியுள்ளார். மேலும் அவர், அது ஒரு பிழையான தீர்ப்பு என்றும், அந்தப் பிழையைச் சரிசெய்ய வேண்டியது இந்தச் சமூகத்தின் பொறுப்பு' என்றும் கூறியிருந்தார். இதுபோன்ற சட்டரீதியிலான தகவல்களைச் சுட்டிக்காட்டி அவரை விடுதலை செய்வதில் சிக்கல் இல்லை என ஆளுநரிடம் எடுத்துரைத்திருந்தோம். அனைத்தையும் முழுமையாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். தற்போது, நாள்கள் கடந்து கொண்டே போகிறது. இந்த விவகாரத்தில் சிறையில் உள்ளவர்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக என்ன முடிவு என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் அவர்கள் அனுபவித்து வரும் வேதனை  மிகக் கொடுமையானது. எனவே, அவர்களை விடுவிப்பதில் சிக்கல் ஏதும் இல்லாததால் விரைந்து விடுதலை செய்ய வேண்டும். அக்டோபர் 2-ம் தேதி  மகாத்மா காந்தி பிறந்த நாள் அன்று விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.