காந்தி தேசத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்.. அதிர வைக்கும் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics | Increase of alcohol consumption in India, reveals statistics

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (02/10/2018)

கடைசி தொடர்பு:11:45 (02/10/2018)

காந்தி தேசத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்.. அதிர வைக்கும் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics

இந்தியாவில் மதுப்பழக்கம் உடையவர்கள் மொத்த மக்கள் தொகையில், 9.4% பேர் ஆண்கள்; 1.7% பேர் பெண்கள். இவர்களுள் மதுப்பழக்கம் உடைய பதின்பருவத்தினர் ஆண்கள் 60%; பெண்கள் 25% ஆவர்.

காந்தி தேசத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்.. அதிர வைக்கும் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics

காந்தியின் பிறந்தநாள் இந்தியா முழுவதும் மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியா தன் கரன்சியில் மது அருந்துதலைக் கடுமையாக எதிர்த்த காந்தியின் படத்தை அச்சிட்டுக் கொண்டே, மறுபுறம் சத்தமில்லாமல் மதுவின் மூலம் வரும் வருமானம் ஒரு சாதனையாகவே சொல்லப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 2005ஆ ம் ஆண்டுக்கும், 2016ஆம் ஆண்டுக்கும்  இடைப்பட்ட காலத்தில் இந்தியர்கள் சராசரியாக மது அருந்தும் அளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. உலக சுகாதார மையம் வெளியிட்ட 'மதுப்பழக்கம் மற்றும்  சுகாதாரம் பற்றிய உலக அறிக்கை 2018' என்ற ஆவணத்தில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

காந்தி

இந்தியாவில் 2005ஆம் ஆண்டு சராசரியாக, இந்தியர்கள் 2.4 லிட்டர் அளவுக்கு மது அருந்தியுள்ளனர்; இந்த அளவு 2010ஆம் ஆண்டு 4.3 லிட்டர் ஆகி, 2016ஆம் ஆண்டில் இரண்டு மடங்குக்கும் மேல், 5.7 லிட்டர் ஆகப் பதிவாகியுள்ளது. இப்போது உட்கொள்வது போல, இந்தியர்கள் தொடர்ந்து மது அருந்தினால், 2025ஆம் ஆண்டு இந்த அளவு 7.9 லிட்டராக மாறும் எனக் கூறப்படுகிறது. 

இந்த ஆய்வு எடுக்கப்பட்டிருக்கும் 2016ஆம் ஆண்டில், இந்தியாவில் மட்டும் ஆண்கள் சராசரியாக 18 லிட்டர் மது அருந்தியுள்ளனர்; பெண்கள் சராசரியாக 6.6 லிட்டர் மது அருந்தியுள்ளனர். 15 முதல் 19 வயது வரையுள்ள பதின்பருவத்தினரிடையே மதுப்பழக்கம் பெருகி வருவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் மதுப்பழக்கம் உடையவர்கள் மொத்த மக்கள் தொகையில், 9.4% பேர் ஆண்கள்; 1.7% பேர் பெண்கள். இவர்களுள் மதுப்பழக்கம் உடைய பதின்பருவத்தினர் ஆண்கள் 60%; பெண்கள் 25% ஆவர். இந்திய மக்களில் 39% ஆண்களும், 69% பெண்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மதுப்பழக்கத்தை அறவே தவிர்த்து வருகின்றனர். அதே போல, முன்பிருந்த மதுப்பழக்கத்தைக் கைவிடுவதில் பெண்களே ஆண்களை விட முன்னிலையில் இருக்கின்றனர். 

மதுப்பழக்கம்

மதுப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் சுருக்கம் 2016ஆம் ஆண்டு, 1.40 லட்சம் மக்களை உயிரிழக்கச் செய்திருக்கிறது. மது அருந்தி வாகனங்களில் சென்று விபத்து ஏற்படுத்தியவர்களால், 93 ஆயிரம் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பழக்கத்தினால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தவர்கள் 31 ஆயிரம் பேர். 

2016ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் மதுப்பழக்கத்தால் மட்டும் ஏறத்தாழ 3 லட்ச மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை காசநோய், நீரிழிவு, எய்ட்ஸ் முதலான நோய்களால் இருப்பவர்களை விட அதிகம்.

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கை உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே மதுப்பழக்கம் பெருகி வருவதைச் சுட்டிக்காட்டி, ஐந்து அம்சத் திட்டத்தை வகுத்து, உறுப்பு நாடுகளைப் பின்பற்றக் கூறி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மதுவின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதைக் குறைக்க விதிமுறைகளைக் கடுமையாக்குவது, மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மையங்கள் அமைப்பது, மதுப்பொருட்கள் பற்றிய விளம்பரங்களை முறைப்படுத்துவது, மதுவின் மீதான விலையையும், வரியையும் அதிகரிக்கச் செய்வது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றைப் பரிந்துரைத்துள்ளது.   

 

'மது அருந்துதல் என்பது தற்கொலைக்கு சமம்' என்றார் காந்தி. காந்தியின் மற்ற கொள்கைகளை ஏற்கலாம்; மறுக்கலாம்; விவாதிக்கலாம். ஆனால் காந்தியின் 'மதுவிலக்கு' கொள்கையைப் பின்பற்றுவது அவசியம். அதுவே அவருக்குச் செய்யும் மரியாதையும் ஆகும்.  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close