வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (02/10/2018)

கடைசி தொடர்பு:18:44 (02/10/2018)

குறையும் எடை... அதிகரித்த விலை... வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டரில் திருட்டு நடக்கிறதா?

சிலிண்டர் விலை உயர்வு

 வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை 57 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,சிலிண்டர்கள்  திருட்டு நடப்பதாகவும், எடை குறைவான சிலிண்டர்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை கடந்த 30 ம் தேதி வரை 838 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று (1.10.2018) முதல் 891 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதே போன்று மானியத்துடன் கூடிய சிலிண்டர் 488.01 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 491 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 3 ரூபாய் 01 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை ஏற்றம் ஒரு பக்கம் உள்ள நிலையில், தற்போது எடை குறைந்த சிலிண்டர் வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக இல்லத்தரசியான ஆதிரையிடம் பேசியபோது, ``ஒரு சிலிண்டரின் மீது 57 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சுமையானது. 

ஆதிரை. இல்லதரசி குறிப்பாக என்னைப் போன்ற நடுத்தர இல்லத்தரசிகளுக்குக் கூடுதல் சுமை. இந்த விலை ஏற்றத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விலை ஏற்றம் தலைவலியாக இருக்கிற நிலையில், மற்றொருபுறம்  எடை குறைந்து சிலிண்டர்கள் வருவதாகச் சொல்கிறார்கள். எனக்கு அப்படியான பிரச்னை ஏற்படவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி இப்படியான பாதிப்பை அனுபவித்து வருவதாகக் கூறினார். இன்று அந்தப் பெண்மணி இப்படியான பாதிப்பை எதிர் கொண்டு வருகிறார். நாளை எனக்கும் இதே போன்று எடை குறைந்த சிலிண்டர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இது போன்ற முறைகேடுகளை தடுத்து முழுமையான விலையுடன் கூடிய சிலிண்டரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 இது தொடர்பாகப் பேசிய சிலிண்டர் ஏஜென்சியின் உரிமையாளர் ஒருவர் ``இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்ற  நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் சிலிண்டர்களில் எடை குறைவதற்கான வாய்ப்பே இல்லை. மிகவும் பாதுகாப்பான சீல்களோடு தான் இறக்குமதியாகிறது. ஆனால் சிலிண்டர்கள் வழங்கும் டீலர்கள் இப்படியான முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்றால், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விதிமுறைப்படி ஒரு சிலண்டரை வழங்கும் போது எடை செக்கிங் கொண்டு பரிசோதித்து நுகவோருக்குத் தர வேண்டும். அப்படியான முறையை அனைத்து டீலர்களும் பயன்படுத்தும் முறையை மிகத் தீவிரமாக  அமல்படுத்த வேண்டும். அவ்வாறு முறையாகப் பயன்படுத்துகிறார்களா, என்பதைக் கண்காணிக்க அரசாங்கம் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும் "என்றார்.

 இளம்பிறை இல்லத்தரசி இது குறித்துப் பேசிய இல்லத்தரிசியுமான இளம்பிறை, ``நான் நேரடியாக இது போன்ற பாதிப்பில் சிக்கவில்லை. ஆனால் ஏன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பல பெண்கள் சிலிண்டர் குறைந்து வருவதாகக் குறை கூறினார்கள். குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தினர் 3 மாதம் பயன்படுத்திய சிலிண்டர் தற்போது இரண்டு மாதங்களுக்குள் முடிந்து போனதாகக் குறை சொன்னார்கள். அப்போது சிலிண்டர் எடுத்து வரும் அந்தத்  தொழிலாளிகள் மீதும் அவர்கள் குற்றச்சாட்டை வைத்தனர். இதில் டீலர்கள் மீதும் தவறு உள்ளது. அது தொடர்பாக எங்களுடைய பகுதியில் உள்ள டீலருக்கு மனு ஒன்றையும் எழுதியிருந்தேன். ஆனால் அந்த மனு போய் சேர்ந்ததா என்பதுதான் தெரியவில்லை. இப்படியான சிலிண்டர் திருட்டைத் தடுக்க வேண்டும் என்றால், அரசின் விதிமுறைப்படி எடைபோட்டு சிலிண்டரை வாங்க வேண்டும். அந்த முறையை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். இப்படியான முறைகேடுகளை செய்யும் டீலர்களைக் கண்டறிந்து அவர்களுடைய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்றார் 

   இது குறித்துப் பேசிய சிலிண்டர் சப்ளையர், ``சிலிண்டர் என்று சொல்லப்படும் ஒரு உருளையில் உள்ள எரிவாயுவின் மொத்த 14 கிலோ. அதில் காலி சிலிண்டரையும் சேர்த்தால் மொத்தம் 30 கிலோவிலிருந்து 35 கிலோ வரை இருக்கும். இதில் குறைவான எடையுடன் கூடிய சிலிண்டர்  வருவதாகச் சொல்லும் புகார் தவறானது. நுகர்வோர்கள் அனைவரும் ஆன்லைனில் உள்ள நிலையில், முறைகேடு செய்வதற்கான வாய்ப்பில்லை. சிலிண்டர் பதிவாகும் போதும் அது டெலிவரி ஆகும்போதும் குறிப்பிட்ட நபருக்குக் குறுஞ்செய்தி சென்றுவிடுகிறது. அதனால் சிலிண்டர் முறை கேடு நடக்கவில்லை. மாறாக பொது மக்கள் தான் தங்களுடைய சிலிண்டர்கள் தீர்வதற்கு முன்பாக வீணாகிவிடும் எனக் கருதி பதிவு செய்து வாங்கி அதனை பிளாக்கில் கடைகளுக்கும், தனி நபர்களுக்கும் விற்று விடுகிறார்கள் " என்றார் . 

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை.